தேக்கடி படகுத்துறையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் அத்துமீறல் படகு வடிவில் ஸ்நாக்ஸ் பார், வன ஊழியர்களுக்கு ஓய்வறை: கேரள அரசு மீது பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க முடிவு

கூடலூர்: தேக்கடி படகுத்துறையில் விதிமுறைகளை மீறி கேரள வனத்துறை ஊழியர்களுக்கு ஓய்வறை, ஸ்நாக்ஸ் பார் அமைத்துள்ளது. கொரோனா காலத்தில் மேற்கொண்ட இப்பணிகள் குறித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் அளிக்க தன்னார்வலர்கள் முடிவு செய்துள்ளனர். பெரியாறு வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வனச்சட்டம், தேசிய புலிகள் காப்பக ஆணையம், மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் அனுமதி பெறவேண்டும். பெரியாறு அணைக்கு தரைவழி மின்சாரம் கொண்டு செல்ல தமிழக அரசு கடந்த 2000ல் அனுமதி கேட்டபோது, பலமுறை ஆய்வு நடத்தி, 2011ல் அனுமதி வழங்கினர்.

அதன்பின் 2014ல் இப்பணிக்கு அனுமதிக்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் உயர்நிலைக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தது. கேரள வனத்துறை அனுமதி கொடுக்காததால், பெரியாறு அணைக்கு மின்சாரம் கொண்டு செல்ல 20 ஆண்டுகள் தமிழகம் காத்திருந்தது. இதேபோல, பெரியாறு அணை நீர்தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் 2014ல் கார் பார்க்கிங் கட்டுமானப் பணி தொடங்கியபோது, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் அளித்த புகாரை தொடர்ந்து 2017ல் கட்டிடங்கள் இல்லாமல் வாகன நிறுத்துமிடம் அமைக்க உத்தரவு பிறப்பித்தது. அதே ஆண்டில் பேபி அணையை பலப்படுத்தி, பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், வனச்சட்டத்தை காரணம் காட்டி, பேபி அணையை பலப்படுத்த இடையூறாக இருக்கும் 23 மரங்களை வெட்டுவதற்கு, கேரள வனத்துறை அனுமதி தராமல் உள்ளது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் வனச்சட்டம், தேசிய புலிகள் காப்பக ஆணைய வழிமுறை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவைகளின் அனுமதி இல்லாமல், புலிகள் சரணாலயப் பகுதியான தேக்கடி படகுத்துறை அருகே, படகு வடிவில் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய ஸ்நாக்ஸ் பார், வனத்துறை ஊழியர்கள் ஓய்வறையை கேரள வனத்துறை கட்டியுள்ளது. இதற்காக, அப்பகுதியில் பல மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, தமிழக அரசோ கண்டுகொள்ளவில்லை என தன்னார்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். விரைவில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் கொடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: