மின் விபத்தை தடுப்பது எப்படி? ஊழியர்களுக்கு வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: மின் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் விநியோக அமைப்புகளில் உள்ள பழுதான மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து சரிசெய்திட வேண்டும் என மின்வாரியம் ஊழியர்களிடத்தில் அறிவுறுத்தியுள்ளது.  இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு ஏற்படும் மின்விபத்துக்களை தவிர்க்க விநியோக அமைப்புகளில் உள்ள பழுதான மின்கம்பங்கள், சாய்வான மின்கம்பங்கள், அதி தொழ்வுள்ள மின்கம்பிகள், அலுமினியம்  மற்றும் காப்பர் மின்கம்பிகள், பழுதான இழுவை கம்பிகள் போன்றவற்றை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். குறிப்பாக மின் விநியோக அமைப்புகளில் பெரும்பாலான கம்பங்களில் நில இணைப்பு செய்யப்பட்டுள்ளது. சில மின்கம்பங்களில் நில  இணைப்பு கம்பி பூமியுடன் தொடர்ப்பு இல்லாமல் அறுந்து தொங்குவது கண்டறியப்பட்டால், உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

மின்கம்பங்கள் மாற்றும்போதும், புதிய மின்கம்பங்கள் அமைக்கும்போதும் நிலஇணைப்பு சுருள்களை சரியாக அமைக்க வேண்டும். இதன்மூலம் இந்த கம்பிகள் கட் ஆகி தொங்குவதை தவிர்க்கலாம். பண்டக சாலைகளில் உள்ள நில இணைப்பு  சுருள் கம்பிகளை எடுத்து உபயோகப்படுத்திக்கொள்ளலாம். புதிய மின்கம்பிகள் அமைக்கும் போதும், பழைய மின்கம்பிகளை மாற்றும்ேபாதும் தவறாமல் ப-ஜம்பர் அமைத்து இணைப்பு கொடுக்க வேண்டும். மேலும் ப-ஜம்பர் அமைப்பதனால்  ஏற்படும் பயன்கள் பற்றி அனைத்து பணியாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தாழ்வழுத்த மின்பாதைகளில் பெரும்பாலான இடங்களில் எல்டி மெட்டல் பார்ட்ஸ் பொருத்தாமல் ஜிஐ கம்பி மூலம் மின்கம்பிகள் பிடிக்கப்பட்டுள்ளது.  இவை அனைத்தையும் மாற்றம் செய்வதோடு, பணியாளர்களுக்கு அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மின்மாற்றிகளில் ஏபி சுவிட்சுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது செக்நட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லாத இடங்களில் அவற்றை அமைக்க வேண்டும். மின்விபத்துக்களை தவிர்க்க இந்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: