வீடுகளில் விரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கண்டித்து விவிஜபி உறவினர் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை: திருக்கழுக்குன்றம் அருகே பரபரப்பு

சென்னை: திருக்கழுக்குன்றம் அருகே வீடுகளில் விரிசல், விவசாய நிலங்களில் படியும் பவுடர் என பல்வேறு பிரச்னைகளை கண்டித்து, விவிஐபியின் உறவினர் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் கருமாரப்பாக்கம், குண்ணவாக்கம் ஆகிய இரு கிராம எல்லைகளை இணைக்கும் இடத்தில் ஒரு கல் குவாரி உள்ளது. இந்த குவாரியை 4 ஆண்டுகளுக்கு முன்பு விவிஐபியின் உறவினர் ஒருவர் இந்த குவாரியை  வாங்கி நடத்தி வருகிறாராம். விதிகளுக்கு மாறாக பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வெடிவைத்து தகர்த்து அந்தப் பாறைகளில் இருந்து ஜல்லி மற்றும்  எம்சாண்ட் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. மேலும் வெடி வைத்து தகர்ப்பதால்  அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. வீட்டினுள் தூசும் தும்புமாக கிளம்புவதால் மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு நோய்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, குவாரியை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி

அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ குவாரியில் தொடர்ச்சியாக இரவு மற்றும் பகல் நேரங்களில் வெடி வைத்து பாறையை வெடி வைத்து தகர்க்கும்போது வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டு சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. இந்த சத்தத்தால்  தூங்க முடிவதில்லை. தூசியால் மூச்சு திணறல் ஏற்படுவதுடன், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. பல டன் எடை கொண்ட லாரிகளால் சாலைகள் சேதமடைந்துள்ளன.  குவாரியின் பவுடர் படிவதால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாமல் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை கண்டுகொள்ள வேண்டிய அதிகாரிகளுக்கு குவாரி மூலம் தேவையானவைகள் செய்யப்படுவதால் அதிகாரிகள் விதிமீறல்களை  கண்டு கொள்வதில்லை. மேலும், விவிஐபியின் உறவினர் என்பதால் பெரியளவில் யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குவாரியை உடனே மூட வேண்டும்’ என்றனர்.

Related Stories: