விழுப்புரம் அருகே சுடுகாடு, குடிநீர் வசதிகேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சுடுகாடு மற்றும் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுவை சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் பணங்குப்பம் காலனியில், ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே, அப்பகுதியில் நீண்டகாலமாக சுடுகாடு வசதி இல்லாததால் பக்கத்து ஊருக்கு சொந்தமான சுடுகாட்டை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தங்களுக்கு தனியாக சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அக்கிராமத்தில் ஒரே ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மட்டுமே உள்ளது. இது 1500 மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.

தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது எனக் கோரியும், கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து வீடுகளுக்கு குடிநீர் சப்ளை வழங்கிடவும், கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் இன்று காலை குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நீடித்த நிலையில்,ஆவேசமடைந்த கிராம மக்கள் விழுப்புரம் - புதுவை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முதலமைச்சர் இன்று வர உள்ளதாகவும், இதனால் உங்களது போராட்டத்தை வேறு ஒரு நாள் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அதிகாரிகள் நேரில் வந்து பேசித் தீர்த்து தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் விழுப்புரம் -புதுவை சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: