வீட்டுக்குள்ள பாம்பு வந்துருச்சா... ஆள் இல்ல... பூட்டிட்டு பத்திரமா வெளியே நில்லுங்க..... தீயணைப்புத்துறை அலட்சியத்தால் மக்கள் அதிருப்தி

தேனி: தேனியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க தீயணைப்புத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் ‘எதிர்முனையில் பேசிய அலுவவர், வீட்டுக்குள்ள பாம்பு வந்துருச்சா... ஆள் இல்ல... வீட்டை பூட்டிட்டு பத்திரமா வெளியே நில்லுங்க... 1 மணி நேரமாவது ஆகும்’ என அலட்சியமாக பதிலளித்தார். இதனால் தீயணைப்பு துறை மீது தேனி கேஆர்ஆர் குடியிருப்புவாசிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தேனி கேஆர்ஆர் நகர் குடியிருப்பு பகுதி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில், இங்குள்ள 13ம் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்குள் பெரிய அளவிலான பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை கண்டதும் அங்கு குடியிருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிக்கு ஓடி வந்தனர். பாம்பு குறித்து அப்பகுதிமக்கள் தீயணைப்புத்துறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் எதிர்முனையில் பேசிய அலுவலர் ஒருவர், ‘‘என்னாது வீட்டிற்குள் பாம்பு புகுந்துருச்சா... எங்க கிட்ட ஆள் இல்ல... ஆள் வர இன்னும் 1 மணி நேரத்திற்கு மேலாகும். நீங்க வீட்டை பூட்டிட்டு பத்திரமா வெளியே நில்லுங்க...ஆள் வந்ததும் வர்றோம்’’ என பதிலளித்தார். பாம்பு புகுந்த போதே மணி மாலை ஐந்தரை ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்தில் இருட்டி விடும். அதன் பின்னர் பாம்பை பிடிக்க முடியாது. அதற்குள் ஜன்னல் வழியாக யார் வீட்டிற்குள் நுழைய போகிறதோ என்ற அச்சத்தில் அப்பகுதிமக்கள் இருந்தனர். இதனையடுத்து வனத்துறையினருக்கு அப்பகுதிமக்கள் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வன அலுவலர் ஒருவர், வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடிக்க முயன்றார். ஆனால் அங்கிருந்து வெளியேறிய அந்த பாம்பு, வரிசையாக இருந்த வீடுகளுக்குள் புகுந்து போக்கு காட்டி விட்டு, இறுதியாக அப்பகுதியில் உள்ள புதருக்குள் நுழைந்து மறைந்து கொண்டது. இருப்பினும் பாம்பை துரத்தி சென்ற வனத்துறை அலுவலர்கள், புதரை அகற்றி பாம்பை பிடித்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் பாம்பை பத்திரமாக விடுவித்தனர். பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவுவதே தீயணைப்புத்துறையின் பணியாகும். ஆனால் தீயணைப்புத்துறை அலுவலரின் அலட்சிய பதிலால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

Related Stories: