2020ல் நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் தற்போது வரை இழப்பீடு தராமல் அலைக்கழிப்பு!: இறந்தோரின் குடும்பத்தினர் வேதனை..!!

விருதுநகர்: 2020ம் ஆண்டு நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தற்போது வரை இழப்பீட்டு தொகை பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செயல்பட்டு வந்த ராஜம்மாள் பட்டாசு தொழிற்சாலையில் 2020ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளர் கணேசன் என்பவரிடம் இருந்து பெறப்பட்ட இழப்பீட்டு தொகையை வருவாய்த்துறையினர் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் கணேசன் அளித்த காசோலையில் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிட்டனர். தொடர்ந்து, ஆலை உரிமையாளர் வழங்கியது போலி காசோலை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒரு வருடமாக இழப்பீடு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆலை உரிமையாளரின் காசோலை திரும்பிவிட்டதை அடுத்து தற்போது பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தங்களுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: