மியான்மரில் துப்பாக்கிச்சூடு 2 போராட்டக்காரர்கள் பலி: ராணுவம் மீண்டும் வெறிச்செயல்

மண்டலே: மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். மியான்மரில் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி, கடந்த 1ம் தேதி ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்த ராணுவம், புரட்சியின் மூலமாக ஆட்சியையும் கைப்பற்றியது. இதை எதிர்த்து ராணுவத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

கடந்த வாரம் தலைநகர் நேபிடாவில் நடந்த போராட்டத்தின் போது, பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளம்பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்தது. கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதை தொடர்ந்து, மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளது. மியான்மரின் 2வது மிகப் பெரிய நகரான மண்டலேவில் நேற்று போராட்டம் நடந்தது. இதனைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் தடியடி நடத்தினர்.

கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அப்போதும் மக்கள் கலைந்து செல்லாததால், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார். மார்பில் குண்டு துளைத்த மற்றொருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், 5 பேர் காயமடைந்தனர். இதனால், போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இதன்மூலம், இந்த போராட்டங்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: