அமெரிக்காவில் பட்ஜெட் குழு தலைவராக இந்திய பெண்ணை தேர்வு செய்வதில் திடீர் சிக்கல்: பைடன் விருப்பத்தை மீறி ஆளும்கட்சி எம்பி.யே எதிர்ப்பு

வாஷிங்டன், பிப். 21: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சி நிர்வாகத்தில் பட்ஜெட் குழு  தலைவராக இந்திய வம்சாவளி பெண்ணான நீரா டாண்டனை தேர்வு செய்வதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து அவரது ஆட்சி நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிகளுக்கு முக்கிய பல பொறுப்புகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குநரான இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா டாண்டனை (50) நியமிக்க பைடன் பரிந்துரைத்தார். இவர், ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் ஆலோசகர் ஆவார். மேலும், பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் `தி சென்டர் பார் அமெரிக்கன் புராகிரஸ்’ என்கிற அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.நீரா டாண்டனை பைடன் பரிந்துரைத்ததுமே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. காரணம், செனட் உறுப்பினர்கள் பலரை டாண்டன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதனால், பைடனின் ஆளும் ஜனநாயக கட்சியிலேயே டாண்டனுக்கு எதிர்ப்புகள் உள்ளன. இந்நிலையில், முதல் முறையாக  ஜனநாயக கட்சியின் செனட் எம்பி.யான ஜோ மன்சின், டாண்டனுக்கு எதிராக வாக்களிப்பதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். ‘பாரபட்சமான கருத்துக்களை கூறியதற்காக டாண்டனை ஆதரிக்க மாட்டேன்,’ என மன்சின் கூறியதோடு, ஜனநாயக கட்சி செனட் எம்பி.க்கள் பலரும் டாண்டனை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். வரும் 24ம் தேதி டாண்டன் நியமனம் மீதான வாக்கெடுப்பு நடக்கிறது. 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் அவையில், குடியரசு, ஜனநாயக கட்சிக்கு தலா 50 எம்பி.க்கள்  உள்ளனர். இதனால், குறைந்தபட்சம் ஒரு குடியரசு கட்சி எம்பி.யின் வாக்காவது டாண்டனின் நியமனத்துக்கு கூடுதலாக தேவைப்படுகிறது.இப்படி இருக்கையில், ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு எம்பி.யே, டாண்டனுக்கு ஓட்டு போட மாட்டேன் என்று கூறியிருப்பது டாண்டனுக்கு மட்டுமின்றி, அதிபர் பைடனுக்கும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை வாக்கெடுப்பில் போதிய ஓட்டுகள் டாண்டனுக்கு கிடைக்காமல் போனால், அதிபர் பைடன் பரிந்துரைத்து தோல்வியை சந்தித்த முதல் நபர் என்ற அவப்பெயரை பெற வேண்டியிருக்கும்.

ஆப்கனில் இருந்து வீரர்கள் வாபசா?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் 5 ஆயிரம் பேர் இருந்தனர். அவர்களை வாபஸ் பெறுவதாக, கடந்த முறை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக, ஆப்கன் அரசுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, ஏற்கனவே 2,500 அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 2,500 வீரர்கள், வரும் மே 1ம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும். இந்நிலையில், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் லாய்டு அஸ்டின் நேற்று கூறுகையில், ‘‘வீரர்களை வாபஸ் பெறுவதில் அவசரம் காட்ட மாட்டோம். ஆப்கனில் இன்னும் நிலைமை மாற வேண்டியிருக்கிறது. எனவே, இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை,’’ என்றார்.

Related Stories: