×

கல்யாணமா எங்ககிட்ட வாங்க

நன்றி குங்குமம் தோழி

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிறுன்னு சொல் வழக்குள்ளது. கல்யாணத்தை செய்து பார்னு சும்மாவா சொன்னாங்க. இரண்டு குடும்பம்  இணையும் சுபமுகூர்த்த நாளான அன்று மணப்பெண் அலங்காரம் மட்டும் இல்லை, கல்யாண மண்டபம் பார்ப்பது, சாப்பாடு, புகைப்படம், மணப்பெண்  உடை அலங்காரம்...ன்னு சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் வேறு வேறு துறை. ஒவ்வொன்றையும் நாம் தேடி தேர்வு செய்ய  வேண்டும்.  அதற்கு நாம் கொஞ்சம் அலையணும். இனி அந்த அலைச்சல் தேவையில்லை.

மணப்பெண் அலங்காரம் முதல் சாப்பாடு வரை அனைத்தும் ஒரே இடத்தில் பெற முடியும் என்கிறார்கள் சுகன்யா மற்றும் பயஸ் தோழிகள். இவர்கள்  இருவரும் இணைந்து திருமணத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து தருகிறார்கள். ‘‘முதலில் நான் டிசைனிங் தான் செய்து  கொண்டு இருந்தேன். பயஸ் என்னோட மட்டும் இல்லை என் குடும்பத்துக்கும் ஆஸ்தான மேக்கப் ஆர்டிஸ்ட். என் கல்யாணத்துக்கும் அவங்க தான்  எனக்கு மேக்கப் போட்டாங்க. அவங்க எங்க ஏரியாவில் முதன் முதலில் சலூன் ஆரம்பிச்ச காலம் முதல் நான் அவங்க கஸ்டமர். அப்படித்தான் எங்க  இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது’’ என்று பேசத் துவங்கினார் சுகன்யா.

இவர் சுகன்யா நீடில்ஸ் அண்ட் திரட்ஸ் என்ற பெயரில் டிசைனிங் செய்து வருகிறார். மறைந்த பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் மருமகள்  என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘உடை அலங்காரம் மற்றும் டிசைனிங்கில் எனக்கு சின்ன வயசில் இருந்தே ஆர்வம் அதிகம். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்  காலத்தில் இருந்தே புடவை மேல் தனி ஈர்ப்புண்டு. கல்லூரியில் புடவை தான் கட்டணும். அதனால் என்னுடைய பிளவுஸ் வித்தியாசமா  இருக்கணும்ன்னு பார்த்து பார்த்து டிசைன் செய்வேன். டிசைனிங் படிக்கணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா அப்பாக்கு நான் கல்லூரியில் சேர்ந்து  டிகிரி படிக்க ணும்ன்னு விருப்பம். அதனால அவரின் விருப்பத்துக்காக நியூட்ரிஷன் அண்ட் டயடிக்ஸ் படிச்சேன்.

அதில் ஒரு பாடம் ஃபேஷன் மற்றும் எம்பிராய்டரி இருந்தது. அது என்னுடைய ஃபேஷன் தாகத்திற்கு கொஞ்சம் தீனிப் போட்டது போல் இருந்தது.  படிப்பு முடிச்சதும் பொறியியல் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தேன். அப்போதும் டிசைனிங் செய்வதை நான் விடவில்லை.  நண்பர்கள், உறவினர்களுக்கு செய்து வந்தேன். கல்லூரி வேலை முடிஞ்சதும் இதற்கான பர்ச்சேசுக்கு போயிடுவேன். இதற்கிடையில் திருமணம்,  குழந்தைன்னு கமிட் ஆனதால் ஒரு வருடம் டிசைனிங் பக்கம் செல்லவே இல்லை’’ என்றவர் பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு முழுமையாக  இதில் இறங்கிவிட்டார். ‘‘கல்லூரியில் வேலைப் பார்க்கும் போதே எனக்கு திருமணம் நிச்சயம் ஆனது.

அதனால் பேராசிரியர் வேலை மட்டும் இல்லாமல் டிசைனிங் வேலையிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு வருஷம் பிரேக்  எடுத்தேன். அதன் பிறகு என் கணவர் தான் என்னை மறுபடியும் இதில் ஈடுபட உற்சாகப்படுத்தினார். அவர் தான் டிசைனிங் செய்ய விருப்பம்னா  அதையே தொடர்ந்து செய்ய ஆரம்பின்னு ஊக்கமளித்தார். அதனால் முழுமையாக இதில் ஈடுபட ஆரம்பிச்சேன். முதலில் நான் ஆர்டர்களை எடுத்து  அதை துணி தைக்கும் டெய்லரிடம் கொடுத்து வந்தேன். ஆர்டர்கள் நிறைய வர ஆரம்பிக்க... எனக்கான ஒரு டெய்லரிங் யூனிட்டை அமைச்சேன்.  இப்போது என் னுடைய ஆர்டர்கள் மட்டுமே தான் இவங்க செய்வாங்க.

நான் கல்லூரியில் படிக்கும் போதே டெய்லரிங் குறித்து கிராஷ் கோர்ஸ் படிச்சேன். அதனால சின்ன தப்பு நடந்தாலும் எதை எவ்வாறு மேனேஜ்  செய்யணும்ன்னு தெரியும். மேலும் அந்த தொழில் செய்யும் போது அது குறித்த அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. இன்னும்  சொல்லப்போனா நான் என் டெய்லரிங் மாஸ்டர் கிட்டதான் ஒரு பிளவுஸ் எப்படி கத்தரிக்கணும், எப்படி தைக்கணும்ன்னு கத்துக்கிட்டேன். எனக்கு  கட்டிங் தெரியும். ஆனா எமர்ஜென்சி நேரத்தில் என்னால் மேனேஜ் செய்ய முடியும்’’ என்றவருக்கு அவரின் கல்யாணத்தில் அவரின் பிளவுசை  பார்த்துதான் நிறைய ஆர்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளதாம்.

‘‘எனக்கு ஒவ்வொரு டிசைனும் வித்தியாசமா இருக்கணும். அதனாலேயே என்னுடைய கல்யாணம் முதல் ரிசப்ஷன் மற்ற விசேஷ பிளவுசை பார்த்து  பார்த்து வடிவமிச்சேன். அதை பார்த்து நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சாங்க. இப்படி ஒருத்தர் மூலமா வாய் வார்த்தையா தான் எனக்கு ஆர்டர் வர  ஆரம்பிச்சது. என்னுடைய ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் யுனீக்கா டிசைன் செய்து தரேன். என்னுடைய எம்பிராய்டரிக்காகவே நிறைய பேர்  வருவாங்க. இப்படி நான் டிசைனிங் மட்டுமே தனியா செய்திட்டு இருக்கும் போது, பலர் என்னிடம் மேக்கப்புக்காக யாரும் இருக்காங்களான்னு  கேட்பாங்க. அவங்க கேட்கும் போது நான் பயஸை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பேன்.

அதே போல் அவங்களின் கஸ்டமர்களுக்கு அவர் என்னை ரெஃபர் செய்வார். இப்படித்தான் நாங்க எங்களின் கஸ்டமர்களை பகிர்ந்து கொண்டோம்.  அடுத்து புகைப்படம் பற்றி கேட்கும் போது எங்க குடும்ப போட்டோகிராபர் நாகூரை அவர்களுக்கு சொல்வேன். இப்படியாக தான் நாங்க ஒருத்தருக்கு  ஒருத்தர் உதவி செய்து வந்தோம். ஒரு கட்டத்தில் இப்படி தனித்தனியா நாம செய்வதற்கு பதில் இதையே ஏன் ஒரே தொழிலா செய்யக்கூடாதுன்னு  எண்ணம் ஏற்பட்டது. இது குறித்து இருவரிடம் பேசினேன். ஓ.கே சொன்னாங்க. ஐந்து மாசம் முன்பு மூவரும் ஒன்றிணைந்தோம்’’ என்றவரை  தொடர்ந்தார் பயஸ். ‘‘சுகன்யா போலதான் நானும். எனக்கும் சின்ன வயசில் இருந்தே அழகுக்கலை மேல் ஆர்வம் இருந்தது.

யாராவது புதுசா ஹேர்ஸ்டைல் போட்டு இருந்தா, அதை பார்த்து அப்படியே நான் செய்வேன். பட்டப்படிப்பு முடிச்சிட்டு வீட்டு எஜமானியாகத்தான்  இருந்தேன். என் சகோதரர் தான் ஏதாவது தனிப்பட்ட தொழில் செய்ன்னு சொன்னார். பேசிக் அழகியல் பயிற்சி  எடுத்தேன். என்னுடைய ஆர்வத்தை  பார்த்த என் கணவர் என்னை அதே துறையில் சர்வதேச அளவில் பயிற்சி எடுக்க சொன்னார். பயிற்சி முடிச்சிட்டு சொந்தமா சலூன் வைக்க  நினைச்சேன். அதற்கு முன் அனுபவம் வேண்டும் என்பதால் ஆறு மாசம் ஒரு பியூட்டி பார்லரில் வேலைப் பார்த்தேன். ‘தியா பிரைடல் ஸ்டுடியோ’  துவங்கி 10 வருஷமாச்சு. ஏற்கனவே இரண்டு கிளைகள் உள்ளது. இப்போது சுகன்யாவுடன் இணைந்து மூன்றாவதா துவங்கி இருக்கேன்.

நான் சலூன் ஆரம்பிச்ச காலத்தில் இருந்தே சுகன்யா என்னுடைய கஸ்டமர். ஒரு வாடிக்கையாளர் என்னிடம் வந்தா அவங்களுக்கு என்னால் எவ்வளவு  பெஸ்டா கொடுக்க முடியுமோ அது எல்லாம் நான் கொடுத்து வந்தேன். ஒரு ஆயில் மசாஜ் செய்தா அவங்களுக்கு ஏற்படும் திருப்தியால மறுபடி  என்னை நாடி வரணும்ன்னு முடிவு செய்தேன். அதனால் ஒவ்வொரு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்தினேன். அதுதான் சுகன்யாவிற்கு என்னிடம்  பிடித்து இருந்தது. அவரின் உடை அலங்காரத்திற்கு வரும் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் என்னை கைகாண்பித்து விட ஆரம்பிச்சார். நானும் என்  வாடிக்கையாளர்களை அவரிடம் அனுப்புவேன். இப்படித்தான் எங்களுக்குள் இருந்த நட்பு இப்போது தொழில் ரீதியாகவும் உயர்ந்து இருக்கு.

ஏற்கனவே இரண்டு சலூன் இருக்கு. இப்ப பார்ட்னர்ஷிப்பான்னு நான் கொஞ்சம் யோசிச்சேன். ஆனா என் கணவர் தான் என் குழப்பத்தை போக்கி,  செய்து பார்ன்னு சொன்னார். அவர் தான் என்னுடைய பெரிய சப்போர்ட். ‘‘முதலில் என்னிடம்  வரும் வாடிக்கை யாளர்களின் சருமத்தை அனலைஸ்  செய்வேன். அதற்கு ஏற்ப சிகிச்சை முறையை கடைப்பிடிக்க  சொல்வேன். இதற்கிடையில் அவங்களுக்கான உடை பற்றி சுகன்யா டிஸ்கஸ்  செய்வாங்க. உடைக்கு ஏற்ற மேக்கப் மற்றும் சிகை அலங்காரம் எல்லாம் அடுத்த கட்டம் முடிவு செய்வோம். கடைசியாக உடைக்கான நகைகள்.  எல்லாம் முடிந்த பிறகு போட்டோகிராபியும் பிக்ஸ் செய்திடுவோம். சிலருக்கு மேக்கப் போட்டா எப்படி இருக்கும்ன்னு குழப்பமா இருக்கும்.

அவங்களுக்கு டிரயல் மேக்கப் செய்து காண்பிப்போம். அதை புகைப்படமாகவும் எடுத்து காண்பிக்கும் போது மணநாள் அன்று எப்படி இருப்பார்கள் என்று  அவர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் அவர்கள் விரும்பும் சின்னச் சின்ன கரெக்‌ஷனும் செய்றோம். இது யுனிசெக்ஸ் சலூன்  என்பதால், அவர்கள் மாப்பிள்ளைக்கும் சஜஸ்ட் செய்றாங்க. ஒரு சிலர் இருவருக்கும் ஒரே இடத்தில் வேண்டும் என்றும் எங்களை நாடி வராங்க.  பிரைடல் மேக்கப் செய்யும் போது மணப்பெண்ணை ஒரு மாதம் முன்பே ஃபேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர் என்று தயார் செய்யணும்’’ என்றவரிடம்  சமையல், மண்டபம் எல்லாம் எப்படி என்ற போது அதற்கு சுகன்யா விளக்கினார்.

‘‘என் மாமா கல்யாண மண்டபத்தின் சொந்தக்காரர். அதனால விரும்புபவர் களுக்கு அவரின் மண்டபத்தையே பிக்ஸ் செய்திடுவோம். அவரின்  மண்டபத்தில் கல்யாண கேட்டரிங் செய்பவர்களின் விவரங்களை சேகரித்து வைத்து இருக்கோம். அதில் யார் பெஸ்ட் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப  பிரித்து வைத்து இருக்கோம். அவர்களிடம் பேசியும் வைத்திடுவோம். எங்க மூலம் கேட்டரிங் செய்யும் போது, தள்ளுபடியும் ஏற்பாடு செய்து  தருகிறோம். தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்கும் போது யாருமே வேண்டாம்ன்னு சொல்லமாட்டாங்க தானே. பயசின் கணவர் டிராவல்ஸ்  நிறுவனம் வச்சு இருக்கார்.

அவர் மூலமா இந்தியா மட்டும் இல்லை வெளிநாட்டுக்கும் ஹனிமூன் பேக்கேஜ் அரேன்ஜ் செய்து தரோம்’’ என்றவர் என்னதான் நாம ஒன்று கூடி  வேலை செய்தாலும் டெய்லர்கள் சொதப்பாம இருக்கணும். ‘‘ஒரு 50 ரூபாய் அதிகம் கொடுத்தா வேறு இடத்துக்கு மாறிடுவாங்க. அவங்களுக்கான  மரியாதையை நாம கொடுத்தா நம்மை விட்டு விலகமாட்டாங்க. இது நான் என்னுடைய அனுபவத்தில் கற்றுக் கொண்டது. இது ஒரு பக்கம் இருக்க,  நாமளும் ஃபேஷன் குறித்த விஷயங்களை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ளணும். இல்லைன்னா நாம பின்தங்கிடுவோம். 80களில் இருந்த  ஃபேஷன் இப்ப இருக்கும். இது ஒரு சைக்கிள் தான்.

அதில் நாம என்ன வித்தியாசம் படுத்துறோம் என்பதில் தான் நம்ம திறமை இருக்கு. எங்களின் லேட்டஸ்ட் டிரண்ட் பட்டுப்புடவையை டிரஸ்ஸாக  மாற்றுவது தான். எல்லாவற்றுக்கும் பட்டுப்புடவை தான் கட்ட வேண்டும் என்றில்லை... அந்த புடவைையயே அழகான சுடிதார் அல்லது  லெஹங்காவாக மாற்றி அமைக்கலாம். இது பார்க்க ரிச்சாகவும் இருக்கும். விசேஷங்களுக்கு அணிந்து செல்லும் போது மற்றவர்கள் மத்தியில் நீங்க  வித்தியாசமாக தென்படுவீர்கள்’’ என்றவரை ஆமோதித்தார் பயஸ். ‘‘எப்படி உடையில் மாற்றம் வருதோ அதே போல் தான் மேக்கப்பிலும் நிறைய  மாற்றம் வந்திருக்கு. முன்பு மேக்கப் போட்டு இருப்பது அப்படியே தெரியும்.

அதை யாரும் இப்போது விரும்புவதில்லை. நேச்சுரலா இருக்கணும்ன்னு எதிர்பார்க்கிறாங்க. சிலர் மேட் பினிஷ் கேட்கிறாங்க. சிலர் கிளாசியா  இருக்கணும்ன்னு சொல்றாங்க. சர்வதேச அளவில் இந்த துறையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளதுன்னு தெரிந்து கொண்டு அதை நம்ம மக்களின் சரும  நிறத்திற்கு ஏற்ப அடாப்ட் செய்ய தெரியணும். மேக்கப், உடை அலங்காரம் மற்றும் புகைப்படம் தவிர மற்ற அனைத்தும் வெளியே இருந்து தான்  அவுட்சோர்சிங் செய்றோம். இதையும் எங்களுக்கானதா மாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எல்லாம் படிப்படியாக செய்ய வேண்டும் என்பதில்  மிகவும் கவனமாக இருக்கிறோம்’’ என்றனர் இரு தோழிகள் கோரசாக.

எல்லாரும் ஃபேஷன் குயின் மற்றும் மேக்கப் நிபுணர்கள் என்று சொல்லிட முடியாது. ஆனால் ஓரளவு நமக்கு என்ன சூட்டாகும்ன்னு தெரிந்து வைத்துக்  கொள்ளலாம். அதற்கான டிப்சினை கூறுகின்றனர் தோழிகள்...

* உயரமா உள்ளவங்க பெரிய பார்டர் வச்ச புடவையை அணியலாம். குள்ளமா இருக்கிறவங்க செங்குத்து கோடுகள் கொண்ட புடவையை  அணிந்தால் அவர்களை உயரமாக காட்டும்.
* சிலருக்கு கை பெரியதாக இருக்கும். அந்த சதையை மறைக்க கை முட்டி வரை பிளவுஸ் அணியலாம். ஷார்ட் ஸ்லீவ் அணிந்தால்  மேலும் குண்டாக எடுத்துக்காட்டும்.
* மாநிற சருமம் கொண்டவர்கள் அடர் நீலம், பச்சை போன்ற நிறங்களை தேர்வு செய்யலாம். அவர்களை எடுப்பாக காட்டும். அதே போல்  வெள்ளையாக இருப்பவர்கள் பேஸ்டல், வெளிர் நிறங்களை அணியலாம். மஸ்டர்ட் நிறம் எல்லாருக்கும் அழகாக இருக்கும். காரணம் அதன் மஞ்சள்  நிறம் முகத்தில் வெளிப்படும் போது, முகம் தங்கத்தில் ஜொலிப்பது போல் இருக்கும்.
* நிறைய கான்ட்ராஸ்ட் நிறங்கள் இப்ப டிரன்டாக உள்ளது. பர்பில் அண்ட் ரெட், வெளிர் நீலம் மற்றும் சிகப்பு, பிங்க் மற்றும் பர்பில்,  வெள்ளை அண்ட் ஆரஞ்ச், டிஸ்யு கோல்ட் மற்றும் பிங்க். பிஸ்தா கிரீன், ஆரஞ்ச், கிளிப் பச்சை, பேல் ப்ளூ... இவை எல்லாமே வித்தியாசமான  காம்பினேஷன்கள்.
* வெயிலினால் ஏற்படும் கறுமை மறைய சிலர் எலுமிச்சை சாறு அதிகம் பயன்படுத்துவாங்க. அது சருமத்தில் திட்டு திட்டாக காட்டும்.  சருமத்தை வறண்டு போக செய்யும்.
* ஆலோவேரா ஜெல்லையும் நேரடியாக அப்ளை செய்யக்கூடாது. அதில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் வெள்ளை தழும்பை ஏற்படுத்தும்.
* திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே ஃபேஷியல், பிளிச் மற்றும் டேன் போன்றவற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்  பிறகு வீட்டில் நாங்க சொல்லும் சின்னச் சின்ன டிப்ஸ்களும் ஃபாலோ செய்யணும்.

- ப்ரியா

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!