பெட்ரோல், டீசல் விலை 11வது நாளாக அதிகரிப்பு: சென்னையில் 92.25 ஆனது

சேலம்: பெட்ரோல், டீசல் விலை நேற்று தொடர்ந்து 11வது நாளாக அதிகரிக்கப்பட்டது. இதனால், சென்னையில் பெட்ரோல் 92.25க்கும், சேலத்தில் 92.67க்கும் விற்பனை செய்யப்பட்டது.  சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. இந்த வகையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அதிலும் நடப்பு மாதம் கடந்த 9ம் தேதியில் இருந்து நேற்று (19ம் தேதி) வரை தொடர்ந்து 11 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 20 காசு முதல் 40 காசு வரையில் உயர்த்தியுள்ளனர். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை 100 நெருங்கியுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் , மத்தியபிரதேசம் மாநிலங்களில் 100ஐ எட்டிவிட்டது. நேற்றைய தினம் (19ம் தேதி) பெட்ரோல் 27 காசும், டீசல் 32 காசும் அதிகரிக்கப்பட்டது.

இதனால், சென்னையில் நேற்று முன்தினம் 91.98க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று காலை 6 மணி முதல் 27 காசு அதிகரித்து 92.25க்கு விற்கப்பட்டது. டீசல் ஒரு லிட்டர் நேற்று முன்தினம் 85.31க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 32 காசு அதிகரித்து 85.63க்கு விற்பனையானது. இதுவே சேலத்தில் பெட்ரோல் 92.67க்கும், டீசல் 86.07க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், காய்கறிகள், மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால், வரும் 15ம் தேதியில் இருந்து ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக, தென் மண்டல லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இருப்பினும் இதன் விலை உயர்வை நேற்று குறைக்கவில்லை. மாறாக மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை முறையே 27 காசு, 32 காசு என உயர்த்தியுள்ளனர். இதனால், லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Related Stories: