பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என அறிவிப்பு: தனியுரிமை கொள்கையில் வாட்ஸ் அப் பிடிவாதம்

புதுடெல்லி: தகவல், வீடியோக்களை பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப் மொபைல் ஆப்பை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் வாட்ஸ்அப் தனது தனியுரிமை கொள்கையை புதுப்பிப்பதாக அறிவித்தது. பிப்ரவரி 8ம் தேதிக்குள் புதிய கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்த முடியாது எனவும் எச்சரித்தது. இந்த புதிய கொள்கை மூலம் வாட்ஸ்அப் தனது தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பயனாளர்களின் தகவல்களை பகிர்ந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவின. இது பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வாட்ஸ்அப்பின் புதிய கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. ‘பல கோடி வர்த்தகத்தை காட்டிலும், பயனாளர்களின் தனியுரிமை பாதுகாப்பே முக்கியம்’ என உச்ச நீதிமன்றமும் கூறி உள்ளது. கடும் சர்ச்சை எழுந்ததால், புதிய கொள்கை அமல்படுத்துவதை மே 15ம் தேதிக்கு வாட்ஸ் அப் ஒத்திவைத்துள்ளது. இருப்பினும், இந்த தனியுரிமை கொள்கையில் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு தற்போதுள்ள அம்சங்களில் எவை மட்டும் மாறாது என்பது குறித்த விளக்கத்தை வாட்ஸ்அப் தெரிவித்துள்து. அதன் விவரம் இதோ:

*  தகவல் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் தவிர , வாட்ஸ்அப், பேஸ்புக் உட்பட வேறு யாரும் அந்த தகவல்களை படிக்க முடியாது. செய்திகள் அனைத்தும் அனுப்புபவர், பெறுபவர்களுக்கு இடைப்பட்டதாக மட்டுமே இருக்கும்.

* நிறுவனங்களுடன் உங்கள் மொபைல் எண் பகிர்வது, உங்களின் விருப்பத்தின் அடிப்படையிலானது. நீங்கள் விரும்பினால் உங்கள் மொபைல் நம்பரை விளம்பர கம்பெனிகளுடன் வாட்ஸ்அப் பகிரும். விருப்பமில்லாவிட்டால் பகிராது.

* நீங்கள் மொபைல் நம்பரை பகிர்ந்தாலும், எந்த நேரத்திலும் எந்த நிறுவனத்தையும் பிளாக் செய்ய முடியும்.

* புதிய நிபந்தனை விதிமுறைக்கு உட்படாவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு காலாவதி ஆகி விடும். அதாவது மே 15ம் தேதிக்குள் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காவிட்டால் பயன்படுத்த முடியாது.

*  மூன்றாம் தரப்பு பேனர் விளம்பரங்கள் அனுமதிக்கப்படாது. அப்படி செய்யும் நோக்கமும் வாட்ஸ்அப்புக்கு இல்லை. ஒருவேளை பேனர் விளம்பரங்களை சேர்ப்பதாக இருந்தால், அது குறித்து தனியுரிமை கொள்கை புதுப்பிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.

* புதிய விதிமுறை மறறும் சேவையை நீங்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.

மாறப் போவது:

* புதிய தனியுரிமை கொள்கை அடிப்படையில் நீங்கள் விரும்பினால் வணிக நிறுவனங்களுடன் வாட்ஸ்அப்பில் பேச முடியும். வணிக நிறுவனங்களும் உங்களுடன் பேச முடியும். ஆனாலும் பயனர்களின் மொபைல் நம்பர் வணிக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படாது.

* பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வரும் விளம்பரங்களில் பட்டனை அழுத்துவதன் மூலமாக வாட்ஸ்அப் வாயிலாக விளம்பரம் செய்த நிறுவனங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியும். இந்த குறுந்தகவலும் அனுப்புபவர், பெறும் நிறுவனத்தை தவிர வேறு யாரும் படிக்க முடியாது.

இவ்வாறு வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. இது குறித்து விரைவில் புதிய விளக்கம் அனைத்து பயனாளர்களின் வாட்ஸ்அப்பிலும் தகவல் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய வடிவில் விளக்கம்

வாட்ஸ்அப் நிறுவனம் தனது அப்டேட் குறித்து விளக்கும் ஒரு புதிய பிளாக் போஸ்ட்டை வெளியிட்டுள்ளது. அதில், ‘புதிய கொள்கை குறித்து நாங்கள் ஏராளமான தவறுகளை சந்தித்தோம். எந்தவொரு குழப்பத்தையும் நீக்க நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம்’  என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சில நாட்களில் சிறிய பேனர் மூலமாக புதிய தனியுரிமை கொள்கை குறித்து மீண்டும் பயனாளர்களுக்கு விளக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திற்கும் வாட்ஸ்அப் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: