பேப்பர் கேரி பேக் தயாரிக்கலாம்...

நன்றி குங்குமம் தோழி

மாதம் ரூ.25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

தமிழகத்தில் தற்போது பிளாஸ்டிக்கைக் கொண்டு உருவாக்கப்படும் கேரி பேக் உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மளிகைப்பொருட்கள், காய்கறிகள் என இதர அத்தியாவசிப் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அது எல்லா வகைகளிலும் சாத்தியப்படாத ஒன்றாக உள்ளது. ஏனெனில், வெளியில் வேலைக்கு செல்வோர் வீட்டிற்கு வரும்போது தேவையான பொருட்களை வாங்க வேண்டி வரலாம்.

அதனால், கடைக்காரரே பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குப் பதிலாக காகிதப்பை அல்லது துணிப்பை போன்ற பைகளில் வைத்துக்கொடுத்தால் சுலபமாக இருக்கும் என எண்ணத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இன்று சிறு கடைகள் தொடங்கி வர்த்தக நிறுவனங்கள் வரை காகிதப்பைக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்த நேரத்தில் காகிதப்பை தயாரிப்பு தொழிலைத் தொடங்கினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்கிறார் கோவையில் பயோனீர் பேப்பர் புராடக்ட்ஸ் மற்றும் எஸ்.கே.எஸ். பேப்பர் புராடக்ட்ஸ் நிறுவனம் நடத்திவரும் கண்ணன்.

பேப்பர் கேரி பேக் தயாரிப்பு தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அத்தொழில் நுட்பங்கள் மற்றும் சந்தை வாய்ப்பு கள் குறித்து விவரித்தார். ‘‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், காகிதப்பை மற்றும் பேப்பர் ரோல் போன்ற மண்ணில் மக்கும் பொருட்களுக்கு தற்போது தமிழகத்திலும், கேரளத்திலும் நல்ல வரவேற்புள்ளது. நாங்கள், பேப்பர் கேரி பேக் தயாரிப்பு இயந்திரம், காகிதத் தட்டுகள் மற்றும் பாக்குமட்டை தட்டுகள் தயாரிப்பு இயந்திரம், டேபிள் விரிப்பு பேப்பர் ரோல்கள் தயாரிப்பு இயந்திரம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

அதேநேரத்தில் புதியதாக இத்தொழில்களை தொடங்க நினைப்பவர்கள் 9159909944, 9745869399 ஆகிய எண்களில் எங்களைத் தொடர்புகொண்டால் தொழில் குறித்த ஆலோசனைகளையும், நேரில் வருவோருக்கு பயிற்சியும் வழங்கி வருகிறோம். காகிதப்பை தயாரிப்பு தொழில் பெண்களுக்கு ஏற்றத் தொழில் என்றே சொல்லலாம். ஏனெனில், பெரிய அளவில் இட வசதி தேவையில்லை. மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 சதுர அடியில் ஒரு அறை போதும். தயாரித்த பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு சிறிய அறை தேவை. தனி நபராகவோ நான்கைந்து பேர் கூட்டு சேர்ந்தோ இந்தத் தொழிலை செய்யலாம்.

இயந்திரம்

கிரீச்சிங் மெஷின் - கோடுகள் போடக்கூடிய மின்சாரத்தில் இயங்கக்கூடிய இயந்திரம், குளூயிங் மெஷின் - பேக்குகளுக்கு பசை தடவக்கூடிய இயந்திரம், கார்னர் கட்டிங் மெஷின் - பேக்குகளின் அடிப்பாகம் மடக்க உதவும் கார்னர் மூலம் மடக்கக்கூடிய கிரீச்சிங் மற்றும் கட்டிங் மெஷின். இந்த மூன்று இயந்திரங்களும் சுமார் ரூ.3.5 லட்சத்திலும், நடைமுறை மூலதனமாக ரூ.1.5 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் இருந்தால் இத் தொழிலைத் தொடங்கலாம்.

உற்பத்திக்கு தேவையான பொருட்கள்

காகிதம், பசை, கைப்பிடிக்குத் தேவையான பேப்பர் கயிறு. பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை.

தயாரிப்பு முறை

எந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்றுதான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும். அதை கட்டிங் அண்ட் கிரீச்சிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம். அடுத்து குளூயிங் மெஷினில் செலுத்தி ஒட்ட வேண்டும். கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் பேப்பர் கயிற்றை ஒட்டினால் பேப்பர் கேரி பேக் தயார். ஒரு மெஷினில் ஒரு நாளில் ஒருவர் 11க்கு 9 செ.மீ அளவிலான 75 பைகளை வெட்டி, கிரீச்சிங் செய்து, பேப்பர் கயிறு ஒட்டி தயார் செய்யலாம்.

தற்போது தயாரிப்பு முறை எளிதானது. இதற்கு எந்தவகை பேக் தயாரிக்கிறோமோ அந்த வகை காகிதம் ஒரு கிலோ போதுமானது. அதன்படி மாதத்துக்கு 26 கிலோவில் 2 ஆயிரம் பைகள் தயாரிக்கலாம். பல்வேறு அளவுகளில் பேப்பர் கேரி பேக் தயாரிக்கலாம். சாதாரண காகிதம் 26 கிலோ ரூ.260, டியூப்ளக்ஸ் போர்டு ரூ.1690, கோல்டன் யெல்லோ ஷீட் ரூ.910, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் ரூ.750, பசை 26 கிலோ ரூ.260, கைப்பிடி கயிறு 5 மீட்டர் ரூ.130, மெட்டல் வளையம் ரூ.20, பென்சில் 2க்கு ரூ.10 ஆகிய விலைகளில் கிடைக்கிறது.

இதன் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்த்தால், ஒன்று அல்லது இரண்டு வண்ணங்களில் கடையின் பெயர் மற்றும் படங்களை அச்சிட்டு வழங்குவதால் கடைகளுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும். சுற்றுப்புற சூழலை பாதிக்காமல் இருப்பதாலும் அரசும் இதற்கு ஆதரவு தருகிறது. இயந்திரங்களை கொண்டு தரமான முறையில் தயாரிப்பதால் இதன் தரமும், உறுதியும் அதிகம். ஒரு நாளைக்கு 3000 பைகள் வரை தயாரிக்கலாம். அனைத்து மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கின்றன. தற்போது பேப்பர் பேக்ஸ் பல்வேறு வண்ணங்களில் தடிமனான பேப்பர்களில் தயாரித்து விற்பனை செய்தால் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது.

விலையுயர்ந்த பொருட்களை இப்படி வண்ண பேப்பர் பைகளில் வைத்து கொடுப்பதை கடைகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. நல்ல உறுதியான பேப்பரில் பார்ப்பதற்கு அழகான டிசைனில் கைப்பிடியுடன் பைகள் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச்சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவதுஅதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஜவுளி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர் பிடிக்கலாம். காகிதப் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும்.

அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப விலையும் மாறுபடும். குறைந்தபட்சம் ஒரு பைக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லாபம் கிடைக்கும்.  இதன் மூலம் மாதம் குறைந்தபட்சமாக ஒரு நபர் ரூ.25 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம். ஒரு மெஷினில் ஒருவர் கட்டிங் செய்து, மற்றொருவர் கிரீச்சிங் செய்து, இன்னொருவர் கயிறு ஒட்டினால் கூடுதல் பைகள் தயாரிக்க முடியும். அதேபோல் கூடுதல் லாபமும் ஈட்ட முடியும்.

இந்த தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். இத்தொழிலை ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கலாம், யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் அரசு மானியமாக 25 சதவிகிதம் கிடைக்கிறது. வங்கிகளும் இதற்கு கடன் வழங்குகின்றன. எனவே, இத்தொழிலை பெண்கள் வீட்டிலோ அல்லது வீட்டிற்கு அருகிலோ ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தைரியமாகத் தொடங் கலாம், நிரந்தரமான வருமானத்தை ஈட்டி நிம்மதியாக வாழலாம்’’ என்றார் கண்ணன்.

- தோ.திருத்துவராஜ்

Related Stories: