சமூக வலைத்தளங்களும் மூளையின் வேதியியல் மாற்றங்களும்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் உலக அளவில் மொபைல் போன் உபயோகம் ஐந்து பில்லியன் எண்ணிக் கையை தொட்டுவிட்டதாக புள்ளி  விவரங்கள் கூறுகின்றன. இதில் இணையத்தின் உபயோகம் மட்டும் நான்கு பில்லியனை தாண்டிவிட்டதாகவும், அதில் இணையம் பயன்பாட்டில் சீனா  முதலிடமும் இந்தியா இரண்டாவது இடமும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். வளர்ந்து விட்ட நாடுகளை காட்டிலும் நமது இந்தியாவில்  இணையத்தின் பயன்பாடு மிக மிக அதிகரித்துவிட்ட நிலையில் அது கொண்டு வந்து சேர்த்துள்ள எதிர்வினைகளைப் பார்ப்போம்.

‘‘தற்போது குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று எல்லோர் கைகளிலும் ஓர் ஆண்ட்ராய்ட் மொபைல் போன். எல்லோரிடமும் குறைந்தது  ஒரு வாட்ஸ் அப், ஒரு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் பலவிதமான செயலிகளும் உள்ளன. சமூக வலைத் தளங்கள் எனப்படும் இவை  இணையத்தின் துணையோடு உலகை ஒரே மைக்ரோ செகண்டில் இணைத்தும் விடுகிறது. சரி இணைக்கட்டும் என்ன தவறு என்றும் சிலர்  கேட்பார்கள்...அங்குதான் பிரச்சனையே.. நமது உடல், உடல் உறுப்புகள் முக்கியமாக நமது மூளை இவை அனைத்தும் ஒரு வித நெட்வொர்க்  உடன்பாட்டில்தான் வேலை செய்கிறது.

உடலில் சுரக்கின்ற பல்வேறு ஹார்மோன்களும் சில சமிக்ஞையின் பேரில்தான் சீராக இயங்குகின்றது. நமது உடலானது மிக மிக சாதுவாக வாழும்  தன்மையை இயல்பிலேயே கொண்ட ஒரு இயற்கை அதிசயமாகும். நோய் ஏற்படுத்தும் நச்சுக்களை தானே சரி செய்து கொள்ளும் வல்லமையும்  கொண்டது. அதற்கான எல்லா எதிர்ப்பு  சக்தியையும் உடலே ஒரு கட்டமைப்பாக வைத்தும் செயல்படுகிறது. இதற்கு நல்ல உணவும் வாழ்க்கை  முறையும் நிச்சயம் அவசியம். சமயத்தில் இதெல்லாம் கிடைக்காமல் போக, நோயை சமாளிக்க முடியாத ஒரு கட்டத்தில்தான் மருந்துகளின்  துணையே நம் உடலுக்கு தேவைப்படுகிறது.

நம் மூளையும் அது போன்றுதான்... தனக்கான ஒரு கட்டமைப்பிலிருந்து சமாளிக்கக்கூடிய அளவை மீறும் போதுதான் லேசாக ஆரம்பிக்கும் குழப்பம்,  கோபம், மன அழுத்தம் இறுதியில் மனநோயாக மாறிப் போகிறது. முன்பெல்லாம் அரிதாக யாரோ ஒருவருக்கு மனநோய் என்ற நிலை போய் இப்போது  நான்கில் ஒருவருக்கு மன அழுத்தம் இருப்பதாக உலக சுகாதார நிறுவன(WHO) ஆய்வுகள் கூறுகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம்  மொபைல் போன்கள் பெரிதாக பயன்பாட்டில் இல்லாத காலகட்டம். வெகுசில வீடுகளில் மட்டுமே லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகள்  இருக்கும். நினைத்த உடன் அனைவரையும் சட்டெனத் தொடர்புகொள்ள முடியாது.

இருந்தும் குடும்ப உறவுகளிடமோ, உறவினர்களிடமோ நெருக்கம் குறைய வில்லை. தூரத்தில் இருந்தாலும் அவசியப்படும்போது தேவையான அளவே  பேச்சு என்ற ஒருவித கட்டுப்பாடு இருந்தது. கல்யாண வீடுகள் அல்லது சில விசேஷங்கள் என்று சந்தித்து கொள்ளும் உறவினர்கள் நிறைய மனம்  விட்டு பேசவும் செய்தார்கள். ஆனால் இப்பொழுது எல்லோர் கையிலும் ஒரு தொலைத்தொடர்பு சாதனம். தூரமாக இருந்தாலும் எப்போதும் ‘அனாவசிய  அருகாமை’ என்று எல்லோரும் ஒரு வித கட்டாய வட்டத்திற்குள் சிக்கியுள்ளார்கள் என்பதே உண்மை.

யாரும் அருகில் உள்ளவர்களிடம் பேச எத்தனிக்காமல் எங்கோ தொலைவில் உள்ள நபர்களை அந்த சின்ன திரையில் தொடர்ந்து  கொண்டேயிருக்கிறார்கள். மேலும் இப்பொழுது காணும் இடமெல்லாம் கேமரா. எல்லோருக்கும் செல்பி மோகம். எடுத்த படத்தை உடனடியாக வாட்ஸ்  அப், ஃபேஸ் புக்  என்று பதிவேற்றி நண்பர்களிடம் இருந்து வரும் லைக் அல்லது பதில்களுக்கு ஓயாமல் காத்துக் கிடப்பது என்று மனமும் மூளையும்  ஒரு சேர சோர்வடைகிறது... ‘நோட்டிபிகேஷன்’ என கூறப்படும் செய்திகளை அறிவிக்கும் சத்தத்திற்கு மூளை தானாக டூயுன் ஆகி ஒவ்வொரு  முறையும் அந்த செய்தி வருகையில் ஒரு வித ‘எக்ஸ்ஸைட்மென்ட்’ எனப்படும் உந்துதல் நிலைக்கு தள்ளப்படுகிறது.

அட்ரனலின் எனப்படும்  ஒரு வகை ஹார்மோனும் இது போன்ற நேரங்களில்தான்  அதிகமாக சுரக்கத் தொடங்கும்.. அதிக பதட்டம் மற்றும் மன  உளைச்சல் (Anxiety depression) ஏற்படுவதற்கு காரணமும் இந்த வகை ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதுதான். எப்போதாவது தேவையான அளவு  மட்டுமே சுரக்க வேண்டிய இவைகள் மொபைலில் குறுஞ்செய்தியோ அல்லது ஃபேஸ்புக் செய்தி என்றோ எதாவது சத்தம் கேட்கும் போதெல்லாம்  தூண்டப்பட்டால் நிச்சயம் அது மனநோய்க்குத்தான் வழி வகுக்கும்...

முன்பெல்லாம் எந்த ஒரு சுப நிகழ்ச்சி யானாலும் நம்மிடம் போட்டோ ஆல்பம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே இருக்கும். அதை வீட்டுக்கு வரும்  உறவினர்களிடம் காண் பித்து மகிழ்வோம். இப்போது எந்த நிகழ் வானாலும் சில நிமிடங் களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என்று  பதிவேற்றுவது ஒரு வகை தேவையற்ற தற் பெருமை செயலாக மாறிவிட்டது. அதற்கு கிடைக்கும் லைக்கு களுக்கும், அதிக எண்ணிக்கைக்கும்  தொடர்ச்சியாக மனம் ஏங்கத் தொடங்கி விடுகிறது. அதையும் மீறி நம் பதிவுகளை யார் யார் பார்க்கிறார்கள் என்ற கூடுதல் தகவல் வேறு.

இதனிடையே ப்ளாக் செய்வது, அன்ஃப்ரெண்ட் செய்வது என்று காரணமில்லா உளவியல் சீர்கேடுகளும் சேர்ந்து கொண்டு மூளையின் சிந்திக்கும்  மற்றும் செயல்படும் திறனையும் வெகுவாக குறைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. யாருக்கும் தனிமை என்ற ஒன்றில்லாமல் எப்போதும்  பலரால் சூழப்பட்டுள்ள நிலைமையாகவே மாற்றிவிட்டது மொபைல் போன் உபயோகம். மேலும் லாஸ்ட் சீன்(Last seen), ப்ளூ டிக்(Blue Tick), வித  விதமான லைக்ஸ்(Likes), ஃபாலோவர்ஸ்(Followers) என்று பல்வேறு விசயங்கள் மனிதன் மூளையை தொடரோட்டத்திலேயே வைத்திருப்பது  நிச்சயம் மூளை செயல்பாட்டிற்கு இடையூறுதான்.

ஒரு வித கவனச்சிதறல் ஏற்பட்டு ஸ்ட்ரெஸ் ஹார்மோன்ஸ் அதிகமாக சுரக்கும் சூழலும் ஏற்படுகிறது. அதிக மொபைல் உபயோகம் மாணவர்  களிடமும், இளைஞர்களிடையும் தூக்க மின்மை பிரச்சனையையும் உருவாக்கி விட்டது என்பது நிதர்சன உண்மை. இரவில் வெகுநேரம் கண்விழித்து  சமூக வலைத் தளங்களில் நேரம் செலவிடுவது நிச்சயம் மூளைக்கும் உடலுக்கும் சோர்வுதான். யார் என்ன செய்கிறார்கள்? எங்கு செல்கிறார்கள்  என்று தொடர்ச்சியாக ஒருவித எல்லையில்லாமல் அடுத்தவர் வாழ்க்கையின் அட்டவணைகளை தெரிந்து வைத்துக் கொள்வதும் மிகப்பெரிய  மனசோர்வுதான்.

ஆக, ஒரு தனி மனிதன் தன் வாழ்வியல் மேம்பாட்டிற்கும், கல்விக்கும், தன் குடும்பத்திற்கும் செலவிட வேண்டிய நேரத்தை தனிமையில்  செல்போன்களுடன் வீணாக செலவிடுவது வரப்போகும் எதிர்காலத்திற்கு பெரும் கேடாகும். இதனால் மூளையின் செயல்பாடு மெல்ல மெல்ல  குறைந்து நம் சிந்திக்கும் திறனாற்றல் பாதிக்கப்படுவதும், மிக நிதானமாக நம்மையே அறியாமல் நடக்கும் மாற்றமாகும். அளவிற்கு மிஞ்சினால்  அமிர்த மும் நஞ்சு என்பது செல்போன் மற்றும் சமூகவலைத்தள பயன்பாட்டிற்கும் சாலப் பொருந்தும்.’’

முனைவர் தி.ஞா.நித்யா

Related Stories: