நாம் உண்ணும் உணவில் இதெல்லாம் கூட இருக்கு!

உணவுச் சேர்மானங்கள் (Food Additives) என்ற துறை இன்று மிகவும் விஞ்ஞானப்பூர்வமாக வளர்ந்திருக்கிறது. உணவைப் பாதுகாக்கவும், பதப்படுத்தவும், சுவையை மேம்படுத்தவும், தோற்றத்தை மெருகேற்றவும் இன்று பலவகையான சேர்மானங்கள் உணவுப் பொருட்களில் கலக்கப்படுவதைப் பற்றி இந்தத் துறை ஆராய்கிறது. புளிக்கச் செய்தல், உப்பிடுதல்,  பதப்படுத்துதல், கந்தக டை ஆக்ஸைடைச் சேர்த்து இனிப்புச் சுவையைத் தக்கவைத்தல், வைன் தயாரித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.அடிட்டிவ்ஸ்களை உணவுப் பொருட்களில் சேர்ப்பதைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், அடையாளம் காணவும் ‘E’ என்ற குறியீடும் அதைத் தொடர்ந்து எண்ணும் தரப்படுகிறது. இதில் E என்பது ஐரோப்பாவைக் குறிப்பது. கோடெக்ஸ் எலிமென்டாரியஸ் கமிஷன் எனும் நிறுவனத்தின் தர அளவுகளின்படி இந்த குறியீடு அமைந்திருக்கும். ஒவ்வொரு அடிட்டிவ்ஸுக்கும் ஒவ்வொரு எண் தரப்பட்டிருக்கும். சில நாடுகளில் இந்த E என்ற எழுத்து இல்லாமலே அடிட்டிவ்ஸ் எண் மட்டும் இருக்கும். உதாரணமாக அசிட்டிக் அமிலத்தின் எண் 260. இது ஐரோப்பாவில் E260 என்று அச்சிடப்பட்டிருக்கும். ஐரோப்பாவில் அல்கானின் என்ற பொருளுக்கு அனுமதி இல்லை. இதன் குறியீட்டு எண் 103. பிறநாடுகளில் இந்த எண் மட்டுமே குறிக்கப்பட்டிருக்கும். இந்த அடிட்டிவ்ஸ்களில் பல வகை உள்ளன. அமிலப் பொருட்கள் (Acidulents), அமிலக் கட்டுப்படுத்திகள் (Acidity Regulators), ஆன்டிகேக்கிங் ஏஜெண்ட்ஸ் உட்பட இதில் பலவகை உள்ளன.

*    அமிலச் சேர்மானங்கள் ஒருவகை. இதை அசிடுலண்ட்ஸ் (Acidulents) என்பார்கள். வினிகர், சிட்ரிக், தார்த்தாரிக், மாலிக், ஃபூமரிக், லாக்டிக் அமிலங்கள் இதன் உதாரணம்.

*    அசிடிட்டி கட்டுப்படுத்திகள் சேர்ப்பது உணவில் உள்ள பிஹெச் (pH) அளவை சரியாகப் பராமரிப்பதற்காகத்தான். இதனால் உணவின் என்சைம்கள் கெடாது.

*    கட்டியாக்க தவிர்ப்பான்கள். இதனை Anti Caking Agents என்பார்கள். பால் பவுடர், குளுக்கோஸ் போன்ற வை கட்டியாகாமல் இருப்பதற்காக இவற்றைச் சேர்ப்பார்கள்.

*    நுரையூக்கிகள் சேர்ப்பதும் உண்டு. உணவில் நுரை வருவதற்காக நுரையூக்கிகள் சேர்ப்பது உண்டு. நுரையைக் கட்டுப்படுத்த Anti Foaming Agents என்ற வேதிப்பொருளும் சேர்ப்பதுண்டு.

*    ஆண்டிஆக்சிடெண்ட்கள் குறிப்பாக வைட்டமின் சி சேர்ப்பது உணவுப் பொருள் ஆக்சிஜனேற்றத்தால் கெட்டுப் போகாமல் இருக்கத்தான்.

*    திடமாக்கிகள் எனப்படும் Bulking Agents ஸ்டார்ச் போன்ற உணவுப் பொருடகளின் திண்மையை அதிகரிக்கப் பயன்படுகிறது.

*    நிறமிகள் சேர்ப்பது உணவுப் பொருள் கண்கவர் வண்ணத்தில் தோற்றம் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

*    ஃபோர்ட்டிபையிங் என்பதை உணவுச் செறிவூட்டல் என்கிறோம். வைட்டமின்கள், மினரல்கள் போன்றவற்றை ஓர் உணவுப்பொருளில் கூடுதலாய் சேர்த்துச் செறிவூட்டுவதை இது குறிக்கிறது. உதாரணம் உப்பில் சேர்க்கப்படும் அயோடின்.

*    ஒட்டுவான்கள் எனப்படும் Emulsifiers உணவுப் பொருட்களின் பிசுபிசுப்புக்கும் ருசிக்கும் சேர்க்கப்படுகின்றன. ஐஸ்க்ரீம், மயோனைஸ், பால் போன்றவற்றில் இவை இருக்கும்.

*    ஃப்ளேவர்ஸ் என்பவை பல்வேறு வகையான ருசியும் நிறமும் வருவதற்காக சேர்க்கப்படுபவை.

*    சிலவகை உணவுப்பொருட்கள் பளபளவென மின்னுவதற்காக மின்னிகள் Glazing Agents சேர்க்கப்படுகின்றன.

*    சீதோஷ்ணக் கட்டுப்படுத்திகள் எனப்படும் Humectants உணவின் வெப்பநிலைப் பராமரிப்புக்காகச் சேர்க்கப்படுகின்றன.

*     ட்ரேசர் கேஸ் எனப்படும் சேர்மானங்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் உணவுப் பொருளின் ஷெஃல்ப் லைஃப்பை மேம்படுத்த சேர்க்கப்படுகின்றன.

*    ஸ்டெப்லைசர் எனப்படும் நிலைத்திருப்பான்கள் உணவுப் பொருளின் ஸ்திரத்தன்மைக்காகச் சேர்க்கப்படுகின்றன. உதாரணம், ஜாம்களில் சேர்க்கப்படும் பெக்டின்.

*    ஸ்வீட்டனர்ஸ் எனப்படும் இனிப்பான்கள். உணவுப் பொருளில் இனிப்புச் சுவையை அதிகரிப்பதற்காகச் சேர்க்கப்படுகின்றன.

*    கட்டுமானிகள் உணவுப் பொருள் பேக் செய்யப்படுகையில் கெட்டுப்போகாமல் இருக்கச் சேர்க்கப்படுபவை. இப்படி, பலவகையான வேதிப் பொருட்கள் சேர்ந்துதான் இன்றைய உணவுப் பொருட்கள் நம் கைகளில் வந்து சேர்கின்றன. எனவே, இவை குறித்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம். உணவுப் பொருளை வாங்கும் முன்பு லேபிளில் இவற்றில் எவை உண்டு அதன் பக்கவிளைவுகள் என்னென்ன என்று பார்த்துவிட்டு வாங்கவும்.

Related Stories:

>