அடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு எனக்கிருக்கிறது!

நன்றி குங்குமம் தோழி

வீட்டு மாடியில் காய்கறி  செடிகளைத்  தொட்டியில்  நட்டு  வளர்க்கும்  புதிய கலாச்சாரம் மக்களிடையே வேகமாகப் பரவி  வருகிறது. மாடியில் தோட்டம் போட்டால் எடை தாங்குமா? நீர்க்கசிவு ஏற்படுமா? கட்டடம் பாதிக்குமா போன்ற கேள்விகள் எழுவது  நிச்சயம். இதனாலேயே விருப்பம் இருந்தும் அதனை செயல்படுத்த முடியாமல் பலர் உள்ளனர். இனி அந்த பயம் தேவையில்லை.  மொட்டை மாடியின் தளைத்தளத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி தோட்டத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள், பயிர் வளர்க்கும்  உபகரணங்கள், தோட்ட வேலைக் கருவிகள் என அனைத்தும் இப்போது மார்க்கெட்டில் தாராளமாக கிடைக்கிறது.

நகர்ப்புற குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மொட்டை மாடியை காய்கறி வளர்க்கும் தோட்டமாக மாற்றிக் கொள்ள முடியும். மாடித்  தோட்டம் தனக்கு மட்டுமே அமைத்துக் கொள்ளாமல் அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து, இதனை பிசினசாகவும் செய்து  வருகிறார் சென்னையை சேர்ந்த ஜெயஸ்ரீ. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு எப்போதுமே பிசியாக இயங்கி வரும் ஜெயஸ்ரீ நம்மோடு பல  சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு, பெண்கள் அனைவரும் தொழில் முனைவோராக வர வேண்டும் என்று  கோரிக்கையும் வைக்கிறார்.“2014 ஆம் ஆண்டு தான் மாடி தோட்டத்தை துவங்கினேன். எம்.எஸ்.சி., எம்.பி.ஏ. படித்த எனக்கு ஆர்ட்டி  கல்சருக்கும், அக்ரி கல்சருக்கும் சம்மந்தமில்லை. காஞ்சிபுரத்தில் விவசாயத்தினை பார்த்து வளர்ந்த சூழலினால் தோட்டம்  அமைப்பதில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது.

இந்த வீட்டின் பூமி பூஜை போடும் போதே பல வகையான பழ மரங்களை நட்டு வைத்தேன். இதனோடு காய்கறி மற்றும் இதர  செடிகளையும் வளர்த்தேன். வெயில் காலத்தில் மொட்டை மாடியில் எப்படித் தப்பிப்பது என்று யோசித்த போது நிழல் வலைகள்  பயன்படுத்தினேன். அந்த நிழலில் இருபது தொட்டிகளை வைத்து ஃபேஷனாக ஆரம்பித்ததுதான் இந்த மாடி தோட்டம்” என்றார்.பல வண்ண பூச்செடிகள், 10 வகையான கீரை, நாட்டுக் காய்கறிகள், 80 வகையான மூலிகை செடிகள் என, தற்போது 750 சதுர  அடியில், 400 செடிகள் வைத்திருக்கும் ஜெயஸ்ரீ, ஆரஞ்ச், சாத்துக்குடி,  ட்ரேகன் பழம், நோனி, சப்போட்டா முதலான பழ மரங்களையும்  மாடியில் வைத்திருக்கிறார். இதனோடு பிரியாணிக்கு போடப்படும் நாற்பது வகையான மசாலா பொருட்கள், ஒரே இலையில் இருக்கும்  தவசிக் கீரை என்ற செடியோடு, பட்டை, கிராம்பு போன்ற வாசனைப் பொருட்களையும் வளர்த்து வருகிறார்.

இந்தச் செடிகளை வளர்ப்பதோடு மட்டுமில்லாமல் வியாபாரமாகவும் செய்து வரும் இவருக்கு இந்த ஆர்வம் எப்படி வந்தது என்று  கேட்டதற்கு, “படித்து வேலைக்கு போயிட்டு இருந்த எனக்கு, கல்யாணம் ஆனதும் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற நிலைமை  வந்தது. சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக டியூஷன் சென்டர் நடத்தி வந்தேன். யோகா பயிற்சியாளர், பிராணிக் ஹீலர், ஃபேஷன்  டிசைனர், இன்டீரியல் டெக்கரேட்டர், இன்டர் நேஷனல் ஸ்கூல் டீச்சர் எனப் பல துறைகளிலும் கவனம் செலுத்தினேன். பல  துறைகளில் கிடைத்த அனுபவத்தைப் பயன்படுத்தி வாழ்க்கையில் கொஞ்சம் ஜாலியாக இருக்க வேண்டுமென்று, இந்த மாடி  தோட்டத்தை பிஸ்னசாக ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் விவசாயம் சம்மந்தமான பொருட்காட்சியில், ஒரே நாளில் நாற்பதாயிரம்  ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வீட்டிற்காகவும், எனது ஃபேஷனுக்காகவும் காய்கறி தோட்டம் பண்ணியது பெரியதல்ல. அதை வியாபாரமாக்கும் போது, அது சம்மந்தமான அறிவும், அனுபவமும் தேவை என்பதை உணர்ந்து தீவிர தேடலில் இறங்கினேன்.  வீட்டில் செடிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினேன்’’ என்றவர் மற்றவர்களுக்கும் தோட்டம் அமைக்கும் கலையை கற்றுக்  கொடுத்த வருகிறார்.‘‘மாடித்  தோட்டம் ஒரு புதுமை. என்னோடு மட்டுமில்லாமல் மற்றவர் களுக்கும் சொல்லி, அதைப் புரியவைத்து  ஈடுபடுத்தி வருகிறேன்.

சிட்டியில் மாசு, தூசு மற்றும் சீதோஷ்ண மாற்றம்... எனப் பல பிரச்சினைகள் இருக்கிறது. இதை எல்லாம் மீறி  அவர்களுக்கு பாசிட்டிவான ரிசல்ட் காண்பித்து, ஊக்கப்படுத்தி, இயற்கை விவசாயத்தில் அவர்களைக் கொண்டு வருவது சவாலான  விஷயம். இந்த ஐந்து ஆண்டில் ஆயிரம் நபர்களுக்கு மாடித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி அளித்து அவர்களும் தங்களின்  வீட்டில் அமைக்க உதவி செய்திருக்கேன். இது மட்டும் இல்லாமல் பள்ளி, கல்லூரி, ஐ.டி நிறுவனங்களில் இயற்கை விவசாயம் பற்றிய  விழிப்புணர்வும், பாடமும் நடத்துகிறேன்.

அடுத்த தலைமுறைக்கு உணவின் முக்கியத்துவம் தெரிய வேண்டுமென் பதற்காக, ப்ளே ஸ்கூலில் இருக்கும் குழந்தைகளை இங்கு  அழைத்து வருகிறேன். ஒரு கத்தரிக்காய் வளர்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்பது அவர்களுக்கும் தெரிய வேண்டும். நாம  என்னதான் டெக்னாலஜி தெரிந்து கொண்டாலும் உணவு பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் எதிர் கால தலைமுறையினரை அது  பெரிதும் பாதிக்கும்.இன்றைய காலக்கட்டத்தில் ரசாயனம் கலந்த உணவினை சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் வருகிறது  என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணம் உணவுதான். இதனால் அடுத்த தலைமுறையை  காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கிருக்கிறது.

இது உனக்கான பிசினஸ் இல்லை என்று பலபேர் சொல்லியும், இதை  வெறும் பிசினஸாக பார்க்காமல், சமூக கடமையும் அவசியம் என்று செய்து வருகிறேன். அடுத்தகட்டமாக நிலத்தில் விவசாயம் செய்யவும், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கி வருகிறேன். இயற்கை  முறையில் நாப்கின் தயாரிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன். இந்தத் துறையில் எனக்கு இதுவரை மூன்று விருதுகள்  கிடைத்திருக்கிறது. ஆனால், அதைவிடப் பெரிய விருதாக என்னிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள் இதில் சாதித்திருப்பதே எனக்கான  விருதாகப் பார்க்கிறேன்” என்றார்.

இவரின் மாடித் தோட்டத்தில் சாதாரண காய்ச்சல், சளி முதல் கேன்சர், சுகர் போன்ற நோய்களுக்கான  மருத்துவ குணமிக்க செடிகள் இருந்தாலும், அதை விற்பதோடு சரி, அதற்கான மருத்துவர் நான் இல்லை என்கிறார். அதனை  மருத்துவர்களின் அறிவுரைப்படியே சாப்பிட வேண்டும் என்று கூறும் ஜெயஸ்ரீ, எளிமையாக மாடித் தோட்டம் அமைப்பது எப்படி என்று  விளக்குகிறார், “மாடித் தோட்டம் அமைக்கும் போது நிறைய பேர் சொல்வது, அதிகம் செலவாகுமோ, நேரம் இருக்குமோ, தண்ணீர்  அதிகம் செலவாகுேமா, எவ்வாறு பராமரிப்பது... என பல கவலை.

ஆரம்பத்தில் ஐந்து செடிகள் வாங்கி, முறையே மாதம் ஐந்து செடிகள் என்று வைத்தால், ஒரு வருடத்தில் உங்கள் மாடியில் ஐம்பது  செடிகளை நீங்கள் உற்பத்தி செய்யலாம். அடுத்தகட்டமாக உங்கள் தேவைகள் போக, அதை வியாபாரமாக்கலாம். இதைப் பின்பற்றி  இன்று நான் ஓரளவு அதில் வெற்றி பெற்றிருக்கிறேன்” என்கிறார். விவசாயம் ஒடிந்து, பிழைப்புக்கு என்ன செய்வதென்று தெரியாமல்  இருப்பவர்களிடம் பஞ்சகவ்யம் எப்படிச் செய்வது என்று சொல்லி தருவதோடு, அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கி இங்கு விற்பனை  செய்து வரும் ஜெயஸ்ரீ, “விவசாயத்தால் நீங்கள் பிழைக்கலாம் என்ற நம்பிக்கை என்னால் அவர்களுக்குக் கொடுக்க முடிகிறது”  என்கிறார்.

“கொசு விரட்டி, பல்லி விரட்டி, கரப்பான் பூச்சி விரட்டி, முருங்கைக் காய், இலையில் மாத்திரை, மாட்டுச் சாணத்தினாலான கலை  பொருட்கள் என விவசாயிகள் செய்கிறார்கள். இவ்வாறு கலைத் திறனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல்  இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இதையும் வியாபாரமாக செய்து, அவர்களுக்கும் ஓர் வருமானத்தை ஏற்படுத்தியுள்ளேன்” என்றார்.தனக்கு குரு, ரோல் மாடல் என்று யாரும் கிடையாது என்று சொல்லும் ஜெயஸ்ரீ, “சுயமாகவே என்னை நான் தயார் செய்து கொள்வேன்.  எப்போதும் நான் நம்புவது கடின உழைப்பு மட்டுமே. செய்யும் வேலையை நூறு சதவீதம் உண்மையாக செய்ய வேண்டும்” என்றார்  ஜெயஸ்ரீ.

அன்னம் அரசு

படங்கள் : ஆ.வின்சென்ட் பால்

Related Stories: