சைபார்க் குழந்தைகள் பிறக்கத் தொடங்கி விட்டன!

இத்தாலியில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கருவுற்ற தாயின் தொப்புள் கொடியில் பிளாஸ்டிக்கின் நுண் துகள்கள் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத்துவர்கள். பாலித்தீன் எனப்படும் நெகிழித் துகள்கள் ஐந்து மி.மீக்கும் கீழ் இருந்தால் அதை மைக்ரோ பிளாஸ்டிக் என்கிறார்கள். துணிகளிலிருந்து வருகிற செயற்கை இழைகள்,  கண்ணுக்குத் தெரியாத நெகிழித் துணுக்குகள் தவிர,  பெரிய நெகிழிப்பொருட்கள் காலப்போக்கில் சிதைவதாலும் நுண்நெகிழி உருவாகிறது. தற்காலத்தில் புவியின் எல்லா இடங்களிலும் இந்த ப்ளாஸ்டிக் துகள்கள் ஊடுருவத் தொடங்கிவிட்டன.

கருவுற்ற ஆறு பெண்களின் தொப்புள் கொடியை ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி முறையில் ஆராய்ந்ததில், நான்கு பெண்களின் தொப்புள்கொடிக்குள் 12 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்திருக்கின்றன. இத்தனைக்கும் தொப்புள்கொடியில் வெறும் நான்கு சதவீதப் பகுதிகளை மட்டுமே ஆராய்ந்திருக்கிறார்கள். எனவே, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்கவே வாய்ப்பு அதிகமாம்.

இந்த 12 மைக்ரோ பிளாஸ்டிக்களில் மூன்று பாலிப்ரோபிலீன் துகள்கள் மற்றவை பெயின்ட், சோப் போன்ற அன்றாடப் பொருட்கள், ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிற கோந்து முதலியவற்றில் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள். இவை எப்படி உடலுக்குள் வந்திருக்கும் எனவும், இவை குழந்தையின் உடலுக்குள் ஏற்கனவே பயணித்துவிட்டனவா என்பதும் ஆராயப்பட வேண்டியது. இதில் சிக்கல் என்னவென்றால், இவை எல்லாமே 0.01 மி.மீக்கும் குறைவான அளவுள்ள துகள்கள் என்பதால், இவற்றால் எளிதில் ரத்தத்தில் கலந்து உடலுக்குள் பயணிக்க முடியும் என்பதுதான். இது குழந்தையின் உடலிலும் சேர்ந்தால், அதன் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம். தாய்க்குமே பாதிப்புதான். அயல் பொருட்களும் மனித உறுப்புகளுமாக இருக்கும் கலவையை ‘சைபார்க்’ என்று அழைப்பார்கள். “இதோ சைபார்க் குழந்தைகள் பிறக்கத் தொடங்கிவிட்டன” என்று கவலையோடு தெரிவித்திருக்கிறார் இந்த ஆய்வை நடத்திய அறிவியலாளர்களில் ஒருவர்.

Related Stories:

>