×

நாம் இணைந்து பல விருதுகள் வாங்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

“நம்மலால் முடியாது என்று எதையும் விட்டு விடாதீர்கள். பலபேர் எதிர்மறையான விஷயங்கள் பல சொல்லலாம். அதையெல்லாம்  ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் நமக்காக நாம் வாழ்வோம்” என்று பயணித்து, உலக அளவில் பாடி பில்டிங்கில் முதல் ஐந்து  இடங்களில் தனது பெயரைப் பதிவு செய்திருக்கும் சுஜாதா தான் பயணித்த பாதையை பற்றி விவரித்தார்.

“கல்லூரி முடித்ததும் கல்யாணம். அடுத்து ஏர் இந்தியாவில் விமானப் பணிப்பெண். இதனிடையே குழந்தைங்க வர, வாழ்க்கை ஒரு  ரொட்டீனா ஆகிப்போச்சு. நான் பிட்னெஸ் பிரீக். நான் எப்பவுமே உடல் நலம் மீது அதிக அக்கறை காட்டுபவள். கல்லூரி காலம் வரை  பல பெண்கள் தங்களின் உடலின் மேல் அதிக கவனம் செலுத்துவார்கள். ஒரு குழந்தை பிறந்த அடுத்த நிமிடம் அந்த அக்கறை எங்கு  பறந்து போகும்ன்னு தெரியல. கேட்டா வீட்டு வேலை, குடும்பம், குழந்தைகள்ன்னு பார்க்கவே நேரம் சரியா இருக்கு. எனக்கான நேரம்  ஒதுக்க எங்க முடியுதுன்னு புலம்பும் பெண்கள் தான் நிறைய. கல்யாணம், குழந்தைகளை சாக்கு சொல்லி தங்களின் உடலை சரியா  கடைசி வரை கவனிக்க தவறிடுறாங்க. நாம நல்லாயிருந்தாதானே நம்ம குடும்பம் நல்லா இருக்கும். இதை எல்லா பெண்களும்  புரிந்துகொள்ள வேண்டும்.  

நான் விமானப் பணிப்பெண்ணாக இருப்பதால் ஜிம்முக்கு ரெகுலராக போவேன். இந்த வேலையில் நம்முடைய உடல் ஆரோக்கியம்  மிகவும் முக்கியம். அதே போல் தோற்றமும். விமானம் எப்படி எல்லாரையும் காற்றில் மிதந்தபடி அழைத்து செல்கிறதோ...  அப்படித்தான் நாங்களும் இருக்கணும். விமான பணிப்பெண்ணாக இருக்க சில கட்டுப்பாடுகள் அவசியம். நான் வேலைப்பார்க்கும்  விமான நிறுவனத்தில், வருடம் ஒரு முறை வெயிட் செக் பண்ணுவாங்க. அதிகமாக இருந்தா வீட்டுக்கு அனுப்பி வச்சுருவாங்க. அப்படி  ஜிம்முக்கு போய்ட்டு இருக்கும் போது ஒரு நிகழ்ச்சியில் பாடி பில்டிங் பற்றி தெரிய வந்தது. ஆண்கள் மட்டுமே அதிக ஆர்வம் காட்டும்  இந்த துறையை நாம் ஏன் செய்யக்கூடாதுன்னு எனக்குள் எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர் கடந்த வருடம் தான் இதற்கான பயிற்சியை  மேற்கொண்டுள்ளார்.

‘‘போன வருடம் தான் ஒரு நிகழ்ச்சியில் இது குறித்து பார்த்தேன். அப்பதான் இதற்கான அடித்தளத்தைப் போடச் செய்தேன். ஆனால்  இந்த ஒரு வருடத்தில் ஆசியாவிலும், உலக அளவில் நடைபெற்ற  போட்டிகளில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைச்சது.  முதலில் என்னால் நம்ப முடியவில்லை என்றாலும், என் திறமை மேல் அதிகம் நம்பிக்கை வைத்து என்னை ஊக்கம் செய்தவர்களில்  என் பயிற்சியாளர் பார்த்திபன் சார் மற்றும் என் காட்ஃபாதரும், ரோல்மாடலுமான அரசு சாரும்தான். அரசு சார் பாடி பில்டிங்கில் பல  சாதனைகள் செய்து, தற்போது அனைத்து ரயில்வே துறைக்கும் பயிற்சியாளராக உள்ளார். முதலில் இதற்கான பயிற்சி  எடுக்கலாமான்னு நான் குழப்பத்தில் இருந்தேன். அரசு அவர்களை நேரில் சந்தித்த போது தான் அவர் இந்த விளையாட்டு பற்றி எனக்கு  தெரியப்படுத்தினார்.

அதன் பிறகு தான் எனக்குள் ஒரு தெளிவும், நம்பிக்கையும் ஏற்பட்டது. “ஏளனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி சாதிக்கும் வலிமை  வேண்டும்” என்று அவர் கூறிய அந்த சொல் தான் என்னை மேலும் ஊக்கப்பட செய்தது. அவரின் அறிவுரைப்படி ‘lean muscle - Model  Physique’ பிரிவில் பயிற்சி எடுத்தேன். அதாவது குறைந்த தசைகளுடன் ‘ஃபிட்’ ஆக இருக்க வேண்டும். இதில் உணவு முறையும்,  கட்டுப்பாடும் மிக முக்கியம்’’ என்ற சுஜாதா தன் குடும்பம் வேலைப் பளுக்கு நடுவே தனக்கான நேரத்தை அட்ஜஸ் செய்துள்ளார்.  ‘‘என்னுடையது காதல் திருமணம். என் கணவரிடம் நான் பாடிபில்டிங் பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்று தயக்கத்துடன் தான்  சொன்னேன். ஆனால் அவர் என்னை மேலும் உற்சாகப்படுத்தி என்னை இதற்கான பயிற்சியை எடுக்க சம்மதிக்க வைத்தார். வேலை  முடிந்து உடற்பயிற்சி செய்து வீடு திரும்பவே லேட்டாயிடும்.

அதன் பிறகு தான் நான் சமைக்கணும். இதற்கிடையில் எனக்கான டயட் உணவிலும் நான் கவனம் செலுத்தணும். ஆனால் என்  கணவர் என்னுடைய பேஷனை புரிந்து கொண்டார். நான் வீடு திரும்பும் போது, எனக்கான டயட் உணவுகளை என் கணவர் தயாராக  வைத்திருப்பார். என்னுடைய மகனும் என்னை புரிந்து கொண்டான். அவனும் என்னுடைய பயணத்திற்கு தொந்தரவு  கொடுக்காமல்  அவன் வேலையை தானே செய்து கொள்ள ஆரம்பித்தான். முதன் முதலில் தமிழ்நாடு அளவில் நடந்த போட்டியில் கலந்து  கொண்டேன். போட்டிக்கு இரண்டு நாட்கள் முன் பெரிய குழப்பம். காரணம் போட்டியில் நான் அணியும் உடை. பாடி பில்டிங்  போட்டியில் பிகினி டைப் உடை அணிந்து தான் பலரின் முன் நம்முடைய உடல் வலிமையை காண்பிக்க  வேண்டும். அந்த உடை  கொஞ்சம் உறுத்தலாக தான் இருந்தது.

அனைவர் முன் மேடையில் இப்படி நிற்க வேண்டுமே. தலைக்கு மேல் வளர்ந்த மகன்கள் வேறு இருப்பாங்க. இதுகுறித்து  செய்தித்தாளில் செய்தி வரும். என் மகன்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏதாவது பேசுவார் களோ என்று கொஞ்சம்  தயங்கினேன். இதை என் மகனிடம் சொன்ன போது, “இது உன்னுடைய யூனிஃபார்ம் மம்மி. நீச்சல் செய்பவர்களும், பரதம்  ஆடுபவர்களும் அதற்கான உடையை அணிய வேண்டும். இதுவும் அப்படித்தான். நீங்க தயங்குவதில் அர்த்தமே இல்லை’’ன்னு அவன்  அளித்த நம்பிக்கையில், குழப்பம் நீங்கி நிம்மதியாக போட்டியில் கலந்து கொண்ேடன். தங்கமும் வென்றேன். இதுவே என் முதல்  வெற்றி.  

இதனையடுத்து ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வானேன். எடுத்ததும் இவ்வளவு பெரிய போட்டியில் பங்கேற்க  வேண்டுமா என்று மறுபடியும் தயக்கம். அப்போது அரசு சார் தான், “இன்னும் கொஞ்சம் ஹார்டு வொர்க் பண்ணு, உன்னால் முடியும்”  என்று உந்துதல் தந்தார். அதேபோல் கூடுதல் பயிற்சி எடுத்து, வெண்கலம் வென்றேன். அந்த அரங்கில் என் பெயரை சொல்லாமல்,  என்னுடைய அடையாள எண்ணைச் சொல்லி ‘இந்தியா’ என்று அறிவித்த போது உடல் சிலிர்த்து உற்சாகமானேன். இதைவிடப்  பெருமை என்ன இருக்க முடியும்ன்னு தோன்றியது. அங்கு கிடைத்த கைதட்டல்களும், பாராட்டுகளும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு  என்னை தயாராக்கியது. உலக அளவில் டாப் ஐந்து ரேங்க் கிடைத்தது.

பெண்கள் தாராளமா, தைரியமா இந்த பாடி பில்டிங் பயிற்சி எடுத்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பான  துறை. எல்லாருமே ஓர் இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம். அது எந்த துறையாக இருந்தால் என்ன? சாதனை படைக்க நாம்  ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் போது, அது நேர்மையானதா என்று பார்த்தால் போதும்...பாடிபில்டிங் செய்வதால், உடற்பயிற்சி  யோடு சுயஒழுக்கமும், சுயகட்டுப்பாடும் சேர்ந்து தன்னம்பிக்கை தருவதோடு உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தரும்.  ஜிம்மில் சேர்ந்துதான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றில்லை. தினமும் ஒரு மணி நேரம் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம்,  அல்லது ஒரு மணி நேரம் நடை பயிற்சி பழகலாம். பெண்கள் உடற் பயிற்சி செய்தால் ஆரோக்கியம் பாழாகும் என்று  சொல்லுவதெல்லாம் கட்டுக்கதைகள். எனது அடுத்த இலக்கு மார்ச் மாதத்தில் நடைபெறும் நேஷனல் லெவெல் பாடிபில்டிங்குக்கான  போட்டி. அதுல எப்படியாவது தங்கம் அடிக்கணும். என்னைப் போல் பல பெண்கள் இந்த போட்டியில் கண்டிப்பா கலந்துக்கணும்.  பெண்கள் எல்லாரும் இணைந்து பல விருதுகள் வாங்கலாம்” என்கிறார் சுஜாதா. இந்த வீரத்தோழியின் வெற்றி பயணம் தொடர  வாழ்த்துகள்.

-ஸ்வேதா கண்ணன்
படங்கள் : ஏ.டி.தமிழ்வாணன்

Tags :
× RELATED முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!