குழந்தைகளின் நாட்டுப்புற கலைவிழா!!!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளுக்குப் பள்ளி கல்வி சரியானதா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கும் வேலையில், அதே குழந்தைகளுக்கு அவர்களுக்குள்  இருக்கும் திறமைகளையும், கலைத் திறனையும் வெளிக்கொண்டு வருவதற்கான கல்வி மிகவும் அவசியம் என்ற ஆய்வு பலரால்  முன்வைக்கப்பட்டு வருகிறது.

இன்றைய சூழலில் கலைகளினால் குழந்தைகள் மத்தியில் போட்டி, பொறாமைகள்தான் அதிகம் உருவாகியுள்ளது. அவைகளை  கலைப்பதோடு, கிராமிய கலைகளையும் குழந்தைகள் கற்றுக் கொள்ள ஏதுவாக, நீலம் அமைப்பும், சங்கர் சமூகநீதி அறக்கட்டளை  இரண்டும் இணைந்து ‘‘Stage and the Childhood” என்ற பெயரில் கலை நிகழ்வுகளை நடத்தியது. ஐந்தாவது வருடமாக நடந்த இந்தக்  கலை கூடாரத்தில் ஏறத்தாழ 150 குழந்தைகள் பங்கேற்றனர். புகைப்படம், நாடகம், மைம், கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம்,  சிலம்பாட்டம், புலியாட்டம் போன்ற கலைகளுடன் சமூக கல்வியும் சேர்ந்து பயிற்சியளிக்கப்பட்டது. அரசியல், தலைவர்கள்,  அவர்களின் கொள்கைகள் என அனைத்து அம்சங்களும் கற்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியினை குறித்து நீலம் அமைப்பின் நிறுவனர்  முத்தமிழ் கலைவிழி விவரித்தார்.

ஏன் இந்த கேம்ப்?

பெரும்பாலான கிராமப்புற குழந்தைகளை பள்ளி விடுமுறையின் போது பெற்றோர்கள் தங்களோடு வேலைக்கு அழைத்து செல்வது  தான் இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் சில குழந்தைகள் விடுமுறை முடிந்தும் பள்ளிக்கு திரும்பாமல் தொடர்ந்து  வேலை செய்யும் நிலமைக்குத் தள்ளப்படுகின்றனர். அதற்கு குடும்பச் சூழல் காரணமாக இருந்தாலும், கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும்  அவசியம். இதை தடுக்கவும், மாணவர்களின் விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் செலவிட ஓரிடம் வேண்டும்.  அதற்காக இந்தக் கலை கூடாரத்தை உருவாக்கினோம்.

கலைகள் தன்னம்பிக்கையின் ஊற்று...

நாட்டுப்புறக் கலைகளை சிறுவயதில் இருந்தே நான் கற்று வந்ததால் எனக்கு அதில் அதிகமாகவே ஆர்வம் இருந்தது. இது வரை 11  கேம்ப் நடத்தியுள்ளோம். இந்த முகாமில் முதல் முறையாக சங்கர் சமூகநீதி அறக்கட்டளையும் இணைந்துள்ளது. மாணவர்களுக்குக்  கட்டமைக்கப்பட்ட கடுமையான பாடத்திட்டங்கள் என எதுவும் இதில் கிடையாது. கரகம் கற்கும் மாணவர்கள், அதில் பெரிதாக ஆர்வம்  இல்லை என்றால் மாறாக வேறொரு கலையை தேர்ந்தெடுக்கலாம். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் மகளும் ஐந்து நாட்கள் இங்கு  தங்கி, மற்ற குழந்தைகளுடன் பங்கெடுத்துக் கொண்டார். இந்த கேம்ப், குழந்தைகளின் மேடை ஏறும் பயத்தை போக்கி தன்னம்பிக்கை  தரும். ஒரு புதிய கலாச்சார அனுபவமாகவும் அமையும்.

பலதரப்பட்ட கலைத் திறமைகள்....

தமிழ்நாட்டில் இருந்து பல மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இதில் பங்கு பெற்று வருகின்றன. விழுப்புரம் மாவட்டம், ஊராட்சி பள்ளியின்  ஆசிரியர் ஆரோக்கியராஜ் தொடர்ந்து மூன்று முறை இந்த கேம்பில் பங்குபெற்று வருகிறார். ‘‘இங்கு பல திறமைகளை கற்று  கொடுக்கின்றனர். கிராமத்து குழந்தைகள் சென்னை போன்ற ஒரு பெரும் நகரத்தில் ஐந்து நாட்கள் தங்குவது, அவர்களுக்குக் கிடைத்த  மிகப்பெரிய வாய்ப்பு. இவர்களது பெற்றோர்களும் தங்கள் மகன் அல்லது மகள் அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தி வாழ்வில் உயர  வேண்டும் என்று எண்ணுகின்றனர். முத்தமிழின் நீலம் அறக்கட்டளை சார்பில் எங்கள் பள்ளியில் ரூ.75,000 மதிப்பிலான கழிவறை  வசதிகள் அமைக்கப்பட்டன. இது மாணவர்களின் சுகாதாரத்தையும், வாழ்க்கை தர நிலையையும் உயர்த்தும் பெரும் உதவி” என்றார்.  

 

குழந்தைகளிடம் கள்ளங்கபடமற்ற நேசம்...

குழந்தைகள் சூழ அமர்ந்திருந்த அரிவம்மாவை தனியாக அழைத்துப் பேசியதில், “மன உளைச்சலில் இருக்கும் எனக்கு, இங்க வந்து  இந்தக் குழந்தைகளை பார்க்கும் போது நிம்மதி, மகிழ்ச்சி, உற்சாகம் எல்லாமே கிடைக்குது. கூட பிறந்த அண்ணன், தங்கைகளுடன்  ஒற்றுமையாய் இருப்பது ஒன்றும் பெரிதில்லை. ஆனால், யாரென்றே தெரியாதவர்களிடம் விட்டுக்கொடுத்து பாசமுடன் பழகுவது அரிது.  குழந்தைகளிடம் கள்ளங்கபடமற்ற அன்பும் நேசமும் நிறைந்திருக்கிறது. இந்த கேம்பிற்கு வந்திருந்த ஒரு மாணவியிடம் பேசிய போது  என் கண்கள் கலங்கி தான் போயின, அந்த பெண் ‘என் வீட்டில் சாப்பாட்டிற்கே கஷ்டம். இங்கு வந்த ஐந்து நாட்களும் எந்தக்  கவலையுமின்றி மூன்று வேளையும் வயிறார சாப்பிட்டேன்’ என்று அந்த பிஞ்சு மனசு கூறிய போது என் மனசு கனத்தது. இவர்களின்   பசியை போக்க என்ன செய்ய போகிறோம் என்ற கவலை தான் இப்போது என் மனதில் ஓங்கி நிற்கிறது.

ஒவ்வொரு கலையும் ஒரு கதை சொல்லும்...

”நம் நாகரிகம் தோன்றி வளர்ந்ததே கிராமிய பண்பாடுகளும், நாட்டுப்புறக் கலைகளாலும்தான். தமிழ்நாட்டில் மட்டுமே 1024 கலைகள்  இருந்ததாக வரலாறு சொல்கிறது. தற்போது சுமார் நாற்பது கலைகள் மட்டுமே உள்ளன. இதில் ஒவ்வொரு கலையும் ஒரு கதை  சொல்லும். அனைத்துக் கலைக்கு பின்னாலும் ஒரு வரலாறு இருக்கிறது. சமூகத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்க, மக்கள் மத்தியில்  ஒரு நடத்தையை உருவாக்க நாடகம் மூலம் அதை அழகாகச் செய்யலாம். அதனால்தான் நாடகம் அனைவரையும் இன்றும்  கவர்ந்திருக்கிறது. நாங்கள் கடைக்கோடியை தேடிச் சென்று முறையான பயிற்சிகள் பெற்று, பின்னர் அதைக் குழந்தைகளுக்கு  சொல்லித்தருகிறோம்” என்றார் மாற்று ஊடக மையத்தின் பொறுப்பாளர் ஆரோக்கிய மேரி.

குப்பைகளையும் அழகாக்கலாம்...

‘‘பொதுவாகவே கேம்ப் எப்பவுமே ரொம்ப போராக தான் இருக்கும். ஆனா இந்த கேம்ப் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. சிலம்பாட்டம்,  கரகாட்டம், ஒயிலாட்டம் என எல்லாமே இங்கு கத்துக்கலாம். நான் “ஆர்ட் அண்ட் கிராஃப்ட்” கத்துக்கிட்டேன். குப்பை என்று சொல்லி  மக்கள் வீசி எரியும் பொருட்களுக்கு உருவம் தந்து அதை அழகான பொம்மைகளாக மாற்றி அமைக்கிறோம். தென்னை ஓலை, குச்சி,  தேங்காய் ஓடு, தேங்காய் நார் என எது கிடைத்தாலும் அதில் பொம்மைகள் செய்வோம்” என்றார் மாணவன் விக்னேஷ்.

பேதங்கள் ஒழியும் கேம்ப்...  

 

சென்னையில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் கல்பனா, தன் கணவர் மற்றும் மகனுடன் இந்த கேம்பில் கலந்து  கொண்டார். ‘‘சென்னை சிட்டி பெற்றோர்களை பொறுத்தவரை தங்களின் குழந்தைகளை கிட்டார், பியானோ போன்ற வகுப்பில் தான்  சேர்ப்பது வழக்கம். ஆனால், நாங்க எங்க குழந்தைகளை நாட்டுப்புறக் கலைகளில் சேர்க்கத்ததான் இந்த கேம்பிற்கு வந்திருக்கிறோம்.  இந்த ஐந்து நாள் கேம்ப் பற்றி ஃபேஸ்புக்கில் தெரிந்து கொண்டோம். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது என  அறிந்தும், இது எங்கள் மகனுக்கு உண்மையான வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என முடிவு  செய்தோம்.

சென்னையில் இருக்கும் சிறுவர்களுக்கு கிராமிய பண்பாடுகள், கலாச்சாரம் எதுவுமே தெரியாது. அதை சொல்லித்தரும் ஒரு  ஆரம்பமாக இந்த கேம்ப் இருக்கிறது. பையனை அனுப்பியதும், அவன் அனைவரிடமும் ஒற்றுமையாக இருப்பானா என்ற சந்தேகத்தில்  ஒரு நாள் அவனிடம் ‘உனக்கு பிடிக்கலனா வீட்டுக்கு போயிடலாம்’ என அழைத்தேன். ஆனால், என் மகன் நிகழ்ச்சி முடிந்து தான்  வருவேன் எனக் கூறிவிட்டான்’’ என்றார். இந்த ஐந்து நாள் கேம்ப் நாட்டுப்புறக் கலைகள் மட்டுமில்லாமல், பல நல்ல பண்புகளையும்,  வாழ்வியலையும், பாசத்தையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இந்த குணங்களை எவ்வளவு செலவு செய்தாலும் கற்க  இயலாது.

-ஸ்வேதா கண்ணன்

Related Stories: