×

குறும்படம் தயாரித்தும் அசத்திய சிறுமி!

நன்றி குங்குமம் தோழி

குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது விடுமுறை, கொடியேற்றுதல், மிட்டாய் வழங்குதல்... அதையும் தாண்டினால், எந்த  ஜவுளிக்கடையில் தள்ளுபடி தருகிறார்கள், எந்த உணவு ஆப்பில் சலுகை விலையில் பிரியாணி கிடைக்கும், இன்றைக்கு தொலைக்காட்சியில் என்ன புதுத் திரைப்படம் என்பது தான் இன்றைய பலரின் சிந்தனையாக மாறியுள்ளது. சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள், விடுதலைக்குப் போராடிய காந்தி, நேதாஜி, சர்தார் வல்லபாய் படேல், வ.உ.சி, பாரதியார் போன்றவர்களை நினைவுகூர்வது என்பது இன்றைய தலைமுறைக்கு அபூர்வமாக மாறிவிட்டது.

இதை நினைவுபடுத்தும் விதமாகத்தான் சிறுமி ஒருவர் குறும்படம் ஒன்றை தயாரித்து சமூகத்தின் உணர்வை தட்டி எழுப்பியுள்ளார். ஹிரன் மாயா என்ற சிறுமி தான் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார். சென்னை, சேலையூர் ஜெகஜீவன் ராம் நகர் பகுதியை சேர்ந்த 10 வயதே ஆன சிறுமி ஹிரன் மாயா. இவர் இயக்கி நடித்துள்ள அந்த குறும்படத்தின் பெயர் ``இன்டிபென்டன்ஸ் டே ஃபார் சேல்’’. தமிழில் வெளியாகியுள்ள இந்த குறும்படம் தேசப்பற்று உணர்வே இல்லாமல் திரியும் நமக்கு வைக்கப்பட்ட குட்டு என்று சொல்லலாம்.  

சுதந்திர தினம் என்றாலே தள்ளுபடியில் என்ன விற்பனை செய்கிறார்கள் என கூகுளில் தேடும் நமக்கு தேசப்பற்றை ஊட்டும் படமாக இதை உருவாக்கியுள்ளார் மாயா. சுதந்திர தினத்திற்கு 50 சதவீதம் சலுகையில் கலர் பென்சில் விற்பனை செய்கிறாங்க என ஒரு மாணவி கூற மற்றொரு மாணவர் இது என்ன பிரமாதம் நான் 70 சதவீத ஆபரில் பென்சில் வாங்கியிருக்கிறேன் என்கிறார். உன்னிடம் தான் நிறைய பென்சில் இருக்கே இப்ப ஏன் மறுபடியும் வாங்கின என கேட்கும் மாணவருக்கு சலுகையில் கிடைக்கிறதால் வாங்கினேன் என்கிறார்.

சலுகை விலையில் கிடைப்பதால் எதையும் வாங்கும் நம் சமூகத்தின் மனப்போக்கை அந்த சிறுமி தன் படத்தில் பிரதிபலித்துள்ளார். சி.பி.எஸ்.இ ஆங்கில வழி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தான் உரையாட வேண்டும். அந்த பள்ளியில் படிக்கும் இரு மாணவர்கள் தங்களுக்குள் உரையாடும் போது தமிழில் ஒரு கெட்ட வார்த்தையை உச்சரிக்கிறார்கள். அதை கேட்ட ஆசிரியை அவனை சரமாரியாக திட்டுவதும் இந்த வார்த்தைய எங்கடா கத்துக்கிட்ட என ஆதங்கப்படுவதும் ஆங்கில வழி பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிகளின் நிலையை தோலுரித்து காட்டியுள்ளார்.

காந்தியடிகள் ஒருமுறை தனது அறையில் எதையோ தேடிக்கொண்டிருப்பார். அப்போது அங்கு வந்த பெரியவர்கள் சிலர் மகாத்மாஜி எதை தேடுகிறீர்கள் என சொன்னால் நாங்களும் தேடுவோமே என்றனர். அப்போது தேடும் படலத்தை அவர் கைவிடாமல் இறுதியில் மேஜைக்கு அடியில் கிடந்த சிறுதுண்டு பென்சிலை எடுத்துக்காட்டுவார். அப்போது சின்ன பென்சிலை தான் தேடினீர்களா என்பார்கள் அந்த பெரியவர்கள். இந்தியாவின் இயற்கை வளத்தை வீணடிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் காந்தியின் கொள்கையையும் தன் குறும்படத்தில் மையப்படுத்தியுள்ளார் மாயா.

பள்ளி வளாகத்தில் தூக்கி எறியப்பட்ட சிறு பென்சில்களை தனது பாக்சில் வைத்திருக்கும் சிறுவனிடம் திருடினியா என கேட்கும் ஆசிரியைக்கு, இந்த பென்சில்களை எனது ஏழை நண்பனுக்கு உதவ சேகரித்து வைத்துள்ளேன் என கூறும்போது மாயாவின் ரசனை பளிச்சிடுகிறது. இன்டிபென்டென்ஸ் டே பார்  சேல்... என்ற பாடலுடன் தொடங்கும் இந்த குறும்படத்தின் பாடலை மாயாவின் தந்தை சுரேஷ் குமார் எழுதியுள்ளார். மாயாவின் படம் இயக்கும் ஆர்வத்திற்கு மூல காரணமே அவரின் அம்மா ஜீவிதா. காரணம் அவரின் அம்மா கிணறு, சுனாமி... என 16 ஆவணப்படங்கள் மற்றும் மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளார்.

அந்த தாக்கம் தான் மாயாவை குறும்படம் இயக்க தூண்டியுள்ளது. தாம்பரம், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் ஹிரன் மாயா. சில்ட்ரன்  பிலிம் சொசைட்டி ஆப் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குறும்படம் போட்டி ஒன்றை அறிவித்தது. அந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக மாயா இந்த குறும்படத்தை ஒரே நாளில் இயக்கியுள்ளார். இதற்காக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்குள் படத்தை  முடித்துள்ளார். இதில் அவரும் நடித்துள்ளார். தாய், தந்தை உதவியுடன் கதை வசனத்தை எழுதியுள்ளார். மாயாவும் அவரது தாய் ஜீவிதாவும் இந்த படத்தில் பின்னணி குரலும் கொடுத்துள்ளனர்.

5ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் தனது பள்ளி மாணவ, மாணவிகள் 40 பேரை இதில் நடிக்க வைத்துள்ளார். படத்தில் ஆசிரியராக நடித்துள்ளவரும் மாணவிதான். ஹிந்தியும், ஆங்கிலமும் மட்டுமே அறிந்த அந்த மாணவிக்கு தமிழ் கற்பித்து நடிக்க வைத்துள்ளார். சினிமாவுக்கு பயன்படுத்தும் கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே நாளில்  முடித்துக் கொடுத்துள்ளார். தாய் ஜீவிதா கல்லூரி பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனது முதல் குறும்படத்தை இயக்கிய நிலையில் அவரது மகள் ஹிரன் மாயா 5ம் வகுப்பிலேயே தனது சாதனை பயணத்தை தொடங்கியுள்ளார்.

Tags :
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!