×

செல்லுலாய்ட் பெண்கள்

நன்றி குங்குமம் தோழி

இளமைத் துள்ளலுடன் ஓஹோ எந்தன் பேபி வாராய் எந்தன் பேபி

வைஜெயந்தியைப் பொறுத்தவரை திரையுலக வாழ்வில் வெற்றியின் முகத்தையே தரிசித்தவர். தோல்விப் படங்கள் குறைவென்றுதான் சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, வங்க மொழிப் படங்களிலும் நடித்தவர். வங்க மொழியில் ஒரு பாடலையும் கூட அவர் பாடியிருக்கிறார். அரசியல் வாழ்க்கையும் அவருக்கு அவ்வாறே ஏறுமுகமாகவே அமைந்தது. 21 ஆண்டு காலம் திரையுலகிலும், 15 ஆண்டு காலம் அரசியலிலும் கோலோச்சும் கொடுப்பினை இங்கு யாருக்கு இருந்திருக்கிறது? இப்போதும் நடனத்தை விடாமல் ஆடிக் கொண்டிருக்கிறார் இந்த நளின சுந்தரி. தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற படங்களில் அவரின் பங்கு தமிழில் மிகக் குறைவான படங்களில் நடித்தார் என்றாலும், ஏற்கனவே தமிழில் வெற்றி கண்ட பல தமிழ்ப் படங்கள் இந்தியில் எடுக்கப்பட்டபோது, அவற்றில் வைஜெயந்தி மாலாவின் பங்கு இருந்தது. அதில் பல படங்கள் இந்தியிலும் பிரமாதமாக ஓடி வெற்றியடைந்துள்ளன.

ஜெமினி கணேசன் - அஞ்சலி தேவி நடித்த ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ பெண்களின் பெரும் ஆதரவைப் பெற்று அவர்கள் கண்ணீரை மூலதனமாகக் கொண்டு வெற்றி கண்ட படம். வசீகரமும் வில்லத்தனமும் ஒருங்கிணைந்த நாகக்கன்னி  வேடமேற்று லலிதா தமிழில் அமர்க்களப்படுத்தி இருப்பார். அதன் இந்தி வடிவத்தில்  வைஜெயந்தி மாலா அந்த வேடத்தை ஏற்றதுடன் அவரும் தன் பங்குக்குப் பிரமாதப்படுத்தினார். 1956ல் சிவாஜி கணேசன் தயாரிப்பில் உருவான ‘அமரதீபம்’ மீண்டும் இந்தியில் ‘அமர்தீப்’ என்ற பெயரில் உருவானபோது, தமிழில் சாவித்திரி ஏற்ற அருணா பாத்திரத்தை வைஜெயந்தி ஏற்று நடித்தார்.
ஸ்ரீதர் இயக்கத்தில் தமிழின் பெரும் வெற்றிப் படமான ‘கல்யாணப் பரிசு’ மீண்டும் அவரது இயக்கத்திலேயே ‘நஸ்ரான்’ என்ற பெயரில் இந்தி வடிவம் பெற்றது.  சரோஜாதேவி ஏற்ற கதாநாயகி வேடத்தை வைஜெயந்தி ஏற்று நடித்தார்.

தெலுங்கிலும் தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்த ‘ராமுடு பீமுடு’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ மீண்டும் 1967ல் இந்தியில் ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்று மறு பிறப்பெடுத்தபோது, அதில் சரோஜா தேவி ஏற்ற பிரதான நாயகியாக வைஜெயந்தியே நடித்தார். நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் மின்னாமல் போன படம்
அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் (Johnston McCulley) புகழ் பெற்ற நாவல்களில் சாகசங்கள் நிகழ்த்தக்கூடிய டான் டியாகோ போலவே இரட்டை வேடங்கள் ஏற்று, மர்மவீரன் என்ற சொந்தப் படமொன்றைத் தயாரித்தார் நடிகர் ஸ்ரீீராம். இப்படத்தில் சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன், எஸ்.வி. ரங்காராவ், வி.கே.ராமசாமி போன்ற  புகழ் மிக்க பல நட்சத்திரங்களையும் தன் அழைப்பின் பேரில் நட்புக்காக கௌரவ வேடம் ஏற்க வைத்தார். வைஜெயந்தி மாலா படத்தின் நாயகி. இவர்கள் தவிர, ராஜ சுலோசனா, எம்.என்.ராஜம், சந்திரபாபு, சித்தூர் வி. நாகையா போன்றவர்கள் பிரதான வேடமேற்று நடித்தார்கள். ஆனால், ஸ்ரீராம் எடுத்துக்கொண்ட அந்தப் பெரு முயற்சி வெற்றி பெற முடியாமல், படம் தோல்வியைச் சந்தித்தது.

இறுதி வரை திரை வடிவம் பெறாத சோழன் செல்வன் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் 1958 ஆம் ஆண்டில் முழுமூச்சுடன் இறங்கினார் எம்.ஜி.ஆர். நாடோடி மன்னனுக்குப் பின் மீண்டும் தானே படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார் அவர். ஜெமினி கணேசன், சாவித்திரி, பத்மினி, சரோஜா தேவி, எம்.என்.ராஜம், நாகேஷ் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். நாயகன் வந்தியத்தேவனாகவும் வைஜெயந்திமாலா நாயகி குந்தவையாகவும் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் நாவலின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பவர்கள் அல்லவா இருவரும். ஆனால், படம் தொடங்குவதற்கு முன்னதாகவே அந்த முயற்சி ஏனோ கைவிடப்பட்டது. அதன் பின் பலரும் முயற்சி செய்தும் பொன்னியின் செல்வன் திரை வடிவம் பெறவேயில்லை.

இரத்தினபுரியின் கண்கவரும் இளவரசி மந்தாகினி’வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படம் வைஜெயந்தியின் திரை வாழ்வில் மறக்க முடியாத படமாக அவருக்கு அமைந்தது. இரத்தினத் தீவின் இளவரசி மந்தாகினியாக கர்வமும் கம்பீரமும் அதிகாரத் திமிரும் முகத்திலும் உடலிலும் தெறிக்க, அழகின் ஒட்டுமொத்த உருவமாக இப்படத்தில் அவர் தோன்றினார். அழகிய இளைஞனான அடிமை ஒருவன் மீது முரட்டுத்தனமாக ஒருதலைக் காதல் கொள்ளும் அப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் எரிச்சலை ஏற்படுத்தினார். கிட்டத்தட்ட வில்லி வேடம்தான். ஒரு படத்தில் இரு நாயகிகள் இருந்தால் அவர்களில் ஒருவர் அப்பாவியாகவும், மற்றவர் எதிர்மறை நாயகியாகவும் இருந்தே தீர வேண்டுமென்பது திரைக்கதைக்குக் கட்டாயம் அல்லவா? படத்தின் இறுதியில் அவள் மாண்டும் போக வேண்டும் என்பதும் விதி. நாயகனைக் காதலிக்கும் பத்மினி இறுதியில் நாயகனை மணக்க, திமிர் பிடித்த இளவரசியோ அவனுக்கு எதிராகவே காரியங்களாற்றிச் சாகிறாள். தமிழகத்தில் 100 நாட்கள் மிகப் பிரமாதமாக ஓடியது இப்படம்.

மீண்டும் ‘ராஜ் திலக்’ என்ற பெயரில் இந்தியில் எஸ்.எஸ்.வாசன் இப்படத்தைத் தயாரித்தபோது, ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி என அதே நட்சத்திரப் பட்டாளமே பங்கேற்றது படத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறியது. இந்தியிலும் படம் பெரு வெற்றி பெற்றதுடன், 1958ன் மிக வெற்றிகரமான பெண் நட்சத்திரம் என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை வைஜெயந்தியைப் பாராட்டி எழுதியது. அகில இந்திய நட்சத்திரம் அல்லவா? எதிர்மறை நாயகியானாலும் பத்திரிகைகள் பாராட்டியே தீர வேண்டும் என்பதும் ஊடக விதி. என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே 1959ஆம் ஆண்டில் மீண்டும் ஜெமினி நிறுவனத்தின் சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பு, இயக்கத்தில் ‘பைகாம்’ இந்திப் படத்தில் திலீப் குமாருடன் இணைந்து நடித்தார் வைஜெயந்திமாலா. உடன் சரோஜா தேவி, பண்டரிபாய் போன்ற தென்னக நட்சத்திரங்களுடன் முக்கியமான வேறு ஒரு மூத்த நடிகையும் அப்படத்தில் இணைந்து நடித்தார். அவர் வைஜெயந்தியின் தாயாரும் முன்னாள் கதாநாயகியுமான வசுந்தரா தேவி.

நிஜ வாழ்க்கையில் தாயும் மகளும் என்றாலும் இருவரும் நீதிமன்றம், வழக்கு என்று பிரிந்தே வாழ வேண்டிய சூழல். இந்த வழக்கின் பின்னணியில் பாட்டி யதுகிரியே இருந்தார் என்பது பெரும் சோகம். தாய் - மகள் என்ற அற்புதமான உறவைக் கடந்து பொருளாதாரமே இவர்களின் உறவைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தது. மகளையும் கணவரையும் பிரிந்து தனிமையிலும் மன உளைச்சலிலும் உழன்று கொண்டிருந்த வசுந்தராவையும் பாட்டி யதுகிரி அம்மாள், தந்தையார் இருவரின் பாதுகாப்பில் இருந்த வைஜெயந்தியையும் இப்படத்தின் மூலம் எஸ்.எஸ்.வாசன் ஒன்று சேர்த்து வைத்தார். முதலாளி - தொழிலாளி பிரச்சனை பற்றிப் பேசிய இப்படம் வசூலிலும் பெரும் சாதனை படைத்தது. அதன் எதிரொலியாக அடுத்த ஆண்டே ‘இரும்புத்திரை’ என்ற பெயரில் இப்படம் தமிழில் தயாரானது. இந்திப் படத்தில் பங்கேற்ற அதே சரோஜாதேவி, பண்டரிபாய் இவர்களுடன் மீண்டும் வசுந்தரா தேவியும் வைஜெயந்தியும் தாயும் மகளுமாக இப்படத்திலும் இணைந்து நடித்தார்கள்.

படத்திலும் கணவர் ரங்கா ராவைப் பிரிந்து தன் மகளுடன் தனித்து வாழும் சோகமே உருக் கொண்ட தாயாக வசுந்தரா நடித்திருப்பார். ‘என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே.. என் அன்னையே’ என்று அவருக்கு அற்புதமான ஒரு பாடலும் உண்டு. தாய்க்கும் மகளுக்குமான பிரச்சனையின் பிரதிபலிப்பாகவே அப்பாடல் தோன்றும். வசுந்தராவுக்காகப் பாடியவர் எம்.எல்.வசந்தகுமாரி. வசுந்தரா தேவி இந்தப் படத்துக்குப் பின் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

வைஜெயந்தியின் தமிழ்ப் படங்கள்

முதல்முறையாக நாகேஸ்வரராவ் இணையாக ‘அதிசயப் பெண்’ படத்தில் நடித்தார். ஆனால், அது தோல்விப் படமாக அமைந்தது பெரும் சோகம். மீண்டும் சிவாஜி கணேசனுடன் இணைந்து ‘ராஜ பக்தி’ படத்தில் நடித்தார் வைஜெயந்தி. ஆனால், வைஜெயந்தியுடன் பெரும் நட்சத்திரங்களான பி.பானுமதி, பத்மினி, ஈ.வி.சரோஜா, பாலையா போன்றவர்களின் பாத்திரங்கள் படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், படமும் சொல்லிக் கொள்ளும்படியாக ஓடவில்லை; அதனால் மக்கள் மனங்களிலும் அது தங்கவுமில்லை; பெரிதாகத் தாக்கம் எதையும் ஏற்படுத்தவுமில்லை. ஆனால், இதை ஈடு செய்யும் விதமாக மீண்டும் ஒரு ராஜா - ராணி கதையில் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்தார்.

1942ல் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினம் ‘பார்த்திபன் கனவு’ 1960களில் திரை வடிவம் பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளிலும் கூட தயாரிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் படம் வெற்றி பெற்றதுடன், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. ‘பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா? பாடலை மறக்க முடியுமா? பாடல்கள் அத்தனையும் இனிமை என்று சொல்வதே மிகக் குறைவான விமர்சனம். இதே ஆண்டில் எம்.ஜி.ஆரின் இணையாக ‘பாக்தாத் திருடன்’ படத்தில் இஸ்லாமியப் பெண்ணாக வேடமேற்றார். அவருடன் வைஜெயந்தி நடித்த ஒரே படம் இது. மீண்டும் ஸ்ரீதர் இயக்கத்தில் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்ததன் மூலம் மூவரும் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தைப் படைத்தார்கள்.

வண்ணமயமான காஷ்மீர், கருப்பு  வெள்ளையில் மனதைப் பறித்தது. நகைச்சுவையும் பஞ்சமில்லாமல் ‘தேன் நிலவு’ படத்தில் விருந்தாகப் பரிமாறப்பட்டது. பாடல்கள் இன்று வரை கிறங்க வைக்கின்றன. படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். ‘காலையும் நீயே.. மாலையும் நீயே’, ‘பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா’, ‘ஓஹோ எந்தன் பேபி’ அத்தனையும் இளமைத் துள்ளலுடன் கூடிய மயக்கும் பாடல்கள். இளமையான வைஜெயந்தி அக்கால இளைஞர்களையும் இளம் பெண்களையும் கொள்ளை கொண்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பொதுவாகவே அவரது படங்களின் பாடல்கள் அவருக்காகவே ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டவையோ என்று கூட சில நேரங்களில் தோன்றும்.  மீண்டும் சிவாஜி கணேசனுடன் இணைந்து 1963ல் ‘சித்தூர் ராணி பத்மினி’ படத்தில் ராணி பத்மினியாக நடித்தார். இயக்குநர் ஸ்ரீதர் வசனம் எழுதியிருந்தும் பிரபல நட்சத்திரங்கள் பானுமதி, பத்மினி, பண்டரிபாய் என நான்கு நாயகிகள் இருந்தும் ஏனோ அப்படம் சரியாகப் போகவில்லை.

கடந்த ஆண்டு தீபிகா படுகோன் நடிப்பில் இந்தியில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘பத்மாவத்’ படத்துடன் ஒப்பிடும்போது, இப்படம் சிறப்பாகவே இருந்தது. தேவையற்ற வீண் சர்ச்சைகள், கலாட்டாக்கள் மூலமே அப்படம் பேசப்பட்டது. இப்படமே வைஜெயந்தி இறுதியாக நடித்த தமிழ்ப்படம் என்று சொல்லப்பட்டாலும், இதற்கு அடுத்து இரண்டாண்டுகள் இடைவெளியில் அவர் டி.ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து ‘ நாம் இருவர்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், வந்த சுவடே தெரியாமல் அது தியேட்டரை விட்டு ஓடிப் போனது. அதன் பின் தமிழ்த் திரையுலகிலிருந்து நிரந்தரமாக விடை பெற்று, இந்தித் திரைப்பட நடிகையாக மட்டுமே தொடர்ந்தார்.  சிவாஜியுடன் மூன்று படங்களிலும் மற்றும் ஜெமினியுடன் இந்தி உட்பட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் வைஜெயந்தி. திரைப்படங்களில் நடிப்பதை எல்லாம் ஒதுக்கி வைத்து, அரசியலில் களம் கண்டு, பின் அங்கிருந்தும் விலகி வந்து, நடனம் மட்டுமே தனக்கான கலை என்று தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

இருபதாண்டுகள் கடந்த இடைவெளியில் மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப் பட்டது. ஆம், 1989ல் தெலுங்கின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தயாரிப்பில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தில் அதிகாரம் மிக்க மாமியார் பாத்திரத்தில் நடிக்க, சிரஞ்சீவி அழைப்பு விடுத்தபோது, நாசூக்காக அதை மறுத்து விட்டார். எதிர்மறை பாத்திரங்களில் நடிப்பதால் இதுவரை இல்லாத ஒரு இமேஜ் உருவாகிவிடும் என்பதாலேயே அதை மறுத்தார். பின்னர் ஸ்ரீவித்யா அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இவர் நடித்த இந்திப் படங்களில் பெரும்பாலும் பரதம், குச்சுப்புடி, கதக், நாட்டுப்புற நடனம் என்று எந்த வகையையும் மிச்சம் வைக்காமல்  பலவித மான நடனங்களையும் ஆடியவர். அதே போல பாடல் காட்சிகளிலும் அவருக்கு வாய்த்த பாடல்கள் அனைத்தும் தேனினும் இனியவை.

அரசியல் களத்திலும் நீடித்து நின்றவர்

1984 பாராளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் பழுத்த அரசியல்வாதியான இரா.செழியன். பாராளுமன்ற உறுப்பினராக திரையுலகப் பிரபலம் என்பதால் எளிதாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி அவருக்கு வழங்கியது. செழியன், வைஜெயந்திமாலாவை தனக்குச் சரி சமமான போட்டியாளராகக் கருதவில்லை. அதனால் தன்னுடைய பரப்புரையில் ‘என்னை லோக் சபாவுக்கும் வைஜெயந்தி மாலாவை ஆர்.ஆர்.சபாவுக்கும் அனுப்புங்கள்’ என்று பேசி வந்தார். (ஆர்.ஆர்.சபா என்பது சென்னையில் மியூசிக் சீஸனில் கர்நாடக சங்கீதமும் நடனமும் நிகழ்த்தப்படும் பிரபலமான கலையரங்கம்.) ஆனால், நடந்ததோ வேறு.

எதிர்பாராதவிதமாக அல்லது அதிர்ஷ்டவசமாக 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் வைஜெயந்திமாலா 313,848 வாக்குகள் பெற்று, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏறக்குறைய 51.92 சதவீத வாக்குகளை மக்கள் அவருக்கு அளித்து வெற்றி பெறச் செய்தார்கள். மக்களின் விருப்பத்துக்கேற்ப அவரும் பாராளுமன்றத்துக்குச் சென்றார். மீண்டும் 1989 தமிழகப் பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். இம்முறை அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆலடி அருணா. 12584 வாக்குகள் வித்தியாசத்தில் மறுபடியும் வெற்றி பெற்றார் வைஜெயந்தி. பின்னர், 1993ல் ராஜ்ய சபாவின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1999ல் அப்பதவியை ராஜினாமா செய்ததுடன், காங்கிரஸை விட்டு விலகி 1999, செப்டம்பர் 6ல் பா.ஜ.க.வில் இணைந்தார்.

சொந்த வாழ்க்கையின் சுவடுகள்

1968ல் வைஜெயந்திமாலா, சமன்லால் பாலி என்பவரைக் காதலித்து மணந்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சுசீந்திர பாலி என்று ஒரே மகன். திருமணத்துக்குப் பின் படிப்படியாகப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டே வந்தவர், 1970க்குப் பின்னர் முற்றிலும் திரைத்துறையை விட்டு ஒதுங்கி, நடனத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். திரையை விட்டு விலகி 14 ஆண்டுகளுக்குப் பின் வேறு ஒரு களத்தைத் தேர்வு செய்தார். அது அரசியல் களம், அங்கும் 15 ஆண்டுகள் நிதானமாக நீடித்து நிலைத்து நின்றார். 1986ல் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவின் காரணமாக சமன்லா பாலி மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். மகன் சுசீந்திர பாலியும் தமிழ், இந்தி என ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னாள் நடிகைகளின் தோற்றத்துடன் சில நடிகைகள் திரைத்துறையில் நடிக்க வந்திருக்கிறார்கள்.

அவர்கள் பெரும்பாலும் பெரிய அளவுக்கு வெற்றி பெறுவதில்லை. ஆனால், வைஜெயந்தி மாலாவின்  தோற்றத்தை ஒத்து 60களில் அதே உயரம், மெலிந்த உடல்வாகு, அபார அழகுடன் நடிக்க வந்தவர் நடிகை பாரதி. வைஜெயந்தியின் சில புகைப்படங்களைப் பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும். நீள்வடிவ முகம், கூரான நாசியும் முகவாயும் என அப்படியே வைஜெயந்தியை நினைவூட்டுவார் பாரதி. தமிழில் அவர் அதிகம் நடிக்காவிட்டாலும் கன்னடத் திரையுலகில் நம்பர் ஒன்னாக அவர் திகழ்ந்தவர். அதேபோல 80களில் இயக்குநர் பாரதிராஜாவால்  அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ராதா, ஆரம்ப கால வைஜெயந்தியை நினைவூட்டுவார். வாழ்க்கை, பெண் படங்களில் மிக இளம் வயது வைஜெயந்தி சற்றே உருண்டை முகமாகத் தோன்றுவார். ராதாவும் மெலிந்த தேகமும் நெடுநெடு வளர்த்தியும் வைஜெயந்தியைக் கண் முன் நிறுத்துவது போல் அவரது ஆரம்ப காலப் படங்களில் அவ்வாறே இருந்தார். அவரும் தமிழ், தெலுங்கு என்று பன்மொழி நாயகியாகத் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். இது என்னுடைய பார்வை; மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை.

(ரசிப்போம்!)

Tags : girls ,
× RELATED பாபநாசம் வட்டாரத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி முகாம்