மறுமை என்றொரு மகத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

பிறப்பு, இளமை, வாலிபம், முதுமை, மரணம் இவ்வளவுதான் வாழ்க்கை. இதில் பலர் இந்தப் பருவங்களை அனைத்தையும் கடந்துதான் மரணிப்பார்கள் என்று கூறமுடியாது. இப்படி நிலையற்ற வாழ்க்கைதான் இந்த உலக வாழ்க்கை. இதில் மனிதனின் மறைவிற்குப் பிறகு மறுமையில் ஒரு வாழ்க்கை உள்ளது என்பதே பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. மதங்களும், அறநூல்களும் யாருக்கும் கெடுதல் செய்யாமல், நோய் நொடியின்றி வாழ வேண்டும் எனப்போதிக்கின்றன. ஆனால், இன்றைய பொருளாதாரமயம், உலகமயமாக்கலில் மனிதன் தனித்து விடப்படுகிறான். யாருக்கும் எந்தவித கெடுதல் செய்யாதவர்களையும், வாழ் நாளெல்லாம் குழந்தைகளுக்காக கஷ்டப்பட்டு உழைத்த பெற்றோர்களையும் கொடிய உயிர்க்கொல்லி நோய்களான இருதய நோய், புற்றுநோய், நுரையீரல் நோய் (COPD), நீரிழிவு நோய் (Diabetes Mellitus), சிறுநீரக நோய், பக்கவாதம், அல்சைமர்ஸ் மனச்சிதைவு (alzheimer) போன்ற நோய்கள் தனிமைப் படுத்தி விடுகின்றன.

கேன்சர் முற்றிய நிலையில் உள்ளவர்கள், அதேபோல் இன்னபிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வலியினாலும், உடல் சார்ந்த பிரச்னைகளாலும் அவதிப்படுகிறார்கள். அந்நேரம் இந்த உலகத்தில் வாழ்வதைவிட செத்துவிடலாம் என்றும் கூட சிலர் நினைக்கத் தோன்றும். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களது வாழ்நாளை நீட்டிக்க அளிக்கப்படும்  சிகிச்சை  ‘பாலியேட்டிவ் கேர்’ என அழைக்கப்படும் வலி நிவாரண சிகிச்சை. சென்னை, மதுரை போன்ற நகரங்களில் இதற்காகவே பிரத்யேகமாக மருத்துவமனையை நிறுவி வலியற்ற உலகத்தைக் காட்டிவருகிறார் மருத்துவர் ரிபப்ளிகா. தீவிர சிகிச்சை பிரிவு என அழைக்கப்படும் ஐசியூ ( ICU- intensive care unit) என்றொரு பிரிவை அமைத்து அதற்கு ‘மறுமை’ என்ற பெயரில் சிகிச்சை அளித்து வருவது பற்றி விளக்கினார். “மருத்துவத்தைத் தொழி லாக அல்லாமல் சேவை மனப் பான்மையோடு கடந்த 20 ஆண்டு காலமாக  செய்து வருகிறேன்.

குறிப்பாக நான் தேர்ந்தெடுத்திருக்கும் துறை ‘இவர்களை இனிமேல் காப்பாற்ற முடியாது’ என கைவிடப்படுபவர்களை அவர்களது கடைசிக்காலம் வரை வைத்துப் பராமரிப்பது ஆகும். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களை பெற்ற பிள்ளைகளால் கூட கவனிக்க முடியாத பரபரப்பான சூழல் இன்று உள்ளது. அவர்களை எனது மருத்துவமனையில் வைத்துத் தாங்க முடியாத வலியுள்ள எந்த நோயாக இருந்தாலும், வலி நிவாரண சிகிச்சை அளித்து வாழும் நாட்களை சந்தோஷமாக்கிக் கொண்டிருக்கிறேன். இதற்காக ஆர்.எம்.டி என்ற பெயரில் மருத்துவமனை மற்றும் காப்பகம் அமைத்துப் பராமரித்து வருகிறேன். இன்றைக்கு பெரும்பாலும்  பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை உயிர்க்கொல்லி நோய்கள் தாக்கி வருகின்றன. இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு மரணத் தருவாயில் இருப்பவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கவனிக்க வேண்டும்.

இதற்குத் தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண மருத்துவமனைகளில் 15 ஆயிரம் ரூபாயும் செலவாகிறது. இது எல்லோருக்கும் சாத்தியமற்றது. குறிப்பாக ஏழைகளுக்கு எட்டாக்கனி. அவ்வாறு ஐ.சி.யூ-வில் வைத்துக் கவனிக்க முடியாதவர்களை பராமரிக்க வேண்டும் என்று அமைக்கப்பட்ட பிரிவுதான் ஆர்எம்டி-யின் ஓர் அங்கமான மறுமை என்னும் பிரிவு.  இதில் ஏழைகளுக்கு இலவசமாகவும், நடுத்தர மக்களுக்கு 50 சதவிகித குறைந்த கட்டணத்திலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வலியால் அவதிப்படும் நோயாளிகளுக்கு வலியற்ற மறு உலகத்தைக் காண்பிப்பதாலும், அவர்களது உடல் நலத்தை  உயர்த்தி அவர்களின் அத்தியாவசிய வேலைகளை அவர்களே செய்யும்படியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாங்க முடி யாத வலியால் பாதிக்கப்பட்டு உயிர் பிரிந்தால்கூட பரவாயில்லை என்று துடிக்கிறவர்களை வலியில்லாத அமைதியான உலகத்திற்குக் கொண்டு செல்வதால் இதற்கு இப்பெயர் உள்ளது.

சேவை மனப்பான்மையோடு நடத்தப்படுவதால் பெரும்பாலானவர்கள் பயனடைந்து வருகின்றனர். மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை பராமரிக்க மனமிருந்தும் எவ்வாறு பராமரிப்பது என்பது தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினர்,  உறவினர்கள் நோயின் உண்மைத்தன்மைத் தெரியாமல் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைக்கழிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நோயாளிகளும், முதியோர்களும் இங்கு கடைசிக்கட்டத்தில் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். மரணத்தைத் தடுத்து நிறுத்த இயலாது என்பது உண்மை என்றாலும், நோயினால் வரும் வலி, வேதனைகள் குறைவதால் இங்குள்ள நோயாளிகள் நன்றாகவே உள்ளனர். இதயநோய் நிபுணர்கள், அவசர சிகிச்சை மருத்துவர்கள் (Critical Care Specialist), மயக்கவியல் (Anesthesia Specialist) வல்லுநர்கள் டாக்டர் ஸ்ரீராம், டாக்டர் மெய்யப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவாக இயக்கப்படுகிறது. மேலும், இங்கு செவிலியர் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருவதால் பயிற்சி பெற்ற செவிலியர்களைக் கொண்டு இந்நோயாளிகளைப் பராமரிக்க முடிகின்றது.

நோயாளியின் இறுதிக் கட்டமாக இருந்தாலும்கூட அவர்களை வீட்டிற்கு அனுப்பாமல் கடைசி காலம் வரை இங்குத் தங்கி சிகிச்சைபெற வசதி செய்யப்பட்டுள்ளது. வாழ்வை நீட்டிக்கச் செய்ய வெண்டிலேட்டர் வசதி வேண்டுமா அல்லது இந்தக் கருவிகள் எதுவும் இல்லாமல் உயிர் பிரியும் கடைசிக் காலம் வரை அமைதியாக இருக்க வேண்டுமா என்பதை நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து ஆலோசித்து எவ்வளவு தீவிர சிகிச்சைத் தேவை என்பதைத் தீர்மானிப்பார்கள்.நோயாளியின் அன்றாட நிகழ்வுகளை வாட்ஸப் மூலம் வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களும், இங்கிருக்கும் குடும்பத்தினரும் தெரிந்துகொள்ளும்படி செய்வதால் நம்பகத்தன்மை உள்ளது. மிக மிகக் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை என்றாலும்கூட தரமான சிகிச்சையே வழங்கப்பட்டு வருகிறது. இவைகளைத்தாண்டி இறுதிக்கட்டத்தில் கொண்டு வந்து சேர்த்தவர்களைக்கூட சில மருந்துகளைக் குறைத்தும், தேவையான சிகிச்சையை அளிப்பதாலும் பல நோயாளிகள் மறுவாழ்வு பெற்று வீட்டுக்குச் சென்றுள்ளனர். செமி கோமா நிலையில் வந்து சேர்ந்தவர்கள் கூட சிகிச்சையில் குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். பாலியேட்டிவ் கேர் சிகிச்சை என்பது வலிகளுக்கு ஒரு வரம் என்று சொல்லலாம்” என்றார்.

தோ.திருத்துவராஜ் 

Related Stories: