காதல் மலரும் தருணம்

நாம் மகிழ்ச்சியற்றிருக்கும் தருணங்களில் ஆழமாக காதலில் விழுகிறோம். - பாமுக் இன்று வெளியாகும் நாளிதழ்களின் பக்கங்களை நிரப்பும் முக்கிய செய்தி கள்ளக்காதல். ஆண்களைவிட பெண்களே இதில் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் இந்த சம்பவங்களில் பெண்களே அதிகமான வசவுகளுக்கும், எள்ளலுக்கும் உள்ளாக்கப் படுகின்றனர். எந்தச் சூழலில், என்ன காரணத்தால் ஒரு பெண் தன் கணவன், குழந்தையைவிட்டு இன்னொரு ஆணைத் தேடிப்போகிறாள் என்பதைப் பற்றி ஆழமாக எதையுமே நாம் ஆய்வு செய்வதில்லை. அப்படிச் செய்யாமல் இந்தப் பிரச்னைக்குச் சரியான தீர்வைக் காண முடியாது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலையிலிருந்து எதையுமே நாம் பார்ப்பதில்லை. இப்படி திருமணம் தாண்டிய காதல் விவகாரங்களில் எதையெல்லாம் கவனிக்காமல் விட்டோமோ அதையெல்லாம் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்துகிறது ‘In the mood for love’. தனிமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஓர் இளம் பெண்.

Advertising
Advertising

தன்னைப்போலவே தனிமையில் தவிக்கும் ஓர் ஆணைச் சந்திக்கும்போது இருவருக்குள்ளும் மலரும் காதல் தருணங்கள் தான் இந்தப் படத்தின் ஒரு வரிக் கதை. பிரிட்டனின் காலணி ஆதிக்கத்தின் கீழ் ஹாங்காங் இருந்த காலகட்டம். அப்போது கப்பல் நிறுவனத்தில் செகரட்டரியாகப் பணிபுரியும் சூ என்ற இளம் பெண் நகரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்புக்குப் புதிதாக குடிவருகிறாள். அவள் குடியேறும் அதே நாளில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சௌ என்ற பத்திரிகையாளரும் குடிவருகிறார். கணவர் வெளிநாட்டில் வேலை செய்வதால் எந்த துணையுமின்றி தனியாக இருக்கிறாள் சூ. அவளுக்கு குழந்தைகள் இல்லை. அதனால் பல நேரங்களில் இரவு உணவை வீட்டில் சமைக்காமல் வெளியிலேயே சாப்பிடுகிறாள். இரவுத் தனிமையில் உறங்காமல் தவிக்கிறாள். வெறுமை படர்ந்த அவளின் வாழ்வை மலர்ச்சியற்ற முகமும் மௌனமும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சௌவின் மனைவியும் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாட்டுக்குச் செல்வதால் அவரும் ஒருவித தனிமைக்கு அகப்படுகிறார்.

சூவும், சௌவும் பக்கத்துப் பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி சந்தித்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பேசிக்கொள்வதில்லை. வெளிநாட்டில் இருக்கும் சூவின் கணவனுக்கும், சௌவின் மனைவிக்கும் இடையே தொடர்பு இருப்பதை இருவருமே அறிகிறார்கள். அதை அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. இருவரின் பகலும் இரவும் மெதுவாக நகர்கிறது. தனிமையின் வெக்கையும் வெறுமையின் விரக்தியும் சூவுக்கும் சௌவுக்கும் இடையே காதலை மலர்விக்கிறது. ஆனால், இருவரும் திருமணமானவர்கள் என்பதால் அக்காதலை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்கிறார்கள். காதலைப் போலவே அவர்களின் பிரிவும் மென்மையாக இருக்கிறது. வேலை நிமித்தமாக பிளாட்டை காலி செய்துவிட்டு இருவரும் வெவ்வேறு ஊருக்குப் போய்விடுகிறார்கள். வருடங்கள் கடந்தாலும் வெளியே சொல்லாமல் மனதுக்குள் பூட்டி வைத்த காதல் அவர்களை தொந்தரவு செய்கிறது. இதே மனநிலையில் தான் வெளிநாட்டில் இருக்கும் தங்களின் துணைவர்களும் காதலில் விழுந்திருப்பார்கள் என்று சூவும் சௌவும் உணர்கிறார்கள்.

மூன்று வருடங்கள் கழித்து தான் வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சௌ வருகிறார். அங்கே சூ இருப்பதில்லை. சூவும் சில நாட்கள் கழித்து அங்கே வருகிறாள். சௌ அங்கே இருப்பதில்லை. இருவருக்கும் எதையோ இழந்த உணர்வு. சௌ அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறார். அது தூசி படிந்த சாளரத்தின் வழியே பார்க்க முடிந்தும் தொட முடியாததாய் இருக்கிறது. மேலும் அவர் பார்க்கும் அனைத்தும் மங்கலாகவும் தெளிவின்றியுமே புலப்படுகின்றன. அது வொரு அமைதியற்ற தருணம். அவர் அருகில் நெருங்கி வர ஏதுவாய் தன் தலை கவிழ்ந்து நிற்கிறாள் சூ. ஆனால், அப்போதும் நெருங்கி வர அவரால் முடிவதில்லை. சூ அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்து விடுகிறாள். படம் முடிகிறது. திருமணத்தை தாண்டிய உறவு தவறா? சரியா? என்று எந்த மெசேஜையும் இந்தப் படம் சொல்லவில்லை. மாறாக அப்படியான உறவுக்குப் பின்னணியாக இருக்கும் காரணிகளை, சூழலை அழகாக செல்லுலாய்டில் பதிவு செய்கிறது திரைக்கதை.

எளிமையான ஒரு கருவை எடுத்துக்கொண்டு அற்புதமான படைப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வாங் கர் வாய். கிறிஸ்டோபர் டாயலின் கேமரா தனிமையின் ஒவ்வொரு நொடியையும் லாவகமாக கவித்துவமாக பதிவு செய்திருக்கிறது. ஒளிப்பதிவு இந்தப் படத்தின் கதையை அப்படியே ஆழத்திற்குக் கொண்டு செல்கிறது. இதைப்போல் நிறையப் பேர் ஒளிப்பதிவை முயற்சித்தார்கள். ஆனால், யாராலும் இந்தளவுக்கு தத்ரூபமாக படமாக்க இயலவில்லை. அமைதியினூடான காட்சிகளில் வரும் பின்னணி இசை நம் மனதை அறுத்தெறிகிறது. காதல், தனிமை, தவிப்பு போன்ற மென் உணர்வுகளுக்கு இசையின் மூலம் உயிரூட்டியிருக்கிறார்கள் இசையமைப்பாளர்கள் Michael Galasso, Shigeru Umebayashi. இத்திரைப்படம் மிகச்சிறந்த காட்சி அனுபவம். மனித உணர்வுகள் ஊசலாடும் பெண்டுலத்தை போல அமைதியிழந்து தனிமையில் தவிக்கும் இரு உள்ளங்களின் மாபெரும் காதல் காவியம்.

த.சக்திவேல்

Related Stories: