×

கொலை... கொள்ளை... என்கவுன்டர்... சீர்காழியை அலறவிட்ட துப்பாக்கி சத்தம்

* 4.30 மணி நேரத்தில் போலீஸ் சுற்றிவளைத்தது எப்படி?
* பிடிபட்ட 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்

தமிழகத்தில் கொலை, கொள்ளை வழக்கில் சுற்றி வளைக்கப்படும் குற்றவாளிகள் தங்களை காப்பாற்றி கொள்ள போலீஸை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்ப முயன்றபோது என்கவுன்டர் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பெரும்பாலான என்கவுன்டர்கள் சிறிது காலம் ஆனாலும், சீர்காழியில் நேற்று நடந்த என்கவுன்டர் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காரணம், தாய் மற்றும் மகனை கொன்று 16 கிலோ தங்க நகைகளுடம் தப்பிய வடமாநில கொள்ளையனை 4 மணி நேரத்தில் என்கவுன்டரில் போலீஸ் சுட்டுகொலை செய்ததுதான். இந்த வடமாநில கொள்ளையனை போலீசார் போலீசார் சுற்றிவளைத்தது எப்படி?

கொள்ளையர்கள் எதற்காக 2 பேரை கொன்று ₹6 கோடி மதிப்பு நகைகளை கொள்ளையடித்து சென்றனர்? என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிப்பவர் தன்ராஜ் சவுத்ரி (50). அருகே உள்ள தருமகுளத்தில் நகை அடகு கடை நடத்தி வரும் இவர், மொத்தமாக நகைகளை வாங்கி வந்து சிறிய கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி ஆஷா (45). இவர்களது மகன் அகில் (24). இவரது மனைவி நெகல் (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்த 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தந்தைக்கு துணையாக மகன் அகிலும் அதே அடகு கடையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் தன்ராஜ் வீட்டு கதவை சிலர் தட்டினர். இதனால் ஆஷா வீட்டு கதவை திறந்து பார்த்தார். அப்போது கத்தியுடன் வீட்டுக்குள் 3 மர்ம நபர்கள் நுழைந்தனர். திடீரென வீட்டில் இருந்த ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை அவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் தாயும், மகனும் கீழே சரிந்து பலியாகினர். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த தன்ராஜ், மருமகள் நெகல் ஆகியோர் வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ஆஷா, அகில் ஆகியோர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் மர்மநபர்கள் 3 பேர் கத்தியுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து சத்தம் போட்டனர்.

ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் தன்ராஜ், நெகல் ஆகியோர் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போடக்கூடாது என மிரட்டினர். மேலும் 3 பேரில் ஒருவன் கைத்துப்பாக்கியை காட்டியும் மிரட்டி உள்ளான். வீட்டில் நகைகளை எங்கு வைத்துள்ளீர்கள் என்று 3 பேரும் கேட்டனர். கட்டிலுக்கு அடியில் உள்ள லாக்கரில் நகைகள் இருப்பதாக 2 பேரும் கூறியதோடு, அதற்கான சாவி இருந்த இடத்தையும் காண்பித்தனர். இதையடுத்து 3 பேரில் ஒருவன், லாக்கரை திறந்து அதில் இருந்த 17 கிலோ நகை மற்றும் ரொக்கப்பணம், வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து கொண்டான்.

இதையடுத்து வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தன்ராஜின் கார் சாவியை 3 பேரும் வாங்கிக் கொண்டு தன்ராஜ், நெகல் ஆகியோரின் கையில் கத்தியால் கிழித்து விட்டு 2 பேரையும் வீட்டுக்குள் வைத்து வெளித்தாழ்ப்பாள் போட்டு விட்டு காரில் அங்கிருந்து தப்பினர். வீட்டுக்குள் இருந்தவாறு தன்ராஜ், நெகல் ஆகியோர் சத்தம் போட்டனர். இந்த சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கதவை திறந்தனர். பின்னர் இதுகுறித்து சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்பி நாதா, டிஎஸ்பி யுவபிரியா, இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தீவிர வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொள்ளையர்கள் தன்ராஜின் காரை, அத்தியூர் ஊராட்சி பட்டவிளாகம் செல்லும் ரோட்டில் பணிக்கிருப்பு கிராமத்தில் சாலையோரம் நிறுத்திப்பட்டுள்ளதாகவும், மேலும் சீர்காழி அருகே எருக்கூரில் இருந்து ஓளையாம்புத்தூர் செல்லும் சாலையின் அருகே உள்ள வயல் பகுதியில் 3 பேர் பையுடன் நின்று கொண்டிருப்பதாகவும்,

அவர்கள் வெளிமாநிலத்தவர்களை போல் இருந்தனர் என்றும் போலீசாருக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு எஸ்பி நாதா தலைமையில் தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, வயல் பகுதியில் கொள்ளையர் 3 பேரும் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் வயலில் இறங்கி மெல்ல மெல்ல நடந்து சென்று கொள்ளையர் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர். போலீசை கண்டதும் கொள்ளையர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, ஒரு கொள்ளையன்  மட்டும் அருகில் கிடந்த பனை மட்டையால் போலீசாரை தாக்கினான்.

மேலும், இரு போலீசாரை தள்ளி விட்டு விட்டு, தப்பி ஓடி அருகில் இருந்த சவுக்கு தோப்புக்குள் நுழைந்தான். சரணடைந்து விடும் படி போலீசார், சொல்லியதையும் கேட்காமல் ஓடியதால், போலீசார் துப்பாக்கியால் 2 முறை சுட்டனர். இதில் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து  அவன் அந்த இடத்திலேயே இறந்தான். மற்ற 2 கொள்ளையர்களையும் கைது செய்தனர்.போலீஸ் நடத்திய விசாரணையில் சுட்டுக்கொல்லப்பட்டவன், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகிபால் சிங் (21) என்பதும், பிடிபட்டவர்கள் அதே மாநிலத்தை சேர்ந்த மணிஷ் (30), ரமேஷ் (25) என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் வசிக்கும் கருணாராம் (40) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கும்பகோணம் போலீசார் அவரையும் கைது செய்தனர். பிடிபட்ட 3 பேரையும் வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: இந்த கொள்ளையில் தொடர்புடைய கருணாராம், சுட்டுக்கொல்லப்பட்ட மகிபால்சிங் மற்றும் மணிஷ், ரமேஷ் ஆகிய 4 பேருமே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மகிபால்சிங், மணிஷ் ஆகியோர் கும்பகோணத்தில் உள்ள ஒரு எலக்டிரிக் கடையில் வேலைபார்த்து வந்தனர். அதே பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். ரமேஸ் ஜெயங்கொண்டத்தில் பிளைவுட் கடையில் வேலைபார்த்து வந்தார்.

மகிபால்சிங், மணிஷ், ரமேஸ் ஆகிய 3 பேரும் நண்பர்கள். கருணாராம், கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகே உள்ள ஜான் செல்வராஜ் நகரில் செருப்பு கடை நடத்தி வருகிறார். 20 வருடமாக முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியில் வசித்து வருகிறார். அதோடு, ராஜஸ்தானில் இருந்து தங்கத்தை வாங்கி வந்து, சிறிய நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள சிறிய நகை கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். தன்ராஜிம் இதே தொழிலை செய்து வந்ததால், இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில் தன்ராஜுடம் அதிகளவில் பணம் மற்றும் நகைகள் இருப்பது கருணாராமுக்கு தெரியவந்தது. இதனால் நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க அவர் திட்டமிட்டார்.

சுட்டுக்கொல்லப்பட் மகிபால் சிங்குக்கும், கருணராமுக்கும் பழக்கம் இருந்தது. இதை பயன்படுத்தி தன்ராஜ் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அதன்படி 3 பேரையும் நேற்று அதிகாலை காரில் ஏற்றி வந்து, தன்ராஜ் வீடு அருகே இறக்கி விட்டு, சீர்காழி பைபாஸ் சாலையில் காரில் காத்திருந்தார். நகை, பணத்தை மட்டும் கொள்ளையடியுங்கள் என்று கருணாராம் கூறி அனுப்பி வைத்தாராம். ஆனால் வீட்டின் உள்ளே சென்றதும், தாயையும், மகனையும் கொள்ளையர்கள் கொலை செய்து விட்டனர். பின்னர் நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, நடந்த சம்பவத்தை கருணாராமிடம் செல்போனில் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கருணாராம் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு தப்பி விட்டார்.

பின்னர் கொள்ளையர்கள் தன்ராஜின் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி உள்ளனர். தன்ராஜ் காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி உள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு தான், காரில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை கொள்ளையர்கள் பார்த்துள்ளனர். இனிமேலும் இந்த காரில் சென்றால், போலீசிடம் சிக்கிக்கொள்வோம் என்று பயந்து காரை நிறுத்தி விட்டு வயலில் இறங்கி ஓடியுள்ளனர். அப்போது விவசாயிகள் பார்த்து தெரிவித்ததால், விரைந்து சென்று கொள்ளையர்களை மடக்கினோம். வயலில் பிடிபட்ட 2 கொள்ளையர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கருணாராம் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளோம். தன்ராஜும் ராஜஸ்தானை சேர்ந்தவர் தான்.

அவர் சொந்த மாநிலத்துக்கு செல்லும்போதெல்லாம் அங்கு நடக்கும் கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக நன்கொடை வழங்குவாராம். இதை தெரிந்து கொண்ட கருணாராம், நாமும் அதுபோல் வசதியாக வாழ வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர் தாக்குதலில் காயமடைந்த தன்ராஜ், இவரது மருமகள் நெகல் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய், மகனை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதும்,

கொள்ளையர்களின் ஒருவன் 4.30 மணிநேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதும் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, நடந்த சம்பவத்தை கருணாராமிடம் செல்போனில் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கருணாராம் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு தப்பி விட்டார். கருணாராம், ராஜஸ்தானில் இருந்து தங்கத்தை வாங்கி வந்து, சிறிய நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள சிறிய நகை கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். தன்ராஜிம் இதே தொழிலை செய்து வந்ததால், இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

லலிதா ஜூவல்லரி கொள்ளையனின் கூட்டாளி
கைது செய்யப்பட்ட கருணாராமும், திருச்சி லலிதா ஜீவல்லரியில் கொள்ளையடித்த கும்பல் தலைவன் திருவாரூரை சேர்ந்த முருகனும் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. முருகனிடம் இருந்து திருட்டு நகைகளை கருணாராம் வாங்கி இருக்கலாம் என்ற அடிப்படையிலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

2 துப்பாக்கியும் டம்மி
வயலில் சிக்கிய கொள்ளையர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. இந்த 2 துப்பாக்கியுமே டம்மி துப்பாக்கி என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த டம்மி துப்பாக்கியை வைத்து தான் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

பலாத்காரம் செய்ய முயற்சியா?
சுட்டுக்கொல்லப்பட்ட மகிபால் சிங், தன்ராஜின் வீட்டுக்குள் இருந்த போது அவரது மருமகள் நெகலை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதை தடுத்ததால் தான் கணவர் அகிலும், மாமியார் ஆஷாவும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

4.30 மணி நேரத்தில் சிக்கினர்
கொள்ளையர்கள் தன்ராஜ் வீட்டில் காலை 6.45 மணியளவில் தப்பிச்சென்றனர். 11.15 மணியளவில் வயலில் அவர்கள் சிக்கினர். மாவட்ட எல்லையை தாண்டுவதற்குள் 4.30 மணி நேரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.

மயிலாடுதுறையில் ஐஜி முகாம்
மத்திய மண்டல ஐஜி ஜெயராம் நேற்று மாலை 5 மணியளவில் வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்துக்கு வந்தார். இரவு 11 மணி வரை அவர் அங்கிருந்து கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தினார். இதன்பின், மயிலாடுதுறையில் தங்கி, விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்.

இரு போலீசார் காயம்
வயலில் சுற்றி வளைத்த போது, மகிபால் சிங் போலீசாரை தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடினான். இதில் எஸ்பி தனிப்படை போலீஸ்காரர் முகமது சாலிக்குக்கு (34) தோள்பட்டையிலும், புதுப்பட்டினம் போலீஸ்காரர் சுதாகருக்கு(48) கையில் லேசான சிராய்ப்பு காயமும் ஏற்பட்டது. முகமது சாலிக் மட்டும், சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

நான்கரை கிலோ நகை எங்கே?
17 கிலோ தங்க நகை, ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனதாக தன்ராஜ் தரப்பில் போலீசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் 12 கிலோ 408 கிராம் தங்கம், ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மீதி நான்கரை கிலோ தங்கம் என்ன ஆனது தெரியவில்லை. மீதி நகைகளை கொள்ளையர்கள் வயலில் எங்காவது பதுக்கி வைத்திருக்கிறார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
தன்ராஜ் வீட்டில் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, ஆஷாவும், அவரது மகன் அகிலும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். வீடே ரத்தக்களறியாக காட்சி அளித்தது. இதைப்பார்த்து அப்பகுதி மக்கள் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

தமிழகத்தில் இதுவரை நடந்த என்கவுன்டர்கள்
1975ம் ஆண்டு தமிழகத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. 1979ம் ஆண்டு அப்பாவு என்பவரும், 1980ம் ஆண்டு பாலனும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலை மூலமே என்கவுன்டர் என்ற புதிய அனுகுமுறையை காவல்துறையினர் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர். 1984ல் சீவலப்பேரி பாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார். 1996ம் ஆண்டு சென்னையில் நுங்கம்பாக்கம் அருகே பிரபல ரவுடி ஆசைத்தம்பி போலீஸார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் தூத்துக்குடியைச் சேர்ந்த வெங்கடேச பண்ணையார் 2003ம் ஆண்டு என்கவுன்டர் செய்யப்பட்டார்.

இதையடுத்து சென்னையின் முக்கிய ரவுடிகளில் ஒருவராக கருதப்பட்ட அயோத்திக்குப்பம் வீரமணி இதே ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்‌. 2004ம் ஆண்டு நடந்த என்கவுன்ட்டரில் சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2006ம் ஆண்டு சென்னை கூடுதல் ஆணையராக இருந்த ஜாங்கிட் தலைமையிலான காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி பங்க் குமார் உயிரிழந்தார். 2007ம் ஆண்டில் முக்கிய ரவுடிகளான வெள்ளை ரவி மற்றும் மணல்மேடு சங்கரும், 2008ம் ஆண்டில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த பாபா சுரேசும் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.

அதன் பின் 2010ம் ஆண்டு கோவையில் 2 சிறுவர்களை கடத்தி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஓட்டுநர் மோகன்ராஜ், தப்பியோட முயன்றபோது காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றனர். சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளை வழக்கில், பீகாரைச் சேர்ந்த இளைஞர் 5 பேர், 2012ம் ஆண்டு என்கவுன்டர் செய்யப்பட்டனர். 2015ம் ஆண்டு, ரவுடி கிட்டப்பாவும், 2017ல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவுடி கோவிந்தன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2018ம் ஆண்டு மார்ச் மாதம், மதுரை சிக்கந்தர்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், ரவுடிகள் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் உயிரிழந்தனர்.

அதே ஆண்டு ஜூலை மாதம் ரவுடி ஆனந்தன் சென்னை தரமணியில் நடந்த என்கவுன்டரில் உயிரிழந்தார். 2019ல் சென்னையில் ரவுடி வல்லரசு சுட்டுக்கொல்லப்பட்டான். சேலம் கரியாப்பட்டியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முயன்ற ரவுடி கதிர்வேல் என்பவரை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

Tags : Murder ... Robbery ... Encounter ... The sound of gunfire roaring down the drain; How did the police round up at 4.30 pm? .. 3 people caught confessing
× RELATED மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய்...