தச்சநல்லூரில் சுகாதாரக்கேட்டை உருவாக்கும் நீரோடை; சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

நெல்லை: நெல்லை மாநகரில் தச்சநல்லூர் மண்டலம் 2வது வார்டுக்கு உட்பட்ட பிரான்குளம் பகுதியில் உள்ள நீரோடையில் மழைநீர் வடிந்தோடி ரயில்வே பாதையின் கீழ் உள்ள பாலத்தின் வழியாக அருகிலுள்ள குளத்திற்கு செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த நீரோடையில் மழைநீர் தேங்கி பாசிபிடித்திருப்பதால் கொசு, ஈ அதிகரித்திருப்பதோடு, இங்கு கொட்டப்படும் குப்பைகள் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. அருகிலுள்ள பொதுமக்கள் இந்த நீரோடையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இந்த ஓடையின் ஒருபகுதி அடைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்த வரும் கழிவுநீரும் இந்த கால்வாயில்தான் கலக்கிறது.

இந்நிலையில் இந்த நீரோடையின் மேல் உள்ள பாலங்கள் உடைந்திருப்பதோடு, அதில் மணல் விழுந்து அடைத்திருப்பதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த நீரோடையின் அருகே இருந்த வழிப்பாதைகள் அனைத்தும் சேரும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் நடந்து செல்வதே பெரும் சிரமாக உள்ளது. இந்த நீரோடையில் வீட்டுக்கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக இப்பகுதிகளில் தோண்டப்பட்ட சாலைகள் எல்லாம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இப்பணிகள் முடிவடைந்தால் மட்டுமே இந்த நீரோடையில் வீட்டுக் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும். மேலும் இப்பகுதி மக்கள் இந்த நீரோடையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். அதோடு சுகாதாரக்கேட்டை உருவாக்கும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள இந்த நீரோடையின் மேலுள்ள பாலங்களை சரிசெய்து அருகிலுள்ள குளத்திற்கு தண்ணீர் செல்வதற்கு மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: