×

கல்லூரி கட்டணம் பாக்கி வைத்துள்ளதால் ஒடிசாவில் கூலி வேலை செய்யும் மாணவி

புவனேஸ்வர்: கல்லூரி கட்டண பாக்கி வைத்துள்ளதால் சான்றிதழ் பெறுவதற்காக ஒடிசாவில் மாணவி, கூலி வேலை செய்து வருகிறார். ஒடிசா மாநிலம், புரி மாவட்டம் காரடிபிதா கிராமத்தை சேர்ந்தவர் ரோஜி பெகேரா (20). தனியார் கல்லூரியில் 2019ம் ஆண்டு டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்தார். குடும்ப வறுமை காரணமாக கல்வி கட்டணத்தில் ரூ.25,000-ஐ செலுத்த முடியவில்லை. இதனால் அவருக்கு கல்வி சான்றிதழை கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை. ரோஜி பெகேராவுக்கு 4 தங்கைகள். அவர்களில் ஒருவர் பி.டெக். படித்து வருகிறார். மற்றொருவர் 12ம் வகுப்பு படிக்கிறார்.

இவர்கள் 3 பேரும் தற்போது நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து தொழிலாளிகளாக வேலை பார்க்கின்றனர். தினமும் 3 பேருக்கும் தலா ரூ.207 ஊதியம் கிடைக்கிறது. இதன்மூலம் பணம் சேர்த்து கல்வி கட்டணத்தை செலுத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து ரோஜி பெகேரா கூறுகையில், நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எனது பெற்றோருக்கு என்னையும் சேர்த்து 5 மகள்கள். எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலமோ, வீடோ கிடையாது. பெற்றோர் கூலி வேலை செய்கின்றனர். நானும் எனது தங்கைகளும் படித்து முன்னேற விரும்புகிறோம். 2019ம் ஆண்டிலேயே டிப்ளமோ படிப்பை நிறைவு செய்து விட்டேன்.

ஆனால் முழு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் கல்வி சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்போது நூறு நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து பணம் சேர்த்து வருகிறேன். எனது 2 தங்கைகளும் என்னோடு சேர்ந்து வேலை பார்க்கின்றனர். கடைசி 2 தங்கைகள் 7, 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் சிறுமிகள் என்பதால் வேலைக்கு அழைத்து வரவில்லை’ என்றார். ரோஜி பெகேரா குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, ஒடியா திரைப்பட நடிகை ராணி பாண்டா கூறும்போது, “கல்வி கட்டணம் செலுத்துவதற்காக மாணவி ரோஜி கூலி வேலை செய்து வரும் செய்தியை அறிந்து அவரது வங்கி கணக்குக்கு ரூ.25,000 அனுப்பியுள்ளேன். அவர் மேல்படிப்பை தொடரவும் உதவி செய்வேன்” என்றார்.

Tags : Student ,laborer ,Odisha , Student working as a laborer in Odisha as he has outstanding college fees
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...