×

எனது அழுத்தத்தை குறைத்து என்னை காப்பாற்றியது கேப்டன் கோஹ்லிதான்: ரகானே உருக்கம்

கேப்டன் கோஹ்லியின் ஆலோசனைதான் என்னை காப்பாற்றியது. இந்திய அணியில் எனக்கான இடம் எப்போதும் இருக்கும். எனவே அது குறித்து  எனக்கு கவலையில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே  தெரிவித்துள்ளார். இங்கிலாந்து - இந்தியா இடையே டெஸ்ட், ஒரு நாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றிபெற்றால் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். இதனால் இந்த தொடரில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி உறுதியாக உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்ததுடன், டெஸ்ட் தொடரை அபாரமாக வென்று நாடு திரும்பிய ரஹானேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் ரகானே மனம் திறந்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலி தான் கேப்டனாக இருப்பார். நான் அவருக்கு உறுதுணையாக துணை கேப்டனாக இருப்பேன். கோலியுடனான எனது உறவு எப்போதுமே சுமுகமாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய தொடரில் எனது பேட்டிங்கை அவர் பாராட்டியுள்ளார். இருவருமே இந்திய அணிக்காக உள்நாட்டிலும், அந்நிய மண்ணிலும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடியுள்ளோம்.

அதனாலேயே பேட்டிங்கில் அவா் 4வது வீரராகவும், நான் 5வது வீரராகவும் இறங்குகிறோம். களத்தில் எதிரணி பௌலிங் குறித்து பகிர்ந்துகொள்வோம். கேப்டனாக இருப்பது பெரிய விஷயமல்ல. அந்தப் பொறுப்பில் இருந்துகொண்டு நாம் எவ்வாறு செயலாற்றுகிறோம் என்பதே முக்கியமானது. அந்த வகையில் இதுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வந்திருக்கிறேன். இனியும் அப்படியே செயலாற்றுவேன் என நம்புகிறேன். கோஹ்லி இல்லாத சூழ்நிலையில் இந்திய அணியை வழிநடத்துவது எனது பணி. அப்போது  இந்திய அணியின் வெற்றிக்காக சிறந்த கேப்டன்ஷிப்பை வெளிப்படுத்த வேண்டியது  எனது பொறுப்பு. ஒரு நல்ல கேப்டனை உருவாக்குவது அணியின் அனைத்து வீரா்களே.

ஆஸ்திரேலிய தொடரின் வெற்றி அணியினருக்கு கிடைத்த வெற்றியே. இந்திய அணியில் என்னுடைய இடம் எப்போதும் சிக்கலில் இருந்தது இல்லை. என்னை தூக்கி விடுவார்களோ என்று நான் கவலைப்பட்டதும் இல்லை. எனக்கு எப்போதுமே அணி நிர்வாகம் முழு நம்பிக்கை அளித்தது. என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி, முறையான வாய்ப்பை வழங்கி வந்தனர். என் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்து இருந்தனர். நான் சில மாதங்கள் சரியாக ஆட முடியாமல் கஷ்டப்பட்டேன். பார்மிற்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டேன். அது எனக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்தது. கேப்டன் கோஹ்லிதான் எனக்கு ஆலோசனை வழங்கினார்.

என்னை சரியான பாதைக்கு திருப்பியது கேப்டன் ஹோக்லிதான். அவர்தான் என்னை காப்பாற்றியது. உங்களுடைய கேப்டன் உங்களை சப்போர்ட் செய்கிறார் என்பது பெரிய பலத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kohli ,Raghane , It was Captain Kohli who relieved me of my stress: Raghane melted
× RELATED டி20 உலக கோப்பையில் விராட் கோஹ்லி நீக்கமா?: முன்னாள் வீரர்கள் காட்டம்