×

துப்பாக்கி சூட்டில் விவசாயி சாகவில்லை : உபி போலீசார் மறுப்பு


பரேலி:உத்தரபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் திப்தீபா கிராமத்தை சேர்ந்தவர் நவ்ரீத் சிங் (28). ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி முடித்து விட்டு, சமீபத்தில்தான் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அடுத்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. அடிப்படையில் விவசாயியான அவர், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியதும், சிக்ரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகளுடன் இணைந்து, இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் போராட்டத்தின் போது அவர் ஏறிச் சென்ற டிராக்டர், ஒரு திருப்பத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  டிராக்டரின் கீழ் சிக்கிக் கொண்ட அவர், அதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கலவரத்தின் போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதால்தான் அவர்  உயிரிழந்தார் என்று போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். ஆனால் இறந்த விவசாயியின் உடலில் துப்பாக்கி குண்டு ஏதும் இல்லை என்றும் டிராக்டர் கவிழ்ந்ததால்தான் அவர் உயிரிழந்தார் என்று உத்தரபிரதேச மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பரேலி ஏடிஜிபி அவினாஷ் சந்திரா நேற்று இரவு கூறுகையில், ‘‘இன்று 3 டாக்டர்கள் அடங்கிய குழுவினர், இறந்த விவசாயியின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதில் அவரது உடலில் துப்பாக்கி குண்டு ஏதும் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். டிராக்டர் கவிழ்ந்ததில் அவர் அடியில் சிக்கிக் கொண்டார் என்பதும் அதனால் காயமடைந்து அவர் உயிரிழந்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த குற்றச்சாட்டும் கூறாமல் அவரது உடலை  குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். இன்று இரவு அவரது இறுதிச்சடங்கு அமைதியான முறையில், அவரது சொந்த கிராமத்தில் நடந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.


Tags : shooting ,UP , உபி போலீசார்
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை