×

தென்மாவட்டங்களில் அதிமுக 75 தொகுதிகளில் தோற்கும் : சசிகலா ஆதரவு போஸ்டரால் நீக்கப்பட்ட நிர்வாகி ஆவேசம்

நெல்லை:சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய நெல்லை அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தென் மாவட்டங்களில் 75 தொகுதிகளில் அதிமுக தோற்கும் என நீக்கப்பட்ட நிர்வாகி ஆவேசமாக கூறினார்.அதிமுகவில் நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக இருப்பவர் சுப்பிரமணியராஜா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சி பணிகளில் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து விடுதலையானதை முன்னிட்டு நேற்று முன்தினம் பாளை பகுதிகளில் ‘அதிமுகவை வழி நடத்த வரும் ெபாதுச்செயலாளரே வருக, வருக, வாழ்க, வெல்க’ என குறிப்பிட்டு சசிகலா படம் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டினார்.

அதிமுக நிர்வாகி ஒட்டிய இந்த போஸ்டர் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுப்பிரமணிய ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சுப்பிரமணியராஜா கூறியதாவது: அதிமுகவை பொறுத்தவரை சசிகலா முக்கியமானவர். சசிகலாவை உதாசீனப்படுத்தினால் தென்மாவட்டங்களில் 75 தொகுதிகளில் அதிமுக தோற்கும். சசிகலாவோடு கைகோர்த்து அதிமுக இயங்குவதே நல்லது. சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, கருப்பண்ணன் உள்ளிட்டோர் பேசியுள்ளனர். ‘தினகரனுக்கும் எங்களுக்கும் நடப்பது பங்காளி சண்டை, நாளையே இணைவோம்’ என அமைச்சரே சொல்கிறார். அத்தகைய அமைச்சர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? நான் சாதாரண தொண்டன் என்பதால் என்னை மட்டும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து கூட நீக்குகின்றனர்.

கூட்டணி கட்சியான தேமுதிக ெபாருளாளர் பிரேமலதா கூட சசிகலா விடுதலையாவதை வரவேற்கிறார். அவர் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என தெரிவித்தார். அதற்காக கூட்டணியில் இருந்து அவர்களை கழட்டி விட முடியுமா? என்னை ெபாறுத்தவரை அன்றும், இன்றும், என்றும் அதிமுகதான். தொண்டர்கள் சசிகலாவை விரும்புகின்றனர். அதைதான் நான் சொன்னேன். என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடியிலும்
போஸ்டர்

இந்நிலையில் தூத்துக்குடியிலும் சசிகலாவை வரவேற்று, ``நட்பின் பரிசுத்தமே வருக. அடிமட்ட தொண்டனையும் அரியணை ஏற்றிய அம்மாவின் அவதாரமே வருக. ஆளுமையை உருவாக்கிய ஆளுமையே வருக...’’ என்ற வாசகங்களுடன் அதிமுக நிர்வாகி (அதிமுக முன்னாள் பெருநகர எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்) ராபர்ட் ஹென்றி என்பவர் சசிகலா, ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் படங்களுடன் தனது படமும் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : AIADMK ,constituencies ,Sasikala , சசிகலா
× RELATED ஈரோடு மேற்கு, காங்கயம்: தொகுதிகளை...