37 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மீது வழக்குப்பதிவு: டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டதாக 19 பேர் கைது... 50 பேரிடம் விசாரணை

புதுடெல்லி: குடியரசு நாளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது, நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் 19 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 50 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர டிராக்டர் பேரணிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட 37 விவசாய சங்கங்களின் தலைவர்கள் மீதும் டெல்லி மற்றும் உத்தரபிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த போலீசார் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று, விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி சென்றனர். அந்த பேரணியில் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.தொடர்ந்து நடந்த கல்வீச்சிலும், போராட்டக்காரர்கள் எதிர்தாக்குதல் நடத்தியதாலும் 400க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் போராட்டக்காரர்களில் சிலர் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு, தேசியக் கொடியை கீழிறக்கி, அந்த கம்பத்தில் பிரிவினைவாத கொடியை பறக்க விட்டனர். இதையடுத்து கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், கடுமையான தடியடி நடத்தியும் போலீசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீஸ் உயரதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் 2ம் நாளாக நேற்றும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறை தொடங்கியது. டிராக்டர் பேரணியின் போது வன்முறைகளில் ஈடுபட்டதாக நேற்று இரவு வரை 19 பேரை, டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 50 பேரை பிடித்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் அடிப்படையில் இன்றும் கைது நடவடிக்கைகள் தொடரும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்ஸவா கூறுகையில், ‘‘வன்முறைகளில் ஈடுபட்டதாக இதுவரை 19 பேரை கைது செய்துள்ளோம். 25க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளோம். 50 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். வன்முறைகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூட தப்ப முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.மேலும் டிராக்டர் பேரணிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ராகேஷ், டிகைட், குர்நாம்சிங் சாதுனி, யோகேந்திர யாதவ் உள்ளிட்ட 37 விவசாய சங்கங்களின் தலைவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களை தவிர பஞ்சாப்பை சேர்ந்த நடிகர் தீப் சிந்து, பிரபல தாதா லக்கா சாதனா ஆகியோர் மீதும் வன்முறைகளில் ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேளாண் சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கலாம் வேளாண் சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் வரும் பிப்.20ம் தேதி வரை தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட ஆய்வுக்குழு அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளுக்கு ஏற்ப, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அந்தக்குழு தற்போது அறிவித்துள்ளது.

ஏற்கனவே சர்ச்சையில் தீப் சிந்து?

பஞ்சாப்பை சேர்ந்த நடிகர் தீப் சிந்து, பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட அளவிலான பொறுப்பில் தற்போதும் உள்ளார். துவக்கத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் ஆர்வமாக கலந்து கொண்டார். ஆனால் அவரது நடவடிக்கைகள் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. போராட்டத்தை குலைக்க மத்திய அரசால் அனுப்பப்பட்டுள்ள நபர் இவர் என்று கூறி, போராட்டங்களில் கலந்து கொள்ள அவருக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தடை விதித்து விட்டனர். போராட்டத்தில் அவரை சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து சங்கங்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் டிராக்டர் பேரணியில் ஆயிரக்கணக்கானோருடன் அடையாளம் தெரியாமல் தனது ஆதரவாளர்களான 100க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் தீப் சிந்து பங்கேற்றுள்ளார். டெல்லி செங்கோட்டைக்கு ஆதரவாளர்களுடன் சென்ற தீப் சிந்து, விவசாயிகளையும் தூண்டி விட்டு அழைத்து சென்றுள்ளார். அங்கு தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டதற்கும், பிரிவினைவாதக் கொடி ஏற்றப்பட்டதற்கும் அவரே காரணம் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு?

டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்த விரிவான அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில், டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். மேலும் அதில் ஏராளமான ஆவணங்களையும், சான்றுகளையும் இணைத்துள்ளனர். அதன் அடிப்படையில் டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று இன்று டெல்லி போலீசார் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Related Stories: