×

முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா : தமிழகம் முழுவதும் கோலாகலம்

சென்னை: தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகள் உள்பட எல்லா முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பழநி கோயிலில் தைப்பூசவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா காரணமாக பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. எனினும், கடந்த 2 நாட்களாக பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது.

முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி இன்று காலை 5 மணிக்கு வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியானில் சண்முகநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 11 மணிக்கு மீன லக்னத்தில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர்.கிழக்கு ரத வீதியில் புறப்படும் தேர் தெற்கு, மேற்கு வடக்கு வீதி வழியாக மீண்டும் நிலையை வந்தடையும். தேரோட்டத்தை காண நேற்று காலை முதலே பழநியில் பக்தர்கள் குவிய துவங்கினர்.

 நகர் முழுவதும் பச்சை மற்றும் காவி உடை உடுத்திய மனித தலைகளே தென்படுகின்றன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் ஆடிய காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது. வின்ச் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர்.

மலைக்கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் வடக்கு கிரிவிதீயில் உள்ள குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானைப்பாதை மூலமாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிவழிப்பாதையை பயன்படுத்தும் வகையிலும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.  சாலை நெடுகிலும் பல்வேறு அமைப்பினர் சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவுகள், குடிநீர், பிஸ்கட், பழங்கள், பால், டீ போன்றவற்றை இலவசமாக வழங்கினர்.  பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வந்தும், கும்மியடித்தும் வழிபாடு நடத்தினர்.

திருப்பரங்குன்றம்

தைப்பூசத்தையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை பழநியாண்டவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதன்பின் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கின்றனர். சிறப்பு பூஜையை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருச்செந்தூர்

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி விரதமிருந்த பக்தர்கள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், அருப்புக்கோட்டை, விகேபுரம், பாவூர்சத்திரம், குருக்கள்பட்டி, சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்தனர். இன்று தைப்பூச திருவிழாவையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு கடலில் தீர்த்தவாரியும், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.

Tags : Tapuasa festival ,Murugan ,Kuala agalam ,Tamil Nadu , முருகன்
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...