உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் விடுதலை குறித்து நாளைக்குள் ஆளுநர் முடிவு : ரவிச்சந்திரன் பரோல் வழக்கில் தமிழக அரசு தகவல்

மதுரை:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:என் மகன் ரவிச்சந்திரன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் உள்ளார். இந்த வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக எனது மகனுக்கு 3 மாத பரோல் கேட்டு அரசிடம் மனு செய்தேன். மத்திய அரசின் சட்டப்பிரிவின் கீழ் எனது மகன் தண்டனை பெற்றதால், பரோல் வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியாது என கூறி தமிழக அரசு எங்களது கோரிக்கையை நிராகரித்தது. இதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. எனவே, என் மகனுக்கு நீண்ட கால பரோல் அல்லது 2 மாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு வக்கீல் ஆனந்தராஜ் ஆஜராகி, ‘‘தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழக ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் ஜனவரி 29க்குள் (நாளை) முடிவெடுப்பார். அவரது முடிவு வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார்.

வக்கீல் திருமுருகன் ஆஜராகி, ‘‘அதுவரை பரோல் வழங்க வேண்டும்’’ என்றார்.இதையடுத்து மனு மீதான விசாரணையை பிப்.5க்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: