நேபாளத்தில் நடந்த போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்!: ஆரத்தி எடுத்தும் பட்டாசு வெடித்தும், சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நாகை: நேபாளத்தில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய தடகள வீரருக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு கிராமத்தை சேர்ந்த வசிஷ்ட விக்னேஷ் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். விவசாய குடும்பத்தை சேர்ந்த வசிஷ்ட விக்னேஷ், நேபாளத்தில் இந்தோ - நேபாள சர்வதேச இளைஞர் விளையாட்டுகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் கடந்த 18ம் தேதி நடந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.

நீளம் தாண்டுதலில் 7.17 மீட்டர் நீளம் தாண்டி வசிஷ்ட விக்னேஷ் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தை வென்றார். நேபாளத்தில் நடந்த போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்ந்த வசிஷ்ட விக்னேஷ், சொந்த ஊரான தேத்தாக்குடி தெற்கு கிராமத்திற்கு வந்தார். அவருக்கு கிராம எல்லையில் மக்கள், ஆரத்தி எடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். வெற்றி வீரராக திரும்பிய விக்னேஷுக்கு உறவினர்களும், கிராம மக்களும் மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்தினர்.

பின்னர் விக்னேஷ் அவரது தந்தை வேலாயுதம் ஆகியோர் மாட்டு வண்டியில் வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ்.கே. வேதாரத்தினம் உள்ளிட்ட கிராமத்தினர் பங்கேற்றனர். கடந்த 2019ம் ஆண்டு நேபாளத்தில் நடந்த 6வது இந்தோ நேபால் யூத் கேம்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸில் பங்கேற்று நீளம் தாண்டுதல் போட்டியிலும் விக்னேஷ் தங்கம் வென்றிருந்தார். தொடர் வெற்றியால் ஆசிய போட்டிகளில் பங்கேற்க வசிஷ்ட விக்னேஷ் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: