விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரம்: காயமடைந்த டெல்லி காவலர்களை நேரில் சென்று நலம் விசாரித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியின்போது காயமற்ற போலீசாரை சந்தித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர்ர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் 2 மாதங்களை கடந்து விட்டது. இச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகின்றது. இது தொடர்பாக 11 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்து விட்டன.

போராட்டத்தின் ஒரு கட்டமாக, நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் தடுப்புக்களை அகற்றிய விவசாயிகள், திடீரென டெல்லிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதை தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அங்குள்ள கொடி மரத்தில் ஏறி, சீக்கிய மத, விவசாய கொடிகளை ஏற்றினர். இதனிடையே விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போலீசார் சுட்டதால் ஒரு விவசாயி இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. விவசாயிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மேலும் தடுப்புகளை அத்துமீறிய போது, டிராக்டர் கவிழ்ந்து அந்த விவசாயி உயிரிழந்தார் என டெல்லி போலீசார் விளக்கம் அளித்தனர். இது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்களை விரட்ட, பல இடங்களில் போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். டெல்லி வன்முறை குறித்து டெல்லி போலீசார் கூறுகையில்; விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 25 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும்  பேரணியில் காயமடைந்த காவல்துறையினருக்கு சுஷ்ருதா சிகிச்சை மையம், தீரத் ராம் ஷா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை மருத்துவமனைக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து அவர்களது உடல்நலம் பற்றி கேட்டறிந்து உள்ளார். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தார். இதன்பின்னர் அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார்.

Related Stories: