கும்மனூரில் எருது விடும் திருவிழா -300 காளைகள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூரில் நடந்த எருதுவிடும் திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூர் கிராமத்தில் 5ம் ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று காலை தொடங்கி, மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது. இந்த விழாவினை திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஊர்கவுண்டர் வீரப்பன், மந்திரிகவுண்டர் கிருஷ்ணன், ஊர் கணக்குப்பிள்ளை முருகேசன், வரி கவுண்டர்கள் பெரியசாமி, மாதையன், பெருமாள், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் குறிப்பிட்ட தூரத்தை ஓடி கடப்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அதில் எந்த காளை குறைந்த நேரத்தில் ஓடி கடந்ததோ அந்த காளையின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. அதன்படி, மொத்தம் 54 காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசாக ₹5 லட்சம் வழங்கப்பட்டது. தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: