வேதாரண்யம் பகுதியில் நெல் அறுவடை மும்முரம் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

வேதாரண்யம் : வேதாரண்யம் தாலுகாவில் நெல் அறுவடையில் மகசூல் இழப்பால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வேதாரண்யம் தாலுகாவில் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் 25 ஆயிரம் ஏக்கர் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி அழுகி முளைக்க துவங்கியது. இந்நிலையில் ஆட்களை வைத்து கூடுதல் கூலி கொடுத்து அறுவடை பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். வடமழை, மணக்காடு, தென்னடார், கரியாபட்டினம் உள்ளிட்ட பகுதியில் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை நடக்கிறது.

அறுவடை இயந்திரம் போதுமான அளவு இல்லாததால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.3,250 வாடகை கொடுக்க வேண்டியுள்ளது.நெல் விளைச்சல் பாதிப்பு, இயந்திரம் வாடகை உயர்வு, ஆட்கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் அறுவடைக்கு கூடுதல் செலவாகிறது. வேதாரண்யம் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் துவங்கிய நிலையில் மழை பாதிப்பால் ஏக்கருக்கு 30 மூட்டை கிடைக்க வேண்டிய நிலையில் 10 முதல் 15 மூட்டைகள் மட்டுமே கிடைக்கிறது.

எனவே மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு, 100 சதவீத காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>