தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 4.32 டன் மஞ்சள் பறிமுதல்-4 பேர் கும்பல் கைது

தூத்துக்குடி : தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 4.32 டன் மஞ்சள், மஞ்சள் பவுடர் உள்ளிட்ட பொருட்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கையில் மஞ்சள், மஞ்சள் பவுடர், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் அவற்றை இங்கிருந்து சிலர் இலங்கைக்கு கடத்திக் கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்று அதிக பணம் சம்பாதித்து வருகின்றனர். சுங்கவரி ஏய்ப்புக்காகவும் இந்த கடத்தல் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடத்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து தூத்துக்குடியிலும், இலங்கையிலும் சில முகவர்களுக்குள் போன் மூலம் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்குள் பல ஆயிரம் டன் விரளி மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்று பிடிபட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி, ராமேஸ்வரம் கடற்பகுதிகளை கடலோர காவல்படை, மரைன் போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி, முள்ளக்காடு, கோவளம் கடற்கரையிலிருந்து மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கியூபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா, எஸ்ஐ ஜீவமணி தங்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது 8 பேர் கும்பல் லாரியில் கொண்டு வந்த விரளி மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய மூடைகளை, படகில் ஏற்ற முயன்றனர். அவர்களை கியூ பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் 4 பேர் சிக்கினர். 4 பேர் தப்பியோடி விட்டனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன்(60), தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் சந்தியாகு மகன் ஜெபமணி (38), சாயர்புரம் காமராஜ்நகர் சுப்பிரமணியன் மகன் அரிச்சந்திரன் (20), தூத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரம் லாரி டிரைவர் பாலகணேசன் (50) என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 2.82 டன் விரளி மஞ்சள், மஞ்சள் பவுடர் 1.5 டன், ஏலக்காய் 125 கிலோ, 135 பெட்டிகள் சிகரெட் பேப்பர் மற்றும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பொருட்களை கியூபிரிவு போலீசார், முத்தையாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

தப்பியோடிய தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர், செல்வம், அஜித், வசந்த் ஆகிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு விரளி மஞ்சள் கடத்துவது தொடர்கதையாகி வரும் நிலையில் கடல்வழி பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.

Related Stories: