மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் வேளாண் இயக்குநர் ஆய்வு

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோமுகி அணை நிரம்பியதை அடுத்து கச்சிராயபாளையம், வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சம்பா பருவ நெல் நடவு செய்தனர். ஆனால் நெல் விளைந்து அறுவடை நேரத்தில் கடுமையான மழை பொழிவு இருந்தது. இதனால் கச்சிராயபாளையம், வடக்கநந்தல், அக்கராயபாளையம் ஊத்தோடைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நெல் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் நீர் வெளியேற வழியில்லாமலும், அதிக சேறும், சகதியுமாக இருந்ததால் நெல் அறுவடை செய்ய முடியவில்லை. சில இடங்களில் நெற்கதிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியன. இதனால் பயிர்கள் அழுகியதுடன், முளைப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண் அதிகாரிகள் நேரடியாக வயல்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில் நெல் வயல் பாதிப்புகளை விரைந்து கணக்கெடுத்து அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகையை வழங்க வேண்டும் என தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.  

இதையடுத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெகநாதன் தலைமையில் உதவி வேளாண்மை இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) அன்பழகன், வேளாண்மை அலுவலர் அனுராதா ஆகியோர் அக்கராயபாளையம் ஊத்தோடைக்காடு பகுதியில் பாதிப்படைந்த நெல் வயல்களை ஆய்வு செய்தனர். மேலும் பாதிப்படைந்த விவசாயிகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும், பாதிப்பில்லாத வயல்களை சேர்க்க கூடாது என்றும் வேளாண் அலுவலர்களுக்கு இணை இயக்குநர் ஜெகநாதன் அறிவுரை வழங்கினார்.

Related Stories: