பொன்னை அருகே பல கோடி செலவில் அமைக்கப்பட்டது 2 மாதங்களுக்கே தாக்கு பிடிக்காத தார் சாலை குண்டும், குழியுமாக சிதறிய அவலம்-நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தின் உச்சம்

பொன்னை : பொன்னை அருகே பல கோடி செலவில் அமைக்கப்பட்ட தார் சாலை 2 மாதங்களுக்கே தாக்கு பிடிக்காமல் குண்டும், குழியுமாக மாறியிருப்பது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தின் உச்சத்தை காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் இருந்து வேலூர் நகருக்கு செல்லவும், மேல்பாடி, திருவலம் வழியாக ராணிப்பேட்டை, ஆற்காடு நகரங்களுக்கு செல்லவும் பிரதான சாலை அமைந்துள்ளது.

மேலும், வள்ளிமலை, மேல்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொன்னை பகுதிக்கு வரும் வாகனங்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்கள் என்று இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றனர்.

இப்படி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மேல்பாடி பகுதியில் இருந்து பொன்னை வரை சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல கோடி ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டது.

இந்த தார் சாலை தரமற்றதாக அமைக்கப்பட்டதால், 2 மாதங்கள் கூட முழுமையாக தாக்கு பிடிக்காமல் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறியுள்ளது. இப்படி பொன்னை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் டெண்டர் விட்டு போடப்பட்ட சாலைகள் 90 சதவீதம் ஒரு சில மாதங்கள் கூட தாக்குபிடிக்காமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சில இடங்களில் அவற்றில் பேட்ஜ் பணி செய்துள்ளனர்.

இதனால், இந்த சாலையை பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், சாலை அமைக்கும் பணிக்காக ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் உரிய முறையில் பயன்படுத்தாமல், கண்துடைப்புக்காக பணிகளை செய்து முடித்ததால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல், சாலை அமைக்கும்போது அதன் தரத்தை கண்காணிக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உரிய முறையில் ஆய்வு செய்யாததால், ஒப்பந்ததாரர்கள் விருப்பம்போல் சாலையை அமைத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

எனவே, மேல்பாடி- பொன்னை இடையே தரமற்ற சாலை அமைத்தது குறித்து கண்காணிக்காத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சாலையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இதேபோல் நெடுஞ்சாலைத்துறை மூலம் பெயரளவில் போடப்பட்டுள்ள அனைத்து தார்சாலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையில் யாருக்கு பங்கு

பொன்னை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற தரமற்ற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் இதுபோன்ற தரமற்ற சாலைகள் அமைத்து, டெண்டர் பணத்தை விழுங்கும் அதிகாரிகள், யார்? அவர்கள் யாருக்கு, இந்த பணத்தில் பங்கு கொடுக்கிறார்கள் என்று உரிய விசாரணை நடத்தி, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: