தேவிகாபுரம்- ஆரணி நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தார் சாலை விரிவாக்க பணியால் மக்கள் அவதி-அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

பெரணமல்லூர் : சேத்துப்பட்டு அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்க பணியால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் ஆன்மிக பகுதியாக திகழ்ந்து வருகிறது. இந்த பகுதியை சுற்றிலும் கிராமங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கிராம மக்கள் தேவிகாபுரம் பகுதிக்கு சொந்த வேலை சம்பந்தமாக அடிக்கடி வந்து செல்வார்கள்.

இந்நிலையில், தேவிகாபுரம்- ஆரணி நெடுஞ்சாலையில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தார் சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக, நெடுஞ்சாலைத் துறையினரால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு டெண்டர் விடப்பட்டு, சாலையின் இரு புறங்களிலும் சுமார் 4 அடி அகலம், இரண்டடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

 இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `தேவிகாபுரம்- ஆரணி நெடுஞ்சாலை எப்போதும் போக்குவரத்து மிகுதியாக காணப்படும். தேவிகாபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் நாங்கள் சொந்த வேலையாக  சென்று வருகிறோம். இங்கே விரிவாக்க பணிகளுக்காக, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டது.

ஆனால் பள்ளம் தோண்டியதோடு மேற்கொண்டு எந்த பணிகளும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், எங்களால் அந்த வழியே பயணிக்க மிகவும் அச்சமாக உள்ளது. குறிப்பாக அந்த சாலையில் டாஸ்மாக் கடை அருகே எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்து வரும் நிலையில், அவர்கள் குடித்து விட்டு வேகமாக வரும்போது நாங்கள் அச்சத்துடன் ஒதுங்கி செல்லும் நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி சாலை விரிவாக்க பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: