ராஜஸ்தானில் தீவிரமடையும் பறவை காய்ச்சலால் 7,000 பறவைகள் உயிரிழப்பு!: 17 மாவட்டங்களுக்‍கு பரவியது பறவை காய்ச்சல்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சுமார் 7,000 பறவைகள் பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளன. ராஜஸ்தானில் 17 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் சில இடங்களில் பறவைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளிலும் பறவை காய்ச்சல் பரவி உள்ளதா? என சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். கேரளா உள்பட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு மத்தியில் பறவை காய்ச்சலும் பரவி வருவதால் நீர்நிலைகள், பண்ணைகள், விலங்குகளின் சரணாலயங்கள் மற்றும் பறவைகள் தொடர்பான சந்தைகளை தீவிரமாகக் கண்காணிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தில் பாங் வனவிலங்குகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் மொத்தமாக உயிரிழந்தது. இந்தியாவில் கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்ட எச்5என்1 பறவை காய்ச்சல் வைரஸ், பின்னர் குஜராத், ஹரியானா மாநிலங்களுக்கும் பரவியது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நிலைமையை கண்காணிக்க தலைநகர் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ராஜஸ்தானில் சுமார் 7 ஆயிரம் பறவைகள் பறவை காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளன. அங்குள்ள 17 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெய்ப்பூர் அருகே சில பகுதிகளில் காகங்கள், மயில்கள், புறாக்கள் உள்ளிட்டவை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளிலும் பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Related Stories: