டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவு

புதுடெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து தலைமறைவானார்.டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணி வன்முறையின் போது பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகள், போலீசாரின் வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு போலிசார் அமைத்த தடுப்புகளை உடைத்தெறிந்து மத்திய டெல்லிக்குள் பிரவேசித்தனர். செங்கோட்டை நோக்கி சென்ற போராட்டக்காரர்கள் அங்கு சீக்கிய கொடியினை பறக்கவிட்டனர். இதனால் வன்முறை களமாக மாறிய டெல்லியில் பலர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், விவசாயிகளின் அணிவகுப்பில் ஏற்பட்ட வன்முறைக்கு பின்னால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகர் தீப் சித்து இருப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். பஞ்சாப் நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான தீப் சித்து மற்றும் சிலர் செங்கோட்டையின் ஒரு கோபுரத்தில் ஏறி பஞ்சாப்பின் நிஷான் சாகிப் கொடியை ஏற்றினர். பாஜக ஆதரவாளரான தீப் சித்துவும், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் சிலரும் சேர்ந்துதான் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு, விவசாயிகளின் நற்பெயரைக் கெடுக்கச் சதி செய்துள்ளனர் என்று பாரதிய கிஷான் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் செங்கோட்டையில் நிஷான் சாகிப் கொடியை ஏற்றியதை நடிகர் தீப் சித்து தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டு, பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது..

அதே போல் பிரதமர் மோடியுடன் நெருங்கிய தொடர்புடைய தீப் சித்து போராட்டத்தில் ஊடுருவி திசைமாற்றியதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். டெல்லி செங்கோட்டை முற்றுகையில் பங்கேற்ற நடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தீப் சித்து, பிரதமர் மோடியுடன் இருக்கும் படத்தை டிவிட்டரில் பதிவிட்டு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது,வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி போலீசார் 22 வழக்குகள் பதிவுசெய்து, 200 பேரைக் கைது செய்துள்ளனர். சில விவசாய தலைவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நடிகர் தீப் சித்து மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே தீப் சித்து தலைமறைவாகிவிட்டார்..செங்கோட்டை முற்றுகையை போலீஸ் கலைக்கும் போது நடிகர் தீப் சித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Related Stories: