கர்நாடக மாநில லிங்காயத்து மடாதிபதிகள் கூட்டமைப்பு தொடக்கம்

பெலகாவி: கர்நாடக மாநில லிங்காயத்து மடாதிபதிகளின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டு, அதன் தலைவராக மடாதிபதி பசவலிங்க புட்டதேவரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெலகாவி மாவட்டத்தின் நாகநூருவில் உள்ள ருத்ராக்‌ஷி மடத்தில் 2 நாட்கள் லிங்காயத்து மடாதிபதிகள் மாநாடு நடந்தது. இதில் மாநிலத்தில் இயங்கிவரும் பல்வேறு லிங்காயத்து மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் பங்கேற்றனர். மாநிலத்தில் லிங்காயத்து வகுப்பினரின்  மேம்பாடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கதக் மாவட்டத்தில் இயங்கிவரும் தம்பள ஜெகத்குரு தொண்டத சித்தராமசுவாமி பேசும்போது, ``லிங்காயத்து வகுப்பில் பல உள் பிரிவுகள் உள்ளது.

அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்வது தற்போதைய காலகட்டத்தில்  மிகவும் சவாலாகவுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டுமானால் லிங்காயத்து வகுப்பை சுதந்திர மதமாக அங்கிகரிக்க வேண்டியதும் அவசியமாகும். மேலும் மடங்கள் தனி தனியாக இயங்கி வந்தாலும் மடாதிபதிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வசதியாக  கர்நாடக மாநில லிங்காயத்து மடாதிபதிகள் கூட்டமைப்பு தொடங்க வேண்டும்’’ என்றார். அவரின் கருத்தை அனைவரும் ஏற்று கூட்டமைப்பு தொடங்கினர். அதன் தலைவராக பசவலிங்க புட்டதேவரு தேர்வு செய்தனர். மேலும் என்ன நோக்கத்திற்காக கூட்டமைப்பு  தொடங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: