டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின்னால் சமூக விரோத சக்திகள்: விவசாய தலைவர் ராகேஷ் டிக்கைட் பகீர் தகவல்

புதுடெல்லி: விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பின் போது நடந்த வன்முறையின் பின்னணியில் சில சமூக விரோத சக்திகள் இருந்ததாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: டெல்லி காவல்துறையின் நடவடிக்கைகள் காரணமாகவே சில சமூக விரோத சக்திகள் அணிவகுப்பில் நுழைந்து வன்முறையை ஏற்படுத்தினர். அணிவகுப்புக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட வழிதடத்தின்  சில இடங்களில் டெல்லி காவல்துறையினர் வேண்டமென்றே தவறாக தடுப்புகளை அமைத்து இருந்தனர். விவசாயிகளை தவறாக வழிநடத்த வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு  செய்யப்பட்டது.

இதன் காரணமாகவே, டிராக்டர்களில் விவசாயிகள் வழிதவறி சென்றனர்.இது சமூக விரோத சக்திகளுக்கு டிராக்டர் பேரணியில் நுழைய வாய்ப்பளித்தது. மேலும், பிகேயூ அமைதியான ஆர்ப்பாட்டத்தை நம்புகிறது என்றும் இந்த வன்முறையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை அடையாளம் காண்போம். அணிவகுப்பின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் வன்முறையின் பின்னணியில் உள்ள காரணங்களை ஆராய்வார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையே, டிராக்டர் பேரணி காசியாபாத்தில் அமைதியாக நடந்தது என்றும், எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்றும் காஜியாபாத் மாவட்ட தகவல் அலுவலர் (டி.ஓ.ஓ) ராகேஷ் சவுகான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். நிர்வாகம் போதுமான ஏற்பாடுகளைச் செய்திருந்ததுடன், மூத்த காவல்துறை மற்றும் சிவில் அதிகாரிகள் ஒவ்வொரு நாளும் உழவர் தலைவர்களுடன் உரையாடினர் என்றும் கூறினார்.

Related Stories: