×

டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி நாடாளுமன்றம் முற்றுகை நிறுத்தம்

* அடுத்தகட்ட ஆலோசனைக்குப்பின் விவசாயிகள் அறிவிப்பு
* போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலகின

புதுடெல்லி: டிராக்டர் அணிவகுப்பில் நடந்த வன்முறையை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் அன்று நாடாளுமன்றம் முற்றுகையிடும் பேரணியை நிறுத்தி வைத்துள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கிடையே போராட்டத்தில் இருந்து 2 சங்கங்கள் விலகி உள்ளன.
மத்திய அரசு அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டங்களை முழுமைாக திரும்பப்பெறக்கோரி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். 11 கட்ட பேச்சுவார்த்தையை மத்திய அரசுடன் முன்னெடுத்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்தன.

அதன்படி, போலீசார் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு பேரணியை நடத்த திட்டமிட்டு நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே பேரணி தொடங்கியது. ஒருகட்டத்தி–்ல் போலீசார் அனுமதித்த வழித்தடத்திற்கு மாறாக மாற்று பாதையில் டிராக்டர்கள் ஒருதரப்பு குழுவினரால் திருப்பி விடப்பட்டது. ஆனால், அந்த வழியில் ஏற்கனவே போலீசார் தடுப்புகளை அமைத்து இருந்தனர். எனினும், போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு பேரணி நடத்த திட்டமிடாத மத்திய டெல்லிக்குள் பேரணி நுழைந்தது. இதனால் அவர்களை முன்னேற விடாமல் தடுக்க போலீசார் தடியடி, மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.

இதனால் பின்வாங்கிய போராட்டக்காரர்கள் செங்கோட்டை நோக்கி திரும்பி அங்கு வன்முறையை அரங்கேற்றினர். சீக்கிய கொடியை டெல்லி செங்கோட்டையில் ஏற்றி பறக்கவிட்டனர். மேலும், அங்கிருந்த டிக்கெட் கவுன்டர்கள், நுழைவு வாயில்கள் சேதப்படுத்தப்பட்டு போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த மோதலில் போலீசார் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக போலீசார் 22 எப்ஐஆர்களை பதிவு செய்து 200 க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். அதோடு, வன்முறையில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதை வீடியோக்கள், சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால், விவசாயிகள் தரப்பில் கூறுகையில், பேரணியில் நடந்த வன்முறைக்கு பின்னால் சமூக விரோத சக்திகள் தான் காரணம். அவர்கள் தான் அமைதியாக நடந்த போராட்டத்தை திசை திருப்பினர் என  குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த இந்த வன்முறை சம்பவத்தையடுத்து, பாரதிய கிசான் யூனியன் மற்றும் அனைத்திந்திய கிசான் சங்கார்ஷ் ஒருங்கிணைப்பு கமிட்டி ஆகிய இரு சங்கங்களும் டெல்லி எல்லை போராட்டத்தில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தன.

பாரதிய கிசான் யூனியன் தலைவர்  தாக்கூர் பானு பிரதாப் சிங் கூறுகையில், தேசிய தலைநகரில் டிராக்டர்  அணிவகுப்பின் போது நடந்த சம்பவங்களால் மிகுந்த வேதனையடைந்துள்ளதாகவும், இனி  எங்களது சங்கம் இந்த போராட்டத்திலிருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளது.  அதேபோன்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழுவின் வி.எம்.  சிங் தெரிவிக்கையில், ‘‘தற்போதைய போராட்டத்திலிருந்து எங்களை  விலக்கிகொள்கிறோம். மற்றவர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை இனி  முன்னெடுக்க முடியாது . அவர்களின் நோக்கம் வேறாக உள்ளது”என  தெரிவித்துள்ளார். மேலும், மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள பிப்ரவரி 1ம் தேதியன்று நாடாளுமன்றம் நோக்கி விவசாய சங்கங்கள் நடந்து சென்று முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அதனையும் தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சாம்யுக்தா கிசான் மோர்ச்சா, நாடாளுமன்றம் நோக்கி பாதசாரியாக பேரணி செல்லும் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது என்று மூத்த விவசாயி தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதனிடையே, மத்திய கலாசார மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் பிரகலாத் படேல் நேற்று செங்கோட்டைக்கு நேரில் சென்று போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர், இதுகுறித்து விவர அறிக்கையை சமர்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டிராக்டர் பேரணி வன்முறையை தொடர்ந்து டெல்லி செங்கோட்டை மற்றும் விவசாயிகள் முகாமிட்டுள்ள போராட்டம் நடைபெறும் எல்லைப்பகுதிகளில் கூடுதலாக துணை ராணுவப்படை களமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று அதிகாரிகள் லால் குய்லா மெட்ரோ நிலையத்தை மூடிவிட்டு ஜூம்மா மசுதி நிலையத்திற்குள் நுழைவதை தடை செய்து உத்தரவிட்டனர்.

தர்சன் பால், யோகேந்திரயாதவ் உள்பட 37 பேர் மீது வழக்கு
டெல்லி வன்முறை தொடர்பாக விவசாய சங்க தலைவர்கள் 37 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமாய்பூர் பத்லி காவல் நிலையத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ள  எப்ஐஆரில், ராகேஷ் டிக்கிட், யோகேந்திர யாதவ்,  தர்ஷன் பால்  மற்றும் குர்னம் சிங் சாதுனி உட்பட 37 விவசாய சங்க  தலைவர்களின் பெயர்களை சேர்த்துள்ளனர். வன்முறை சம்பவத்தில் இவர்களின் பங்கு  குறித்து போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147(கலவரம் தொடர்பாக), பிரிவு 307(கொலை  முயற்சி) மற்றும் 120பி(கூட்டுச்சதி) உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடவில்லை
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு, சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் கதவுகள் மூடப்பட்டதாக நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. பேச்சுவார்த்தை எப்போது நடந்தாலும் அது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். ஏதாவது மாற்றங்கள் இருந்தாலும் அரசு தெரிவிக்கும்,” என்றார்.
அமைதி போராட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டாரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், ‘‘அமைதியான போராட்டம், ஒன்றாக கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் அகிம்சை ஆகியவை  மதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்,’’ என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
செவ்வாயன்று டெல்லி எல்லைகளில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறை குறித்து இரண்டு பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல் மனுவில், இந்த வன்முறை குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இரண்டாவது மனுவில், எந்தவித ஆதாரமும் இல்லாமல் விவசாயிகளை தீவிரவாதிகளாக ஊடகங்கள் சித்திரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் தீப் சித்து மீது குற்றச்சாட்டு
 வன்முறையின் பின்னணியில் சதி இருப்பதாக கூறிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாயிகள் சங்கம், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் தீப் சித்து போன்ற சமூக விரோத சக்திகள் தீட்டிய சதித்திட்டத்தின் கீழ் தங்கள் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க முயற்சித்ததனர். ஆனாலும், விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசோ அல்லது வேறு சக்திகளோ உள்ளே நுழைந்து கெடுப்பதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.  விவசாயிகளின் போராட்டத்தால் மத்திய அரசு கடுமையாக நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே, கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் கமிட்டி மற்றும் பிறருடன் சேர்ந்த ஒரு மோசமான சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதை அறிந்துள்ளோம். மேலும் விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய 15 நாட்களுக்குப் பிறகுதான் இந்த அமைப்புகள் தனியாக ஒரு இடத்தை தேர்வு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அவர்கள் விவசாயிகள் கூட்டாக மேற்கொண்ட எந்த போராட்டத்திலும் பங்கேற்காமல் தனித்து இயங்கினர் என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

வைரலாகும் வீடியோ: போலீசார் மீது வாள் வீசி தாக்குதல்
டிராக்டர் பேரணியில் பங்கேற்ற பஞ்சாப் விவசாயிகள் பெரும்பாலும் வாள், குத்துவாள்களை வைத்திருந்தனர். ‘நிஷாங்க்ஸ் குழு’ தலைமையிலான விவசாயிகள், தடுப்புக்களை அகற்ற அனுமதி மறுத்த போலீசார் மீது வாளால் தாக்குதல் நடத்தினர் . இதில், போலீசார் பலர் காயமடைந்தனர். டெல்லி போலீஸ் தலைமையகத்துக்கு வெளியே நடந்த இந்த சம்பவத்தில் கூடுதல் துணை ஆணையர் சந்தீப் காயமடைந்தார். அவர் கூறுகையில், “நிஷாங்க்ஸ் குழு தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  வாள்கள், குத்துவாள்கள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தார்கள். அவர்கள் காவல்துறை தடுப்புக்களை உடைத்தெறிந்து முன்னேறினார்கள்,” என்றார். போராட்டக்காரர் ஒருவர் வாளோடு போலீசாரை துரத்தி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

போராட்டத்தில் இறந்தவர் ஆஸி.யில் இருந்து வந்தவர்
டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையின்போது நடந்த விபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூரை சேர்ந்த நவ்ரீத் சிங் (27) என்பவர் உயிரிழந்தார். இவர்  வேகமாக ஓட்டி வந்த டிராக்டர், சாலை தடுப்பு மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது, . இதில், நவ்ரீத் பலியானார். இவருக்கு சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்தது. இதனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சொந்த ஊர் வந்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, டெல்லி சென்றுள்ளார். அவரது சடலம் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊர் எடுத்து வரப்பட்டது. அங்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அரியானா எம்எல்ஏ ராஜினாமா
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, அரியானாவில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியை சேர்ந்த தலைவர் அபய் சிங் சவுதாலா (57) நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து சட்டபேரவை சபாநாயகர் கியன் சந்த் குப்தா கூறுகையில், “அபய் சிங் சவுதாலாவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது,” என்றார். இவர், முன்னாள் முதல்வர் ஒம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் ஆவார்.

2ம் நாளாக அமித்ஷா ஆலோசனை
டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, நேற்று முன்தினமே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர ஆலோசனை நடத்தினார். நேற்றும் அவர் தனது ஆலோசனையை தொடர்ந்தார். இதில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மூத்த அதிகாரிகள் மற்றும் டெல்லி போலீசார் கலந்து கொண்டனர். டெல்லியில் அமைதியை ஏற்படுத்துவது, விவசாய சங்க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவை குறித்து இதில் பேசப்பட்டது.

புதிய சட்டங்களால் வருமானம் உயரும்
சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் நேற்று கூறுகையில், “இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கான சந்தையை விரிவுபடுத்துகின்றன. வரி செலுத்தாமலேயே மண்டிகள் மட்டுமின்றி பல விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை அனுப்ப முடியும். இந்த சட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதாக உள்ளது. ஒவ்வொரு முறை சீர்திருத்தம் கொண்டு வரப்படும் போதும் பிரச்னைகள் ஏற்படும். இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பு ஏற்படும். அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது,’’ என்றார்.


250 குழந்தைகள் சிக்கித்தவிப்பு விளக்கம் கேட்கிறது ஆணையம்
டெல்லி வன்முறையில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொண்ட 250 குழந்தைகள் சிக்கித்தவித்தனர். 2 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் அனைவரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை அறிந்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி போலீசிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது. ஆணைய தலைவர் பிரியங் கன்னுங்கோ டெல்லி வடக்கு டிசிபி அன்றோ அல்போன்சிற்கு இதுதொடர்பாக அனுப்பிய கடிதத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும் குழந்தைகள் சிக்கிக்கொண்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எப்ஐஆர் நகல் ஆகியவற்றை அடுத்த 48 மணி நேரத்தில் தாக்கல் செய்யவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாரும் தப்ப முடியாது
டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.வஸ்தவா தெரிவித்தாவது:  டிராக்டர் பேரணிக்கு விவசாய சங்கங்கள் இரவு 12 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருந்த நிபந்தனைகளை பின்பற்றவில்லை. அவர்கள் துரோகம் செய்தனர். விவசாய  தலைவர்கள் எரிச்சலூட்டும் வகையில்  பேசினர். டிராக்டர் அணிவகுப்பின் போது வன்முறையில் ஈடுபட்டனர். வேறு நபர்கள் யாரும் உள்ளே நுழையவில்லை. டெல்லி காவல்துறை தீவிர கட்டுப்பாட்டைக் காட்டியதால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. டெல்லி போலீசில் 394 பேர் காயமடைந்துள்ளனர். 30 போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 25 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண சி.சி.டி.வி மற்றும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். அடையாளம் காணப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது. இவ்வாறு கூறினார்.


Tags : siege ,tractor rally ,Delhi , Echoes of violence at the Delhi tractor rally Parliament siege ceasefire
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...