×

டெல்லி தொடர் போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் திடீர் விலகல்: டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததால் அதிருப்தி

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, போராட்டத்தில் இருந்து விலகுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழுவும், பாரதிய கிசான் சங்கமும் அறிவித்துள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர்ர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் 2 மாதங்களை கடந்து விட்டது. இச்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகின்றது. இது தொடர்பாக 11 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்து விட்டன.

போராட்டத்தின் ஒரு கட்டமாக, நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தினர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட சாலைகளில் தடுப்புக்களை அகற்றிய விவசாயிகள், திடீரென டெல்லிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதை தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். மேலும், வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அங்குள்ள கொடி மரத்தில் ஏறி, சீக்கிய மத, விவசாய கொடிகளை ஏற்றினர். இது, தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டக்காரர்களை விரட்ட, பல இடங்களில் போலீசார்  தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த வன்முறையால் விவசாயிகளின் போராட்டத்தில் இருந்த தீவிரம் குறைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களுக்கு இடையே, வன்முறை தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, போராட்டத்தை முன்னின்று தீவிரமாக நடத்திய அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழுவும், பாரதிய கிசான் சங்கமும் நேற்று போராட்டத்தில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற விவசாய சங்கங்களுக்கு இது அதிர்ச்சியை அளித்துள்ளது.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கூட, டெல்லியில் நடந்த வன்முறையில் மவுனம் சாதிக்க தொடங்கியுள்ளனர். வன்முறையில் அதிருப்தி அடைந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை வீடு திரும்பும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த வன்முறை காரணமாக, டெல்லி எல்லையில் 5 இடங்களில் நடைபெற்று வந்த விவசாயிகளின் போராட்டத்தில் நேற்று சற்று தொய்வு ஏற்பட்டது. பல இடங்களில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த விவசாயிகள், தற்போது பெருமளவு குறைந்து விட்டனர். அவர்கள் வீடு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது.

* மீண்டும் கேட்கிறேன்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே பலமுறை மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால், மீண்டும் அந்த கோரிக்கையை  அவர் முன் வைத்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மீண்டும் ஒருமுறை மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்,’ என்று கூறியுள்ளார்.

* அமைதி போராட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்
ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டாரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், ‘‘அமைதியான போராட்டம், ஒன்றாக கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் அகிம்சை ஆகியவை  மதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்,’’ என்றார்.

* நடைபயணம் ஒத்திவைப்பு
சம்யுக்தா கிசான் மோர்சா சங்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் கூறுகையில், “டிராக்டர் பேரணியில் வன்முறைகள் நடந்ததால், பிப்ரவரி 1ம் தேதி நடத்த இருந்த நாடாளுமன்றத்தை நோக்கிய நடை பயணத்தை ஒத்திவைப்பதற்கு முடிவு செய்துள்ளோம். அது மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து விரைவி் இறுதி முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.

* பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடவில்லை
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு, சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் அளித்த பேட்டியில், ‘‘விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தையின் கதவுகள் மூடப்பட்டதாக நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. பேச்சுவார்த்தை எப்போது நடந்தாலும் அது குறித்து உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். ஏதாவது மாற்றங்கள் இருந்தாலும் அரசு தெரிவிக்கும்,” என்றார்.

* போராட்டத்தில் இறந்தவர் ஆஸி.யில் இருந்து வந்தவர்
டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையின்போது நடந்த விபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூரை சேர்ந்த நவ்ரீத் சிங் (27) என்பவர் உயிரிழந்தார். இவர் வேகமாக ஓட்டி வந்த டிராக்டர், சாலை தடுப்பு மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது,. இதில், நவ்ரீத் பலியானார். இவருக்கு சமீபத்தில்தான் ஆஸ்திரேலியாவில் திருமணம் நடந்தது. இதனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சொந்த ஊர் வந்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, டெல்லி சென்றுள்ளார். அவரது சடலம் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊர் எடுத்து வரப்பட்டது. அங்கு, ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

* அரியானா எம்எல்ஏ ராஜினாமா
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி, அரியானாவில் இந்திய தேசிய லோக் தளம் கட்சியை சேர்ந்த தலைவர் அபய் சிங் சவுதாலா (57) நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து சட்டபேரவை சபாநாயகர் கியன் சந்த் குப்தா கூறுகையில், “அபய் சிங் சவுதாலாவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது,” என்றார். இவர், முன்னாள் முதல்வர் ஒம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் ஆவார்.

* 2ம் நாளாக அமித்ஷா ஆலோசனை
டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, நேற்று முன்தினமே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர ஆலோசனை நடத்தினார். நேற்றும் அவர் தனது ஆலோசனையை தொடர்ந்தார். இதில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மூத்த அதிகாரிகள் மற்றும் டெல்லி போலீசார் கலந்து கொண்டனர். டெல்லியில் அமைதியை ஏற்படுத்துவது, விவசாய சங்க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவை குறித்து இதில் பேசப்பட்டது.

* புதிய சட்டங்களால் வருமானம் உயரும்
சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் நேற்று கூறுகையில், “இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கான சந்தையை விரிவுபடுத்துகின்றன. வரி செலுத்தாமலேயே மண்டிகள் மட்டுமின்றி பல விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை அனுப்ப முடியும். இந்த சட்டங்கள், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதாக உள்ளது. ஒவ்வொரு முறை சீர்திருத்தம் கொண்டு வரப்படும் போதும் பிரச்னைகள் ஏற்படும். இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பு ஏற்படும். அவர்களுக்கு தீங்கு விளைவிக்காது,’’ என்றார்.

Tags : unions ,protests ,Delhi ,tractor rally ,outbreak , 2 farmers' unions abruptly withdraw from Delhi series of protests: Dissatisfaction with the outbreak of violence in the tractor rally
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...