×

ஐ.நா மனித உரிமை ஆணைய 46வது கூட்டம் இலங்கை தமிழர் கோரிக்கை நிறைவேறுவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், ‘ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு பிசுபிசுக்க வைத்துள்ள நிலையிலும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இப்பிரச்னை எழுகின்ற நேரத்தில் கூட மத்திய அரசு இலங்கைக்கு எதிராக கருத்து கூறாமல் மவுனம் சாதிக்கிறது. ஆகவே, இப்பிரச்சினையில் உடனே தலையிடுமாறு பிரதமருக்கு கடிதம் எழுத இக்கூட்டம் தீர்மானிக்கிறது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத்தின் 46வது கூட்டம் தொடர்பாக இக்கடிதத்தை தங்களுக்கு தற்போது எழுதுகிறேன். கடந்த 6.1.2021 அன்று இலங்கை சென்ற நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனேவை சந்தித்தார். இது ஆக்கபூர்வமான தீர்வினை தந்துவிடவில்லை. அதே நேரத்தில், நடைபெறவிருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையக் கூட்டம் தொடர்பாக, நமது வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

1987ம் ஆண்டு உருவான இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அளித்த உத்தரவாதத்திற்கு எதிராகவே இலங்கையில் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அரசும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தருணத்தில், ‘ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் இருக்கும் இந்தியா உள்ளிட்ட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, ஒருமனதாக கோரிக்கை விடுத்துள்ளதை பிரதமர் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46வது கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு, இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை பிரதமர் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதே போல் 13வது அரசியல் சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு பிரதமர் அளவிலும், தூதரக அளவிலும் தக்க நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதுடன் இதைவிட அதிக அதிகாரம் பெற்று, இலங்கையில் தமிழ் இன மக்கள் உரிமைகளுடனும், கண்ணியத்துடனும் வாழ வேண்டும் என்பது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் நீண்ட கால தாகம் என்பதை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமரின் உடனடி முயற்சியும், தலையீடும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் முக்கிய இடம்பெறும் என்று  தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : session ,India ,Modi ,UN Human Rights Commission ,MK Stalin ,Sri Lankan Tamils , India must ensure fulfillment of Sri Lankan Tamil demand: MK Stalin's letter to PM Modi
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!