அரசு பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கைக்கு ரூ.5ஆயிரம் கேட்டதாக மாணவி புலம்பல்: வீடியோ வைரலானதால் பரபரப்பு

தர்மபுரி: ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கைக்காக ரூ.5 ஆயிரம் வசூலிப்பதாக மாணவி ஒருவர் புகார் கூறும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்காக திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சேருவதற்காக நேற்று சென்ற பிளஸ் 1 மாணவியிடம் பள்ளியில் சேர்வதற்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டதாக அந்த மாணவி வீடியோவில் பேசும் காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவியது.

இது அந்த பகுதி மாணவ, மாணவிகளின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலரிடம் வீடியோவில் மாணவி பேசும்போது, ”பள்ளியில் சேர்வதற்காக ரூ.5 ஆயிரம் ஒரு மாதத்திற்குள் தரவேண்டும். உனக்கு மார்க் குறைவாக உள்ளது. பணம் கொடுக்காவிட்டால் பிளஸ்1க்கு புத்தகம் இல்லாமல்தான் படிக்க வேண்டும். இல்லாவிடில், வேறு பள்ளியில் போய் படிக்க வேண்டும். பணம் இல்லாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. லைட் பேன் வசதி செய்ய வேண்டும் என்பதால் பணத்தை கூகுள் பே செய்யுங்கள் என சொல்கிறார்கள். என்ன செய்வது என தெரியவில்லை” மேற்கண்டவாறு மாணவி புலம்பும் வீடியோ வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா நேற்று கூறுகையில், இந்த வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட ஏரியூர் பள்ளி தலைமையாசிரியர் சசிகுமாரிடம் விசாரணை செய்தேன். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட மாணவியிடம் பிளஸ்1 சேர்க்கைக்காக பணம் கேட்கவில்லை என கூறினார். மேலும், புரவலர் திட்டத்திற்கு பணம் கேட்டதாக கூறியுள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவியை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளேன். இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

Related Stories: