இன்டர்நெட் மிரட்டல் குற்றத்தில் இந்தியாவுக்கு 3ம் இடம் சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்ய விதிகள் உருவாக்க வழக்கு: யூடியூப், பேஸ்புக் பதிலளிக்க உத்தரவு

மதுரை: சமூக வலைத்தளங்களை தணிக்கை செய்ய விதிகளை உருவாக்கக் கோரிய வழக்கில், யூடியூப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சென்னையில் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் ஆபாசமான வகையில் கேள்வி கேட்டு, சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் வெளியிட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட சேனல் தடை செய்யப்பட்டது. அந்த சேனல் மற்றும் இதுபோன்ற பல சேனல்களில் வெளியான பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் இன்னும் பகிரப்படுகிறது. சமூக வலைத்தளங்களுக்கு போதிய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் பெண்கள், குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பலர் பாதித்துள்ளனர். சர்வதேச ஆய்வின்படி இன்டர்நெட் மூலம் மிரட்டுவது தொடர்பான குற்றத்தில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது.

இதுவரை 1.50 லட்சம் தகாத முறையிலான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. யூடியூப், வெப் சீரியல்ஸ், செல்ப் கன்டென்ட் வீடியோ, குறும்படங்கள், பிரான்க் ஷோ என்ற பெயரில் பல நிகழ்ச்சிகள் தணிக்கையின்றி வெளிவருகின்றன. இவற்றில் பல நேரங்களில் தவறான தகவல்கள் வெளியாகின்றன. பாகிஸ்தான், சீனா போன்ற பல நாடுகளில் யூடியூப் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை தணிக்கை செய்யவும், கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தேவையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கி ஒழுங்குபடுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேவையான தணிக்கை முறையை அவர்கள் உருவாக்க வேண்டும். இதன் மீது புகார்கள் வந்தால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுவிற்கு யூடியூப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories:

>