மயிலாடுதுறை அருகே அதிகாலையில் பயங்கரம் தாய், மகனை கொன்று ரூ.6 கோடி நகை கொள்ளை: தப்ப முயன்றவன் சுட்டுக்கொலை; மேலும் 2 பேர் பிடிபட்டனர்

சீர்காழி: மயிலாடுதுறை அருகே சீர்காழியில் நேற்று அதிகாலை தாய், மகனை கொன்று 6 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்க நகையை 3 பேர் கொள்ளையடித்தனர். சிக்கிய கொள்ளையர்களில் ஒருவன் தப்பியோடிய போது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோட்டில் வசிப்பவர் தன்ராஜ் (50). நகை அடகு கடை நடத்தி வரும் இவர், மொத்தமாக நகைகளை வாங்கி சிறிய கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி ஆஷா (45). இவர்களது மகன் அக்கிலுக்கும் (24), நெக்கில் (20) என்பவருக்கும் திருமணமாகி ஓராண்டே ஆகிறது.

இந்த 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தந்தைக்கு துணையாக மகன் அக்கிலும் அதே அடகு கடையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தார் ஆஷா. அப்போது கத்தியுடன் 3 மர்மநபர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். வீட்டில் இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் ஆஷாவையும் அக்கிலையும் அவர்கள் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் தாயும், மகனும் சரிந்து விழுந்து பலியாகினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு தன்ராஜ், மருமகள் நெக்கில் ஆகியோர் ஓடி வந்து ஆஷா, அக்கில் ஆகியோர் இறந்து கிடப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கத்தியுடன் நின்ற மர்மநபர்களை பார்த்து சத்தம் போட்டனர். உடனே ஆத்திரமடைந்த அவர்கள், இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டினர். ஒருவன் கைத்துப்பாக்கியை காட்டி நகைகள் எங்கே இருக்கிறது என கேட்டான். அதற்கு கட்டிலுக்கு அடியில் உள்ள லாக்கரில் நகைகள் இருப்பதாக 2 பேரும் கூறி, சாவி இருந்த இடத்தையும் காண்பித்தனர். இதையடுத்து 3 பேரில் ஒருவன், லாக்கரை திறந்து அதில் இருந்த 17 கிலோ நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை எடுத்தான். இதன் மதிப்பு ரூ.6 கோடியே 45 லட்சம். மேலும் சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கையும் எடுத்து கொண்டான்.

பின்னர் தன்ராஜின் கார் சாவியை வாங்கிக் கொண்டனர். 2 பேரின் கையில் கத்தியால் கிழித்துவிட்டு, வீட்டுக்குள் வைத்து வெளித்தாழ்ப்பாள் போட்டனர். பின்னர் தன்ராஜின் காரிலேயே 3 பேரும் தப்பினர். தன்ராஜ், நெக்கில் போட்ட சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து கதவை திறந்து விசாரித்தனர். 3 பேரும் இந்தியில் பேசியதால் கொலை, கொள்ளையில் ஈடுபட்டது வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 3 மர்ம நபர்கள் எடுத்து சென்ற  தன்ராஜின் காரை, பட்டவிளாகம் செல்லும் சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பியது தெரியவந்தது. தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா, இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சிங்காரவேல், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஷ், சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜா,  காயத்ரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே கொலை செய்யப்பட்டு கிடந்த தாய், மகன் உடல்கள் சீர்காழி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சீர்காழி போலீசார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதைதொடர்ந்து மயிலாடுதுறை எஸ்பி ஸ்ரீநாதா தலைமையிலான தனிப்படை போலீசார் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சல்லடை போட்டு மர்மநபர்களை தேடினர். அப்போது சீர்காழி அருகே எருக்கூரில் இருந்து ஓளையாம்புத்தூர் செல்லும் சாலையின் அருகே வயல் பகுதியில் 3 பேர் பையுடன் நின்று கொண்டிருப்பதாகவும், அவர்கள் வெளிமாநிலத்தவர்களை போல் இருப்பதாகவும் போலீசாருக்கு அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.  

அப்போது வயல் பகுதியில் நின்றிருந்த 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகிபால் (21), மணிஷ் (30), ரமேஷ் (25) என்பது தெரியவந்தது. விசாரணை நடத்தி கொண்டிருந்தபோதே போலீஸ் பிடியில் இருந்து மகிபால் தப்பியோடினான். போலீசார் சுட்டுவிடுவோம் என எச்சரித்தும் கேட்கவில்லை. இதனால் அவனை நோக்கி போலீசார் துப்பாக்கியால் 2 முறை சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மகிபால் சுருண்டு விழுந்து இறந்தான்.

கொள்ளையடித்த நகைகள், பணம் மற்றும் மர்மநபர்கள் வைத்திருந்த 2 கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மணிஷ், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். ராஜஸ்தானை சேர்ந்த 3 வாலிபர்களும் உள்ளூர் நபரின் உதவியோடு இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டனரா, வேறு நபர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சீர்காழியில் அதிகாலையில் நடந்த இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*காரில் ஜிபிஎஸ் கருவி

தன்ராஜ் தனது காரில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தார். இதை 3 பேரும் பார்த்துள்ளனர். இதனால் தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதை போலீசார் அறிந்து கொள்வார்கள் என கருதி 3 பேரும் எருக்கூரில் இருந்து ஓளையாம்புத்தூர் செல்லும் சாலை அருகே காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து வயல்வழியாக தப்பி செல்ல முயன்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: