தனியார் தொழிற்சாலையை மூட உத்தரவு: வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி

புழல்: சோழவரம் ஊராட்சி ஒன்றிய அரங்கத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் ராஜாஜி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ்(பாமக) பேசுகையில், “ஜெகநாதபுரம், மாலிவாக்கம், குதிரைபள்ளம் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் பல தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குதிரைபள்ளம் கிராமத்தில் தனியார் இரும்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் கழிவுநீர் வெளியேறி அருகில் உள்ள கொசஸ்தலை ஆறு மற்றும் விவசாய நிலங்களில் விடுவதால். விவசாயம் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனே அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்” என்று கோரி்க்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த அதிகாரி குலசேகரன், கூட்டம் முடிந்ததும் நேரில் சென்று ஆய்வு செய்யப்படும் என்று பதிலளித்தார். கூட்டம் முடிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ் ஆகியோர் குதிரைபள்ளம் கிராமத்திற்கு சென்று இரும்பு ஆலையை ஆய்வு செய்தனர்.அப்போது, இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் விவசாய நிலம், கொசஸ்தலை ஆற்றில் விடுவது கண்டறியப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. உடனே அதிகாரி குலசேகரன் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார். அவரின் உத்தரவின்பேரில் தற்காலிகமாக தொழிற்சாலை மூடப்பட்டது.

Related Stories: